அமைச்சரவை அதிரடி மாற்றம்! முப்பெரும் துறை அமைச்சரான உதயநிதி ஸ்டாலின்! என்னென்ன துறைகள் தெரியுமா?
சென்னை : திமுக தலைவர் ஸ்டாலினின் மகனும் சேப்பாக்கம் திருவல்லிக்கேணி சட்டமன்ற தொகுதி உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலின் இன்று இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சராக பொறுப்பேற்றுக் கொண்ட நிலையில் அமைச்சரவை மாற்றப்பட்டு அவருக்கு கூடுதலாக சில துறைகள் ஒதுக்கப்பட்டிருக்கிறது..
நடிகர், தயாரிப்பாளர், திமுக இளைஞரணி செயலாளர், சேப்பாக்கம் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் உள்ளிட்ட பல்வேறு முகங்களை கொண்ட முதல்வர் ஸ்டாலினின் மகனான உதயநிதி ஸ்டாலின் இன்று அமைச்சராக பொறுப்பேற்று இருக்கிறார்.
சென்னை ஆளுநர் மாளிகையில் அவருக்கு இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் ஆளுநர் ஆர் என் ரவி அமைச்சராக பதவி பிரமாணம் செய்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் தமிழக முதல்வர் ஸ்டாலின் அமைச்சர்கள் திமுகவினர் உதயநிதியின் உறவினர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

உதயநிதி ஸ்டாலின்
அமைச்சராக பதவி ஏற்று கொண்ட சிறிது நேரத்திலேயே உதயநிதிக்கு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை ஒதுக்கப்பட்டு இருந்தது. உதயநிதிக்கு அமைச்சர் பொறுப்பு வழங்கப்பட்டதற்கு பிறகு தமிழக அமைச்சரவையில் மாற்றம் இருக்கும் எனக் கூறப்பட்டது. செயல்பாடுகள் அடிப்படையிலும், ஏற்கனவே சில சீனியர் அமைச்சர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட துறைகளால் அதிருப்தியில் இருந்த நிலையில் துறைகள் மாற்றம் செய்யப்படலாம் என எதிர்பார்ப்பு இருந்தது.

ஐ.பெரியசாமி
கூட்டுறவு துறை தனக்கு ஒதுக்கப்பட்டதால் மிகவும் அதிருப்தியில் இருந்த திண்டுக்கல்லை சேர்ந்த அமைச்சர் ஐ.பெரியசாமிக்கு வருவாய் துறை ஒதுக்கீடு செய்யப்படும் என எதிர்பார்க்கப்பட்டது ஆனால் தற்போது வருவாய்த்துறை அமைச்சராக இருக்கும் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் அதற்கு எதிர்ப்பு தெரிவித்த நிலையில் பெரிய கருப்பனின் துறையை ஒதுக்கீடு செய்ய முதல்வர் ஸ்டாலின் முடிவெடுத்து இருப்பதாக யூகங்கள் பரவியது. சொன்னது போலவே அதுபோன்ற மாற்றம் தான் தற்போது நிகழ்ந்திருக்கிறது.

அமைச்சரவை மாற்றம்
தமிழக கூட்டுறவுத்துறை அமைச்சராக இருந்த ஐ பெரியசாமி தமிழக ஊரக வளர்ச்சி துறை அமைச்சராகவும் ஊரக வளர்ச்சித்துறை அமைச்சராக இருந்த பெரிய கருப்பனுக்கு கூட்டுறவு துறையும் ஒதுக்கீடு செய்யப்பட்டு இருக்கிறது. ஐ பெரியசாமியின் வசம் இருந்த புள்ளியில் துறை நிதி அமைச்சர் பி டி ஆர் பழனிவேல் தியாகராஜனுக்கு கூடுதலாக ஒதுக்கீடு செய்யப்பட்டு இருக்கிறது அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபுவுக்கு அமைச்சர் முத்துசாமி வசம் இருந்த சிஎம்டிஏ துறை கூடுதலாக ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கிறது இதேபோல பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சராக இருக்கும் ராஜா கண்ணப்பனுக்கு கதர் மற்றும் கிராம தொழில் வாரியம் உள்ளிட்ட துறைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு இருக்கின்றன.

முப்பெரும் துறை அமைச்சர்
இன்று புதிதாக அமைச்சராக பொறுப்பேற்ற உதயநிதி ஸ்டாலினுக்கு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை ஒதுக்கப்பட்டதோடு கூடுதல் பொறுப்புகளும் வழங்கப்பட்டிருக்கிறது. அந்த வகையில் சிறப்பு திட்டங்கள் செயலாக்கத்துறை, வறுமை ஒழிப்பு திட்டங்கள் மற்றும் ஊரக கடன்கள் துறையும் உதயநிதிக்கு கூடுதலாக ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கிறது. இதன் மூலம் முதல்வரின் நான் முதல்வன் உள்ளிட்ட துறைகளிலும் உதயநிதி கவனம் செலுத்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இது மட்டுமல்லாமல் தமிழக அரசின் புதிய திட்டங்கள் கொண்டுவரப்படும் போது அந்தத் திட்டங்களை கண்காணிப்பை மேற்கொள்ளும் அமைச்சராகவும் உதயநிதி இருப்பார் இதன் மூலம் உதயநிதி ஸ்டாலின் முப்பெரும் துறை அமைச்சராகி இருக்கிறார்.












Click it and Unblock the Notifications