விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தாராளம்! இலங்கை மக்களுக்கு உதவ எம்.எல்.ஏ.க்களின் 1 மாத ஊதியம்!
சென்னை: இலங்கை மக்களுக்கு உதவும் வகையில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சட்டமன்ற உறுப்பினர்களின் ஒரு மாத ஊதியம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Recommended Video
இலங்கைக்கு தமிழகத்திலிருந்து 40 ஆயிரம் டன் அரிசி, 137 வகையான மருந்துகள் அனுப்பி வைக்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் முன்மொழிந்த தீர்மானத்தை வழிமொழிந்து பேசிய விசிக எம்.எல்.ஏ. ஆளூர் ஷா நவாஸ் இதனை தெரிவித்தார்.
இலங்கை மக்களுக்கு உதவ எதிர்க்கட்சித் துணைத்தலைவர் ஓ.பன்னீர்செல்வம் தனது குடும்பத்தின் சார்பில் ரூ.50 லட்சம் வழங்கப்படும் என அறிவித்ததை தொடர்ந்து விசிகவும் தாராளம் காட்டியிருக்கிறது.

சட்டசபையில்
தமிழக சட்டசபையில் இன்று பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சி எம்.எல்.ஏ. ஆளுர் ஷா நவாஸ், 2009-ல் ஈழமக்கள் மீது இனப்படுகொலை நிகழ்ந்த போது அதை உலகமே வேடிக்கை மட்டுமே பார்த்ததாகவும் அங்குள்ள மக்கள் என்ன நிலையில் இருக்கிறார்கள் என்பதை அறிய ஊடகவியலாளர்கள் உட்பட யாரும் செல்ல முடியாத நிலை இருந்ததாகவும் தெரிவித்தார். ஆனால் அப்படிப்பட்ட சூழலிலும், தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவை கருணாநிதி இலங்கைக்கு அனுப்பி வைத்து அங்குள்ள மக்களின் நிலையை வெளி உலகுக்கு சொல்ல வைத்ததாக கூறினார்.

ஒரு மாத ஊதியம்
கருணாநிதியின் வழித்தடத்தில் பயணிக்கும் முதலமைச்சர் ஸ்டாலின், தமிழ் மக்களுக்கு மட்டுமல்லாமல் யாராக இருந்தாலும் உதவுவோம் என்கிற வகையில் நிவாரணப் பொருட்களை அனுப்புவதற்கான முயற்சியில் இறங்கியிருப்பதாகவும் இதனை விடுதலை சிறுத்தைகள் கட்சி வரவேற்பதாகவும் தெரிவித்தார். மேலும், இலங்கை மக்களுக்கு உதவும் வகையில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சட்டமன்ற உறுப்பினர்களின் ஒரு மாத ஊதியம் வழங்கப்படும் என்ற அறிவிப்பையும் ஆளுர் ஷா நவாஸ் வெளியிட்டார்.

அரிசி மட்டுமல்ல
தமிழகத்தில் இருந்து இலங்கைக்கு முதலமைச்சர் ஸ்டாலின் அனுப்புவது அரிசியை மட்டுமல்ல பன்முகத்தன்மையையும், மனிதநேயத்தையும், சேர்த்து அனுப்பி திராவிட மாடல் ஆட்சியை உணர வைத்திருப்பதாக பெருமிதம் தெரிவித்தார். விசிக தலைவர் திருமாவளவன் வழிகாட்டுதல் படியே இலங்கை மக்களுக்கு உதவ தங்கள் கட்சி எம்.எல்.ஏ.க்கள் 4 பேரின் ஒரு மாத ஊதியம் கொடுக்கப்படுவதாக கூறினார்.

யார் யார்?
விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் 4 பேர் சட்டமன்ற உறுப்பினர்களாக இருக்கிறார்கள். ஆளுர் ஷானவாஸ், பனையூர் பாபு, பாலாஜி, சிந்தனைச்செல்வன் ஆகிய 4 பேர் சார்பில் தலா ஒரு லட்சத்து 5 ஆயிரம் வீதம் மொத்தம் 4 லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் இலங்கை மக்களுக்காக கொடுக்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications