குஜராத் வெள்ளத்தில் சிக்கிய 26 பேரும் பத்திரமாக இருக்காங்க.. தமிழகம் வருவது எப்போது? அரசு விளக்கம்
சென்னை: குஜராத்தில் வெள்ளத்தில் சிக்கி மீட்கப்பட்டுள்ள 26 தமிழர்களும் பாவ் நகரில் பத்திரமாக தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு தேவையான மருத்துவ வசதி, தங்குமிடம், உணவுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. மீட்கப்பட்ட 26 தமிழர்களும் வரும் 1ஆம் தேதி சென்னை வந்தடைகின்றனர். அங்கிருந்து அவரவர் சொந்த ஊர்களுக்கு வாகனங்கள் மூலம் அனுப்பி வைக்கப்படுவர் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் இருந்து குஜராத் மாநிலம் பாவ் நகருக்கு பலர் புனித யாத்திரை செல்கிறார்கள். அந்த வகையில் தமிழகத்தில் இருந்து பாவ் நகருக்கு புனித யாத்திரை சென்று திரும்பும் போது, எதிர்பாராதவிதமாக 26 தமிழர்கள் குஜராத்தில் வெள்ளத்தில் சிக்கிக்கொண்டனர். குஜராத் அருகே மலேஸ்ரீ ஆற்றில் ஏற்பட்ட வெள்ளத்தில் தமிழர்கள் சென்ற பஸ் சிக்கிக்கொண்டது. எனினும் தமிழர்கள் 26 பேரும் பத்திரமாக மீட்கப்பட்டனர்.

இதனை தமிழக அரசும் உறுதி செய்தது. இதையடுத்து வெள்ளத்தில் சிக்கி மீட்கப்பட்ட தமிழர்கள் பத்திரமாக உள்ளதாகவும், வரும் 1 ஆம் தேதி சென்னை வந்தடைகிறார்கள் என்றும், அவர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளும் செய்யப்பட்டுள்ளதாகவும் அயலகத் தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வுத்துறை ஆணையரகம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அயலகத் தமிழர் நல ஆணையம் கூறியிருப்பதாவது:-
குஜராத்தின் பாவ்நகருக்கு புனித யாத்திரை சென்று திரும்பும் போது நேற்று முன் தினம் மலேஸ்ரீ ஆற்றில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் அவர்கள் சென்ற பேருந்து சிக்கியது. இச்செய்தி அறிந்த மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்கள், விரைந்து நடவடிக்கை மேற்கொண்டு 26 தமிழர்களையும் தமிழகம் அழைத்து வர அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் உத்தரவின்படி அயலகத் தமிழர் நலத்துறை அதிகாரிகள் குஜராத் மாநில நிருவாகத்துடன் ஒருங்கிணைந்து பாதிக்கப்பட்ட தமிழர்களை மீட்க நடவடிக்கை எடுத்தனர். அதன் விளைவாக 26 தமிழர்களையும், குஜராத் மாநில நிருவாகம் மற்றும் தேசிய பேரிடர் மீட்பு படையினர் பாதுகாப்பாக மீட்டு, அவர்களுக்கு தேவையான மருத்துவ உதவி, தங்குமிடம், உணவு ஏற்பாடு செய்யப்பட்டு பாவ்நகரில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
மீட்கப்பட்ட 26 தமிழர்களும் ரயில் மூலம் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு 01.10.2024 அன்று காலை வந்தடைகின்றனர். சென்னை வந்தடையும் 26 தமிழர்களுக்கும் அயலகத் தமிழர் நலத்துறை சார்பில் வாகன வசதி ஏற்பாடு செய்யப்பட்டு அவர்களது சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்படுவர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications