GBU படத்தின் டைட்டில் கார்டில் வரும் குல்ஷன் குமார் யார் தெரியுமா? 16 ரவுண்டு சுட்டு கொலையான லெஜன்ட்
சென்னை: இந்திய திரையுலக வரலாற்றில் மிகவும் இருண்ட நாளாகக் கருதப்படும் 27 ஆண்டுகளுக்கு முன்பு, பிரபல இசை நிறுவனமான டி-சீரிஸின் (T-Series) தலைவரான குல்ஷன் குமார் (Gulshan Kumar) அவர்கள் மும்பை அந்தேரியில் உள்ள சிவன் கோயிலுக்கு வெளியே கொடூரமாக சுட்டுக் கொல்லப்பட்டார். 16 ரவுண்டுகள் துப்பாக்கியால் சுடப்பட்ட அந்த சம்பவம், திரையுலகை உலுக்கியது.
குட் பேட் அக்லி (Good Bad Ugly) திரைப்படம் காட்டப்படும்போது, முதலில் குல்ஷன் குமார் படத்தை திரையில் காட்டுவதை நீங்கள் பார்த்திருப்பீர்கள். ஏன் இவர் படத்தை காட்டும்போது, ரசிகர்கள் கைதட்டி கொண்டாடுகிறீர்கள் என வியந்திருப்பீர்கள். அதன் பின்னணிதான், குல்ஷன் குமாரின் பின்னணி.

1997ம் ஆண்டு, ஆகஸ்ட் 12ம் தேதி, கோயிலுக்கு போன குல்ஷன் குமாரை மர்ம நபர் ஒருவர் நெற்றியில் துப்பாக்கியை வைத்து சுட்டார். "போதும் பூஜை பண்ணது, இனி மேல போய் பண்ணு" என்று கூறிய பிறகே அந்த நபர் சுட்டதாக கூறப்படுகிறது.
துப்பாக்கிச் சூடு நடந்தவுடன், குல்ஷன் குமார் அலறியடித்து அருகில் இருந்த குடிசைப் பகுதிகளுக்கு உதவி கேட்டு ஓடினார். கதவுகளைத் தட்டி உதவி கோரினார். ஆனால், பயந்துபோன மக்கள் கதவுகளைத் திறந்து பார்க்காமல் உள்ளேயே தாழிட்டுக் கொண்டனர்.
உதவி கேட்டு அலறினார்
உதவி கேட்டு அவர் கதறிய அலறல் சத்தம் அப்பகுதியில் நீண்ட நேரம் கேட்டதாக சாட்சிகள் தெரிவிக்கின்றனர். கழுத்திலும் முதுகிலும் 16 துப்பாக்கி குண்டுகள் பாய்ந்த நிலையிலும் அவர் உயிர்பிழைக்க போராடிய அந்த மணித்துளிகள் மிகவும் வேதனையானவை. பிரபல தாதா அபு சலீம் கூட அந்த அலறல் சத்தத்தை 10 நிமிடங்கள் கேட்டதாக செய்திகள் கூறுகின்றன.

குல்ஷன் குமாரின் ஓட்டுநர் அவருக்கு உதவ முயன்றார், ஆனால் முடியவில்லை. அம்பாள் படம் வரையப்பட்டிருந்த ஒரு சுவரின் அருகே அவர் தனது கடைசி மூச்சை விட்டதை அந்த ஓட்டுநர் கண்ணீருடன் விவரித்தார். பக்தி இசைக்கு ஒரு புதிய பரிணாமத்தை கொடுத்து, வைஷ்ணோ தேவியை ஒரு முக்கிய ஆன்மீக தலமாக மாற்றிய ஒரு மனிதர், அம்பாள் பாதத்தின் அருகே உயிரை துறந்து விண்ணுலகம் சென்றது அப்போது பரபரப்பாக பேசப்பட்டது.
1997 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 12 ஆம் தேதி நடந்த இந்த கொடூர சம்பவம், இந்திய திரையுலக வரலாற்றில் ஒரு கரும்புள்ளியாக என்றைக்கும் நிலைத்திருக்கும். உதவி கேட்டு கதறிய அந்த மணித்துளிகள், யாராலும் மறக்க முடியாத துயரமான நிகழ்வு.
அதேநேரம், நான் வீழ்வேனென்று நினைத்தாயோ என்பதை போல வளர்ந்துவிட்டது குல்ஷன் குமார் குடும்பம். குல்ஷன் குமாருக்குப் பிறகு, டி-சீரிஸின் உரிமையாளராக பூஷன் குமார் ஆனார்.
குல்ஷன் குமாரின் மகனான இவர் தற்போது நிறுவனத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநராகப் பணியாற்றுகிறார் பூஷன் குமார். சொத்து மதிப்பு ரூ. 10,000 கோடியாகும். இப்போது பாலிவுட்டின் மிகப் பெரிய பணக்காரக் குடும்பமங்களில் ஒன்றாக மாறியுள்ளது.
ஒரு காலத்தில் பழங்கள் விற்று குடும்பம் நடத்திய குல்ஷன் குமார் 1983 இல் டி-சீரிஸை நிறுவி குறைந்த விலையில் கேசட்டுகளை விற்பனை செய்து புகழ் பெற்றார். அவர் போட்ட விதை, இப்போது மிகப்பெரும் மரமாக வளர்ந்து நிற்கிறது. டி-சீரிஸ் யூடியூப் அக்கவுண்டில், 250 மில்லியனுக்கும் அதிகமான சந்தாதாரர்கள் உள்ளனர் உலகின் மிகப்பெரிய இசை நிறுவனமாக அது மாறியுள்ளது. இந்நிறுவனம் இந்திய பொழுதுபோக்கு துறையில் ஆதிக்கம் தரவரிசையில் முதலிடம் பிடித்த இசை ஆல்பங்களையும் தயாரித்து வருகிறது.

