சென்னை டூ திருச்சிக்கு ரூ.55,000! புயலை காரணம் காட்டி விமான நிறுவனங்கள் கட்டண கொள்ளை
சென்னை: டிட்வா புயல் காரணமாக சென்னையிலிருந்து மதுரை, கோவை, திருச்சி உள்ளிட்ட நகரங்களுக்கு இயக்கப்படும் 54 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. இந்நிலையில், பெங்களூர் வழியாக இயக்கப்படும் விமானங்களில் சென்னை டூ திருச்சிக்கு ரூ.55,636 கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டு இருக்கிறது. இந்த கட்டண உயர்வு பயணிகளுக்கு கடும் அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கிறது.
வங்கக்கடலில் உருவான டிட்வா புயல் தற்போது சென்னையை நோக்கி வந்துக்கொண்டிருக்கிறது. புயல் இலங்கையில் பெரிய சேதங்களை ஏற்படுத்தியிருக்கிறது. 100க்கும் அதிகமான மக்கள் உயிரிழந்திருக்கின்றனர். தற்போது புயல் இலங்கையை கடந்திருக்கிறது.

இது சென்னையை நெருங்குவதற்குள் வலுவிழக்கும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்தாலும், காற்றின் வேகம் மணிக்கு 90 கி.மீ வரை இருக்கும் என்று எச்சரிக்கப்பட்டிருக்கிறது. எனவே, 54 விமானங்கள் ரத்து செய்யப்படுவதாக சென்னை விமான நிலைய நிர்வாகம் அறிவித்திருந்தது. இவை அனைத்தும் திருச்சி, கோவை, சேலம், மதுரை மற்றும் தூத்துக்குடி விமான நிலையங்களுக்கு இயக்கப்படும் உள்நாட்டு விமானங்களாகும்.
குறிப்பாக ஏடிஆர் வகையை சேர்ந்த விமானங்களாகும். இந்த வகை விமானங்கள் 25,000 அடிக்கும் குறைவான உயரத்தில் பறக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டிருக்கின்றன. எனவே புயல் மேகங்களுக்கு நடுவில், காற்றின் தடுமாற்றத்தால் பாதிக்கப்படும் என்பதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக விமானங்கள் ரத்து செய்யப்பட்டிருக்கின்றன.
மற்றபடி பெரிய ஜெட் விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த விமானங்கள் பெங்களூர் வழியாக திருச்சி உள்ளிட்ட நகரங்களுக்கு இயக்கப்படுவதால் கட்டணம் உயர்த்தப்பட்டிருக்கிறது. லீவு நாள் வந்துவிட்டால் போதும் சின்ராசுவை கையில் பிடிக்க முடியாது என்பதை போல, விடுமுறை நாட்களில் கட்டணத்தை உயர்த்துவதே இந்த விமான நிறுவனங்களுக்கு வேலையாக போய்விட்டது.
இன்று சென்னையிலிருந்து மதுரை போக வேண்டும் எனில், ரூ.25,599 கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. இதுவே சாதாரண நாள் கட்டணம் ரூ.3,129 மட்டுமே. அதேபோல சென்னையிலிருந்து திருச்சிக்கு ரூ.55,636 என கட்டணம் நிர்ணயிக்கப்பட்டு இருக்கிறது. சாதாரண நாள் கட்டணம் ரூ.3,129 மட்டுமே. சென்னை-கோவைக்கு ரூ.24,134 கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டு இருக்கிறது. அதுவே, சாதாரண நாட்களில் ரூ.4,351 கட்டணமாக வசூலிக்கப்பட்டு இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications