எடப்பாடி சொன்ன பிரம்மாண்ட கட்சி! அடுத்தடுத்து அழைத்த பாஜக, அதிமுக! கூட்டணிக்கு செல்லும் தவெக விஜய்?
சென்னை: தமிழக வெற்றிக்கழகம் கட்சியை மாறி மாறி அதிமுக, பாஜக இரண்டும் நேரடியாக கூட்டணிக்கு அழைக்க தொடங்கி உள்ளன. இதனால் விஜய் இதில் என்ன முடிவு எடுக்க போகிறார் என்ற கேள்வி எழுந்துள்ளது.
காட்டுமன்னார் கோவில் பகுதியில் எடப்பாடி பழனிசாமி பேசுகையில், விழுப்புரத்தில் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநாடு நடத்த அனுமதி அளிக்கப்படுவதில்லை.. திருச்சியில் விசிக மாநாட்டிற்கு அனுமதி கொடுக்க மறுக்கிறார்கள்.. விசிகவின் கொடிக்கம்பம் நடுவதைத் தடுக்கிறார்கள். இவ்வளவு அசிங்கப்பட்டுமா அந்த கூட்டணியில் இருக்க வேண்டும்?

இந்த அவமானப்பட்டுமா திமுக உடனான கூட்டணியில் தொடர வேண்டும்? சிந்தித்து பாருங்கள்.. அதிமுகவைப் பொறுத்தவரை எங்கள் கூட்டணியில் சேரும் கட்சிகளுக்கு ரத்தன கம்பளம் விரித்து வரவேற்போம். கூட்டணி என்பது சூழ்நிலைக்கு தக்கவாறு அமைப்பது சரியாக இருக்கும்.
அடுத்து பாருங்க.. ஒரு பெரிய கட்சி எங்க கூட்டணிக்கு வரப்போகிறது.. பிரம்மாண்டமான கட்சி.. எதிர்பார்த்துக்கொண்டு இருங்கள்.. வருவதை பாருங்கள்.. ஸ்டாலின் அவர்களே.. பிரமாதமான கட்சி எங்கள் கூட்டணிக்கு வரப்போகிறது. பொறுத்திருந்து பாருங்கள்.. நாங்கள் 234 தொகுதிகளில் 230 தொகுதிகளில் வெல்வோம். அதோடு தனித்து ஆட்சி அமைப்போம் என்று எடப்பாடி பழனிசாமி கூறினார்.
பிரம்மாண்ட கட்சி தவெக
தமிழக வெற்றிக் கழகம் கட்சியை தொடங்கிய விஜய் திமுகவை தீவிரமாக எதிர்த்து வருகிறார். கொள்கை எதிரி பாஜக, அரசியல் எதிரி திமுகவை எதிர்த்து அரசியல் செய்வேன் என்று கூறியவர் விஜய். ஆனால் திமுகவை மட்டுமே விஜய் கடுமையாக எதிர்க்கிறார். மற்றபடி அதிமுக, பாஜக இரண்டையும் எதிர்ப்பது இல்லை.
உதாரணமாக சமீபத்தில் பொள்ளாச்சி பலாத்கார வழக்கில் குற்றவாளிகளுக்கு தீர்ப்பு வழங்கப்பட்டது. இதில் அதிமுக முன்னாள் நிர்வாகியும் தண்டிக்கப்பட்டார். கடந்த 2019 ஆம் ஆண்டு தமிழகத்தையே உலுக்கிய பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் 9 குற்றவாளிகளை கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டிருந்த நிலையில் பாலியல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 9 பேரும் குற்றவாளிகள் தான் என்று கோவை மகளிர் நீதிமன்ற நீதிபதி நந்தினி தேவி தீர்ப்பு வழங்கி உள்ளார். அதோடு பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் 9 குற்றவாளிகளுக்கும் சாகும் வரை சிறை தண்டனை விதித்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.
இதை கண்டித்த விஜய் அதிமுக என்ற பெயரை ஒரு இடத்தில் கூட குறிப்பிடவில்லை. ஆனால் அதே விஜய் நேற்று அண்ணா பல்கலைக்கழக வழக்கில் திமுக பெயரை இழுத்தார். அண்ணா பல்கலை., மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைது செய்யப்பட்ட ஞானசேகரன் குற்றவாளி எனத் தீர்ப்பு வழங்கப்பட்டு உள்ளது. மாணவி புகாரளித்து ஐந்தே மாதங்களில் விசாரணை முடிக்கப்பட்ட நிலையில், சென்னை மகளிர் நீதிமன்ற நீதிபதி ராஜலட்சுமி தீர்ப்பு வழங்கினார்.
இதை பற்றி பேசிய விஜய்.. அண்ணா பல்கலைக்கழக மாணவியைப் பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் தி.மு.க. நிர்வாகியான ஞானசேகரன் குற்றவாளி என்று தீர்ப்பு வழங்கப்பட்டிருப்பதைத் தமிழக வெற்றிக் கழகம் வரவேற்கிறது. இவ்வழக்கில் தமிழ்நாடு அரசின் நிர்வாகத் தோல்வியை மறைப்பதற்காகத் தி.மு.க.வினர் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டனர். இது தொடர்பாக நான் தமிழ்நாடு ஆளுநரைச் சந்தித்து, பாதிக்கப்பட்ட மாணவிக்கு உரிய நீதி கிடைக்க வேண்டும் என்றும், குற்றவாளிக்கு உரிய தண்டனை கிடைக்க வேண்டும் என்றும் கோரிக்கை மனுவை வழங்கினேன் என்றெல்லாம் கூறினார்.
இதில் ஞானசேகரன் திமுக நிர்வாகி அல்ல. அதோடு திமுக அரசு வழக்கை வேகமாக நடத்தியதற்காக நீதிமன்றத்தின் பாராட்டுக்களை பெற்றது. ஆனால் இங்கே விஜய் திமுகவை விமர்சனம் செய்தார்.
அதிமுகவோடு நெருக்கம்
இதன் மூலம் விஜய் அதிமுக - பாஜகவிற்கு நெருக்கம் ஆகி உள்ளார். இரண்டு கட்சிகளும் பேசுவது போல.. விஜயும் பேச தொடங்கி உள்ளார். விமர்சனங்கள் செய்யும் போதெல்லாம் அதிமுக, பாஜக பெயரை தவிர்த்து திமுகவை மட்டுமே விஜய் விமர்சனம் செய்து வருகிறார். இப்படிப்பட்ட நிலையில்தான் தமிழக வெற்றிக்கழகம் கட்சியை மாறி மாறி அதிமுக, பாஜக இரண்டும் நேரடியாக கூட்டணிக்கு அழைக்க தொடங்கி உள்ளன. இதனால் விஜய் இதில் என்ன முடிவு எடுக்க போகிறார் என்ற கேள்வி எழுந்துள்ளது.
அதிமுக முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜு, திமுகவை வீட்டிற்கு அனுப்ப வேண்டும் என்றுதான் அதிமுக தேர்தலை அணுகுகிறது. அதே கருத்துடன் தான் அன்பு சகோதரர் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் இருக்கிறார். சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் கால அவகாசம் இருக்கிறது. அடுத்த ஆண்டு ஜனவரியில்தான் கூட்டணி இறுதிவடிவம் பெறும். அந்த நேரத்தில் ஒத்த கருத்துடைய கட்சிகள் ஒன்றாக சேர்ந்தால் அதில் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை என்று தெரிவித்துள்ளார்.
இன்னொரு பக்கம் தமிழ்நாடு மாநில பாஜக தலைவர் நயினார் நாகேந்திரனும், திமுகவை வீழ்த்த தவெக உட்பட அனைத்து கட்சிகளும் ஒன்றிணைய வேண்டும். விஜய் இணைய வேண்டும் என்ற கடம்பூர் ராஜூவின் கருத்தை வரவேற்கிறேன் என்று தெரிவித்துள்ளார். அதிமுகவை தொடர்ந்து பாஜக தரப்பிலும் விஜய்-ஐ கூட்டணிக்கு வரவேற்று இருப்பது அனைவரையும் திரும்பி பார்க்க வைத்துள்ளது.
இரண்டு கட்சிகளும் விஜய்க்கு அழைப்பு விடுத்துள்ள நிலையில் விஜயின் முடிவு என்ன என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இரண்டு பெரிய கட்சிகள் அழைத்துள்ளன, இதில் விஜய் சேர்ந்தால் வாக்கு சதவிகிதம் அதிகரிக்கும். அதோடு அதிமுக - பாஜக கூட்டணியில் சேர்ந்து ஒருவேளை ஆட்சி அமைந்தால் பவன் கல்யாண் போல விஜய்க்கு பதவிகள் கிடைக்கும். தெலுங்கு படத்தை பார்த்து ரீமேக் செய்யும் விஜய்.. பவன் கல்யாணை பார்த்து.. அதே அரசியல் ஸ்டைலை ரீமேக் செய்ய நினைக்கலாம்.
அதாவது அதிமுக பாஜகவுடன் கூட்டணி வைத்து ஆட்சிக்கு வர வாய்ப்புகள் உள்ளன. இதனால் விஜய் அதிமுக - பாஜக கூட்டணிக்கு டிக் அடிக்க போகிறாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.












Click it and Unblock the Notifications