“ஐபிஎஸ்”.. அரசியல் கேள்விக்கு விஷால் அளித்த பதில்.. பயங்கர சத்தம்.. அப்புறம் சமாளிச்சாரு பாருங்க!
சென்னை: 'ரத்னம்' பட இசை வெளியீட்டு விழாவில் மாணவர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்தார் நடிகர் விஷால். அப்போது, "ஓபிஎஸ்ஸா? ஈபிஎஸ்ஸா?" என ஒரு கேள்வி வர, "ஐபிஎஸ்" என பதில் அளித்தார் விஷால். இது சமூக வலைதளங்களில் விவாதமாகியுள்ளது.
ஹரி இயக்கத்தில் மூன்றாவது முறையாக நடிகர் விஷால் இணைந்துள்ளார். விஷாலின் 34வது படத்திற்கு 'ரத்னம்' என டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தின் படப்பிடிப்பு பணிகள் முடிவடைந்துள்ள நிலையில், தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகின்றன. இப்படத்திற்கு தேவிஸ்ரீ பிரசாத் இசையமைத்து உள்ளார். கார்த்திக் சுப்புராஜ் தயாரித்துள்ள இந்தப் படத்தில், நடிகை பிரியா பவானி ஷங்கர், யோகி பாபு, சமுத்திரக்கனி, கௌதம் மேனன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

கேள்விகளுக்கு விஷால் பதில்: விஷாலின் 'ரத்னம்' திரைப்படம் ஏப்ரல் 26 ஆம் தேதி வெளியாக உள்ளது. இப்படத்தின் இசை வெளியீட்டு விழா தனியார் கல்லூரியில் நடைபெற்றது. இந்த நிகழ்வின்போது, மாணவர்கள் எழுப்பிய பல்வேறு கேள்விகளுக்கு விஷால் பதில் அளித்தார். அப்போது, அரசியல் தொடர்பாகவும் கேள்விகள் வந்த நிலையில், அவற்றிற்கும் விஷால் ஆர்வமாக பதில் அளித்தார்.
ஓபிஎஸ்ஸா? ஈபிஎஸ்ஸா? - ஐபிஎஸ் : மாணவர் ஒருவர், "ஈபிஎஸ்ஸா? ஓபிஎஸ்ஸா?" எனக் கேள்வி எழுப்ப, அதற்கு முதலில் திகைத்த நடிகர் விஷால் சட்டென, "ஐபிஎஸ்" என பதில் அளித்தார். விஷால் அப்படிச் சொன்னதும் அரங்கமே அதிர்ந்தது. பின்னர் தொடர்ந்த விஷால், "நான் வணங்கும் அந்த ஐபிஎஸ்ஸுக்கு சல்யூட்" என்றார்.
மேலும், “என் நண்பன் பெயரும் ஐ.பி.செந்தில்குமார். அவரது மனைவி மெர்சி எனக்கு தங்கை மாதிரி. அதனால் ஐபிஎஸ் தான்" எனத் தெரிவித்தார். விஷால் ஐபிஎஸ் என முதலில் சொன்னது, பாஜக மாநில தலைவர் அண்ணாமலை குறித்தா? அல்லது திமுக எம்.எல்.ஏ ஐபி செந்தில் குமார் பற்றித்தானா என சமூக வலைதளத்தில் சூடான விவாதம் நடந்து வருகிறது. அட, விஷால் நம்ம ஆளா என பாஜகவினர் கமெண்ட் அடித்து வருகின்றனர்.
ஐ.பி.எஸ் @ ஐபி செந்தில் குமார்: ஐ.பி.செந்தில் குமார், திமுக துணைப் பொதுச் செயலாளரும் மூத்த அமைச்சருமான ஐ.பெரியசாமியின் மகன். ஐபி செந்தில் குமார் கடந்த 2016 முதல் பழனி சட்டமன்றத் தொகுதியின் எம்.எல்.ஏவாக இருந்து வருகிறார். திமுக திண்டுக்கல் கிழக்கு மாவட்ட செயலாளராகவும் பொறுப்பு வகித்து வருகிறார்.

முன்னதாக, திமுக இளைஞரணியின் மாநில துணைச் செயலாளராகவும் ஐபி செந்தில் குமார் பொறுப்பு வகித்துள்ளார். உதயநிதி ஸ்டாலினுக்கு நெருக்கமான ஐபி செந்தில் குமார், நடிகர் விஷாலுக்கும் நெருங்கிய நண்பர். இருவரும் ஒருமையில் பேசிக் கொள்ளும் அளவுக்கு நெருக்கமானவர்கள். ஐபி செந்தில் குமாரை, திண்டுக்கல் மாவட்ட திமுகவினரும், அவரது நண்பர்களும் ஐபிஎஸ் என்றே அழைப்பது வழக்கம்.
விஷால் அரசியல்: விஷாலின் அரசியல் ஆர்வம் அனைவரும் அறிந்ததே. சென்னை ஆர்.கே. நகர் சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட விரும்பினார். ஆனால் அவரது வேட்புமனுவில் தவறு இருப்பதாக கூறி அவரது வேட்பு மனு தள்ளுபடி செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து, பல்வேறு தருணங்களில் தனது அரசியல் விருப்பத்தை வெளிப்படுத்தியுள்ளார் விஷால்.
அண்மையில் விஷால் அரசியல் கட்சி தொடங்கப்போவதாக தகவல்கள் பரவிய நிலையில் விஷால் ஒரு அறிவிப்பை வெளியிட்டார். அதில், "என்னால் முடிந்த உதவிகளை செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் ஆரம்ப காலத்தில் இருந்தே என்னுடைய ரசிகர் மன்றத்தை ஒரு சராசரி மன்றமாய் கருதாமல் மக்களுக்கு நன்மை செய்ய வேண்டும் என எண்ணினேன்.
அடுத்த கட்டமாக மக்களின் முன்னேற்றத்திற்காக மக்கள் நல இயக்கத்தை உருவாக்கி மாவட்டம், தொகுதி, கிளை வாரியாக மக்கள் பணி செய்வோம். நான் எப்போதும் அரசியல் ஆதாயத்தை எதிர்பார்த்து மக்கள் பணி செய்தது இல்லை. நன்றி மறப்பது நன்றன்று என்ற வள்ளுவனின் வாக்குப்படி என்னால் முடிந்த உதவிகளை நான் செய்துக் கொண்டே தான் இருப்பேன். வரும் காலகட்டத்தில் இயற்கை வேறு ஏதேனும் முடிவு எடுக்க வைத்தால் அப்போதும் மக்களுக்காக மக்களின் ஒருவனாக குரல் கொடுக்க தயங்க மாட்டேன்." எனக் கூறி இருந்தது குறிப்பிடத்தக்கது.
சாப்பிடும் முன்பு சாமி கும்பிடுவது ஏன்?: ஐபிஎஸ் என்று பதில் சொன்ன நடிகர் விஷால் தொடர்ந்து பல்வேறு கேள்விகளுக்கும் பதில் அளித்தார். அப்போது ஒரு மாணவர், நீங்கள் சாப்பிடுவதற்கு முன் மூன்று மத கடவுள்களையும் வணங்கியது இணையத்தில் மிகப்பெரிய அளவில் ட்ரோல் செய்யப்பட்டது குறித்து கேள்வி எழுப்பினார்.
அதற்கு பதில் அளித்த விஷால், "எனது கழுத்தில் இந்து, முஸ்லிம் என அனைத்து மதத்தின் கயிறும் உள்ளது. இப்போது என்றில்லை.. கடந்த பத்து வருடங்களாகவே சாப்பிடுவதற்கு முன் இதைத்தான் செய்து வருகிறேன். அனைத்து கடவுளும் எனக்கு ஒன்று தான் என்பதால் அதை நான் செய்து வருகிறேன். இதை நான் பிரபலமாக வேண்டும் என்பதற்காக செய்யவில்லை.
எல்லாருமே என் சாமிகள் இந்த இடத்தில் நிற்பதற்கு காரணம் இத்தனை சாமிகள் தான், நான் சாப்பிடும் சாப்பாடு, போடும் துணி, ஷூ என அனைத்தையும் இந்த சாமிகள் எனக்கு கொடுத்து இந்த இடத்தில் என்னை நிற்க வைத்து அழகு பார்க்கிறார்கள். இதனால், நான் சாப்பிட்டதை ட்ரோல் செய்பவர்கள் பற்றி நான் ஏன் கவலைப்பட வேண்டும் அதற்கு எதற்கு விளக்கம் கொடுக்க வேண்டும்" என்று விஷால் கூறினார்.












Click it and Unblock the Notifications