ரேஷன் கடைகளை இன்று திறக்கணும்! பாமாயில்+ துவரம் பருப்பு வழங்காட்டி ஆக்ஷன்! தமிழக அரசு அதிரடி
சென்னை: தமிழகத்தில் உள்ள ரேஷன் கடைகளில் இன்று அனைத்து அட்டைதாரர்களுக்கும் ரேஷன் பொருட்களை வழங்க வேண்டும் என சுற்றறிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பொதுவாக மாதத்தின் கடைசி நாளில் எந்த பொருட்களும் விநியோகம் செய்யப்படாது. ஆனால் இன்றைய தினம் அனைத்து ரேஷன் கடைகளிலும் அனைத்து பொருட்களையும் கிடைக்கச் செய்ய வேண்டும் என சுற்றறிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து கூட்டுறவுத் துறை உயரதிகாரிகள் வெளியிட்ட சுற்றறிக்கையில் கூறியுள்ளதாவது: அனைத்து ரேஷன் கடைகளையும் நாளை (ஆகஸ்ட் 31) , அதாவது இன்று, திறந்து வைத்து பொதுமக்களுக்கு அத்தியாவசியப் பொருள்களை விநியோகம் செய்ய வேண்டும். கடையைத் திறக்கவில்லை எனில் ரேஷன் கடை விற்பனையாளா் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.

இந்த உத்தரவை கூட்டுறவு சாா்பதிவாளா், முதுநிலை ஆய்வாளா் ஆகியோா் கவனத்தில் கொள்ள வேண்டும். ரேஷன் கடைகள் திறக்கப்பட்டுள்ளதையும், முறையாக செயல்படுவதையும் உறுதி செய்ய வேண்டும். மேலும், சிறப்பு பொது விநியோகத் திட்டத்தின்கீழ் விநியோகிக்கப்படும் துவரம்பருப்பு மற்றும் பாமாயில் உள்ளிட்டவற்றை ரேஷன் கடைகளுக்கு முழுவதும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதா என்பதையும் உறுதி செய்து கொள்ள வேண்டும். இதனை அதிகாரிகள் கண்காணிக்க வேண்டும் என்று சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் 2.21 கோடி ரேஷன் அட்டைகள் உள்ளன. இவற்றில் 1.90 கோடி அட்டைகள் மூலம் அத்தியாவசிய பொருட்களை ரேஷன் கடைகளில் வாங்கி வருகிறார்கள். இந்த ரேஷன் கார்டு மூலம் அரிசி, சர்க்கரை, பாமாயில், கோதுமை, மண்ணெண்ணெய் உள்ளிட்டவை இலவசமாகவும் மானிய விலையிலும் வழங்கப்பட்டு வருகின்றன.
அது போல் தமிழக அரசின் நலத்திட்ட உதவிகளுக்கும் இந்த ரேஷன் கார்டு முக்கிய அம்சமாக திகழ்கிறது. இந்த நிலையில் தமிழகத்தில் ரேஷன் கடைகளில் பாமாயில், துவரம் பருப்பு ஆகியவை தலா ரூ 30- க்கு வழங்கப்பட்டு வருகிறது. கடந்த சில மாதங்களாக இந்த இரு முக்கிய பொருட்களும் கிடைக்கவில்லை என புகார் எழுந்தது.
மே மாதமே முதலே இந்த பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டதாக குற்றம்சாட்டப்பட்டது. மேலும் லோக்சபா தேர்தலால் நடத்தை விதிகள் அமலில் இருந்ததால் பொருட்களை கொள்முதல் செய்யவில்லை என தமிழக அரசு தெரிவித்திருந்தது. இதையடுத்து மே மாதத்திற்கான பொருளை ஜூன் மாதம் வாங்கலாம் என தெரிவித்திருந்தது.
ஆனால் பல ரேஷன் கடைகளில் மக்கள் எதிர்பார்த்த பொருட்களின் இருப்பு இல்லை. இந்த தட்டுப்பாடானது தொடர்ந்து ரேஷன் கடைகளில் இருந்து வருகிறது. இதற்காக டெண்டர் விடப்பட்டுள்ளது. இந்த நிலையில்தான் இன்றைய தினம் ரேஷன் கடைகளை திறக்க வேண்டும். அனைத்து பொருட்களையும் விநியோகம் செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தமிழகத்திற்கு கோதுமையின் அளவை அதிகரிக்கவும், அரிசியின் கொள்முதல் விலையை கிலோ ரூ 20 க்கு வழங்கவும் மத்திய அரசிடம் கோரிக்கைகள் எழுந்துள்ளன. இதன் மூலம் தமிழகத்தில் அரிசியும், கோதுமையும் தங்குத் தடையின்றி கிடைக்கும் என தெரிகிறது. பிரதான் மந்திரி கரிப் கல்யாண் அன்ன யோஜனா (PMGKAY) திட்டத்தின் கீழ் 2024 ஜனவரி 1 முதல் ஐந்து ஆண்டுகளுக்கு சுமார் 81.35 கோடி பயனாளி குடும்பங்களுக்கு இலவச உணவு தானியங்களை வழங்க மத்திய அரசு முடிவு செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications