கூட்டணி குறித்த அறிவிப்பு எப்போது? பிரேமலதா விஜயகாந்த் லேட்டஸ்ட் அப்டேட்!
சென்னை: "பிப்ரவரி மாத மத்தியில் கூட்டணி குறித்து நல்ல முடிவெடுத்து அறிவிப்போம்" என தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் கூறியுள்ளார். "யார் யாருக்கு எந்த தொகுதி என முடிவு செய்து வேட்பாளர்களையும் அறிவிப்போம். கூட்டணி தர்மத்தோடு செயல்பட்டு அத்தனை தொகுதிகளிலும் வெற்றி பெறுவோம்" என்றும் பிரேமலதா தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டசபை தேர்தல் நெருங்கி வரும் நிலையில், அனைத்துக் கட்சிகளும் தீவிரமாக தேர்தல் பணியாற்றி வருகின்றன. முன்னணி கட்சிகளில் ஒன்றான தேமுதிக இன்னும் தங்கள் கூட்டணி நிலைப்பாட்டைத் தெரிவிக்கவில்லை. தேமுதிக எந்த கூட்டணியில் இடம்பெறும் என்ற முடிவு விரைவில் எடுக்கப்படும் என அக்கட்சியின் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் கூறி வருகிறார்.

இந்நிலையில், இன்று விருதுநகரில் செய்தியாளர்களைச் சந்தித்த பிரேமலதா விஜயகாந்த், "பிப்ரவரி முழுவதும் நேரம் இருக்கிறது. நல்ல முடிவு எடுத்து பிப்ரவரி நடுவில் அறிவிப்போம். யார் யாருக்கு எந்தத் தொகுதி? என முடிவு செய்து வேட்பாளர்களையும் அறிவிப்போம். தேமுதிகவிற்கு உரிய இடங்கள் கிடைக்கும். கூட்டணிக் கட்சிகளுடன் தர்மத்தோடு செயல்பட்டு அத்தனை தொகுதிகளிலும் வெற்றி பெறுவோம்" எனத் தெரிவித்துள்ளார்.
முன்னதாக நேற்று கட்சி பிரமுகர் இல்ல விழா ஒன்றில் பேசிய விஜய பிரபாகரன், தேமுதிக யாருடன் கூட்டணி சேர்வார்கள் என்று அனைவரும் ஆர்வத்துடன் எதிர்பார்த்து உள்ளனர். சில கட்சிகள் சில பெல்ட்டை தாண்டி இல்லை, ஆனால், தமிழ்நாடு முழுவதும் தேமுதிக உள்ளது. தமிழகத்தில் திமுகவும் அதிமுக கூட்டணியும் இன்று சரி சமமாக உள்ளது. அதற்கு இணையாக ஜாதி, மதம் இல்லாத மூன்றாவது பெரிய கட்சியாக தேமுதிக உள்ளது. தேமுதிக எந்த கூட்டணிக்கு செல்கிறதோ அந்த கூட்டணி தான் ஜெயிக்கும். கடந்த சட்டமன்ற தேர்தலில் 500 முதல் 3,000 வாக்குகள் இடையே 60 தொகுதிகளில் அதிமுக தோல்வியை தழுவியது. திமுக வெற்றி அடைந்தது.
தேமுதிகவிற்கு தமிழ்நாடு முழுவதும் ஒவ்வொரு சட்டமன்ற தொகுதிகளிலும் 10 முதல் 15 ஆயிரம் வாக்குகள் உள்ளன. வரும் சட்டமன்ற தேர்தலில் 170 இடங்களில் திமுக, அதிமுக நிற்க வேண்டும் என நினைப்பது போல, தேமுதிகவில் உள்ள 20 முன்னாள் எம்.எல்.ஏக்களின் எதிர்காலத்தை பார்க்க வேண்டும். உங்கள் கட்சியை மட்டும் பார்க்காதீர்கள். உங்களை ஆட்சியில் அமர்த்துவதற்குத்தான் அந்த 20 தொகுதிகளை நாங்கள் கேட்கிறோம். கூட்டணியில் இடங்களை கேட்பது எங்களது உரிமை, கூடுதல் சீட்கள் தருவது உங்களது கடமை, தேமுதிக முதலமைச்சர் ஆக கேட்கவில்லை, உங்களை முதலமைச்சராக்க நாங்கள் கேட்கிறோம் எனப் பேசினார்.












Click it and Unblock the Notifications