இருக்கிற கூட்டணி பிரியலாம்.. அதிமுக கடம்பூர் ராஜூ பேச்சால் பரபரப்பு.. பாஜகவிற்கு கல்தாவா?
சென்னை: அதிமுக பாஜக கூட்டணி அமந்துள்ள நிலையில், இன்று செய்தியாளர்களை சந்தித்த அதிமுக முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ, 'இருக்கின்ற கூட்டணி கூட பிரியலாம்' என்று பேசியிருப்பது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அதிமுக முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ நிகழ்ச்சி ஒன்றில் பேசுகையில், கடைசி நேரத்தில் கூட்டணி மாறலாம் என்று பேசியிருப்பது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாஜகவுடனான கூட்டணியில் இருந்து வெளியேறவும் வாய்ப்பு உள்ளது என்பதைத்தான் கடம்பூர் ராஜூ இவ்வாறு சூசகமாக சொல்கிறாரா? என்று விவாதங்களுக்கு அவரது பேச்சு வித்திட்டுள்ளது. கடம்பூர் ராஜூ பேசியதன் விவரம் வருமாறு:-

மக்களை மட்டுமே நம்பியுள்ள இயக்கம்
முதன் முதலில் தேர்தல் களத்துக்கு வந்த இயக்கம் அதிமுக தான். ஏன் என்று சொன்னால், வேறு எந்த தலைவர்களும், கூட்டணிகளை பற்றி கவலைப்படுகின்ற கட்சிகளின் மத்தியில் மக்களை மட்டுமே நம்பி தேர்தல் களத்துக்கு வந்தவர் எங்களுடைய பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தான்.
ஜூலை மாதம் 7 ஆம் தேதி தொடங்கி இன்று 154-வது தொகுதியாக நீலகிரி குன்னூர் தொகுதியில் பிரச்சாரத்தை நிறைவு செய்துள்ளார். இது எதை காட்டுகிறது என்றால், மக்கள் மீதான நம்பிக்கை அதிமுகவிற்கு மட்டும் தான் உண்டு. கூட்டணி என்பது தேர்தல் நேரத்தில் அமையும். இன்னும் கால நேரம் இருக்கிறது.
இருக்கின்ற கூட்டணி பிரியலாம்
கடைசி நேரத்தில் கூட கூட்டணிக்கு வரலாம்.. சேரலாம். இருக்கின்ற கூட்டணி கூட பிரியலாம். ஆனால் எப்போதும் மக்களை மட்டுமே நம்பி தேர்தல் களத்திற்கு வருகின்ற இயக்கம் அதிமுக என்பதை தெரிவித்துக்கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறினார். இருக்கிற கூட்டணி கூட பிரியலாம் என்று அவர் பேசியது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த லோக்சபா தேர்தலின் போது பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து விலகிய அதிமுக, சட்டமன்ற தேர்தலுக்கு மீண்டும் பாஜகவுடன் கூட்டணி அமைத்துள்ளது. பாஜக தலைவராக அண்ணாமலை அதிமுகவின் மறைந்த தலைவர்களான எம்.ஜி.ஆர், ஜெயலலிதா பற்றி விமர்சித்தது உள்ளிட்ட காரணங்களால் பாஜக கூட்டணிக்கு முழுக்கு போடுவதாக அறிவித்த அதிமுக, லோக்சபா தேர்தலில் தோல்வி அடைந்தது.
அதிமுக - தவெக கூட்டணிக்கு வாய்ப்பு?
இந்த சூழலில்தான், திடீர் திருப்பமாக அதிமுக - பாஜக கூட்டணி மீண்டும் கடந்த ஏப்ரல் மாதம் அமைந்தது. சட்டமன்ற தேர்தலுக்கு முன்பாக மெகா கூட்டணியை அதிமுக அமைக்கும் என்று எடப்பாடி பழனிசாமி பேசி வருகிறார். பாஜகவுடன் கூட்டணி அமைத்தாலும் அதிமுக தனது அடிப்படை கொள்கையில் இருந்து ஒருபோதும் அடிபிறழாது என்று அதிமுக கூறி வருகிறது.
அதிமுக- பாஜக கூட்டணியில் இருந்து டிடிவி தினகரன், ஓபன்னீர் செல்வம் உள்ளிட்டோர் விலகியுள்ள நிலையில், அவர்களையும் கூட்டணிக்கு சேர்க்க தீவிர முயற்சியில் பாஜக ஈடுபட்டு வருவதாக சொல்லப்படுகிறது. இதற்கிடையே, அதிமுக - தவெக கூட்டணி அமையலாம் என்று அவ்வப்போது அரசியல் வட்டாரத்தில் பேச்சு எழுந்து வருகிறது.
பாஜகவுக்கு சொல்லும் மெசேஜ்
பாஜகவுடன் கூட்டணியில் அதிமுக உள்ள நிலையில், அது சாத்தியமே இல்லை என தவெக வட்டாரங்கள் கூறும் நிலையில், அரசியலில் எதுவும் நடக்கலாம் என்பதே அரசியல் விமர்சகர்களின் கருத்தாக உள்ளது. இந்த சூழலில்தான் அதிமுக முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூவின் இந்த பேச்சு மிகுந்த முக்கியத்துவம் பெற்றுளது.
அதிமுக உள்விவகாரங்களில் தலையிட்டால் கூட்டணியில் இருந்து விலகவும் தயங்க மாட்டோம் என்று பாஜகவிற்கு சொல்லும் மெசேஜ் ஆக கடம்பூர் ராஜுவின் பேச்சு அமைந்ததா? என்பது குறித்து அரசியல் விமர்சகர்கள் சந்தேகம் கிளப்பியுள்ளனர். எது எப்படியோ கடம்பூர் ராஜூவின் இந்த பேச்சு, அதிமுக - பாஜக கூட்டணி விவகாரத்தில் பரபரப்பை கிளப்பியுள்ளது.












Click it and Unblock the Notifications