வழக்கின் பின்னணி:
- ஆகஸ்ட் 30, 1997: இசையமைப்பாளர் இரட்டையர்களான நதீம்-ஷ்ரவனின் நதீம் அக்தர் சைஃபி, குல்ஷன் குமார் கொலை வழக்கில் கூட்டு சதிகாரராக அறிவிக்கப்பட்டார்கள். தனது ஆல்பத்திற்கு குல்ஷன் குமார் உரிய ப்ரமோஷன் செய்து கொடுக்காததால் நதீம் கோபமாக இருந்ததாக கூறப்பட்டது. இருப்பினும், பின்னர் அவர் இந்த வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டார். அவர் அப்போதிருந்து இங்கிலாந்தில் வசித்து வருகிறார்.
- அக்டோபர் 1997: டிப்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் ரமேஷ் டௌரானியும் குற்றத்திற்கு உடந்தையாக இருந்ததாக குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டார். டௌரானி குல்ஷன் குமாரின் கொலைகாரர்களுக்கு 25 லட்சம் ரூபாய் கொடுத்ததாகக் கூறப்பட்டது. ஆனால், நீதிமன்றத்தில் இந்த குற்றச்சாட்டை காவல்துறையால் நிரூபிக்க முடியவில்லை. அந்த நேரத்தில் குல்ஷன் குமாரின் டி-சீரிஸுக்கு டிப்ஸ் கேசட்ஸ் முக்கிய போட்டியாளராக இருந்தது குறிப்பிடத்தக்கது.
- நவம்பர் 1997: காவல்துறை 400 பக்க குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தது. அதில் 26 பேர் குற்றம் சாட்டப்பட்டிருந்தனர். 15 பேர் கைது செய்யப்பட்டனர். குற்றம் சாட்டப்பட்டவர்களில் ஒருவரான முகமது அலி ஷேக் என்பவர் அரசு தரப்பு சாட்சியாக மாறினார். தாவூத் இப்ராஹிமின் சகோதரர் அனீஸின் துபாய் அலுவலகத்தில் குல்ஷன் குமாரை கொலை செய்வதற்கான சதித்திட்டம் தீட்டப்பட்டதாக குற்றப்பத்திரிகையில் கூறப்பட்டிருந்தது.
- ஜனவரி 2001: கொலைக் குற்றவாளிகளில் ஒருவரான அப்துல் ரவூப் என்கிற தாவுத் மெர்ச்சன்ட் கொல்கத்தாவில் கைது செய்யப்பட்டார்.
- ஜூன் 2001: குல்ஷன் குமார் கொலை வழக்கு விசாரணை தொடங்கியது.
- ஏப்ரல் 2002: குற்றம் சாட்டப்பட்ட 26 பேரில் 18 பேர் விடுவிக்கப்பட்டனர். அப்துல் ரவூப் குற்றவாளி என்று கண்டறியப்பட்டு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டார்.
- ஜூலை 1, 2021: பம்பாய் உயர் நீதிமன்றம் அப்துல் ரவூப்பின் தண்டனையை உறுதி செய்தது. கீழமை நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்ட அவரது சகோதரர் ரஷீத் மெர்ச்சன்ட்டுக்கும் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. குற்றம் சாட்டப்பட்ட ரமேஷ் டௌரானியின் விடுதலையை எதிர்த்து மாநில அரசு தாக்கல் செய்த மேல்முறையீட்டை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.












Click it and Unblock the Notifications