பாஜகவும் திமுகவும் ஒன்னு.. டெல்லிக்கு அதிர்ச்சி கொடுத்த அமர் பிரசாத் ரெட்டி! அண்ணாமலையுடன் ஐக்கியம்
சென்னை: தமிழக பாஜகவில் முக்கிய நிர்வாகியாக இருந்து வந்த அமர் பிரசாத் ரெட்டி, கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்திருப்பது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாஜக இளைஞர் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு பிரிவு தலைவராக செயல்பட்டு வந்த அவர், இனி அண்ணாமலை தொடங்கியுள்ள புதிய அரசியல் இயக்கத்தில் பயணிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தமிழக பாஜக முன்னாள் தலைவரான அண்ணாமலை, சமீபத்தில் பாஜகவில் இருந்து விலகி தனது புதிய அரசியல் இயக்கமான "இது நம்ம இயக்கம்" என்ற அமைப்பை தொடங்கினார். தொடர்ந்து அதில் இணைவதற்கான இணையதளத்தையும் அறிவித்துள்ளார்.
இளைஞர்களை அரசியலுக்கு கொண்டு வருவது, மாற்று அரசியல் கலாச்சாரத்தை உருவாக்குவது மற்றும் அறம் சார்ந்த அரசியலை முன்னெடுப்பது ஆகிய நோக்கங்களுடன் இந்த இயக்கம் செயல்பட்டு வருகிறது. அண்ணாமலையின் புதிய இயக்கம் தொடங்கப்பட்ட சில நாட்களிலேயே தமிழகம் முழுவதும் பிரபலமானது.

அண்ணாமலை
இணையதளம் மற்றும் செயலி மூலமாக உறுப்பினர் சேர்க்கை தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த நிர்வாகிகள், சமூக ஆர்வலர்கள் மற்றும் இளைஞர்கள் இதில் இணைந்து வருகின்றனர். அந்த இயக்கத்தின் நிர்வாகிகள் தரப்பில் வெளியிடப்பட்ட தகவலின்படி, தற்போது வரை 17 லட்சத்து 27 ஆயிரத்து 864 பேர் உறுப்பினர்களாக இணைந்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால் தமிழக அரசியலில் புதிய அரசியல் சக்தியாக இந்த இயக்கம் உருவெடுக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
அமர் பிரசாத் ரெட்டி
இந்த சூழலில் பாஜகவில் இருந்து விலகிய அமர் பிரசாத் ரெட்டி, கட்சியின் செயல்பாடுகள் குறித்து கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளார். அவர் கூறுகையில், "ஒரு குடும்பத்தின் கட்டுப்பாட்டில் திமுக செயல்படுகிறது என்று பாஜக தொடர்ந்து விமர்சித்து வருகிறது. ஆனால் தமிழக பாஜகவும் நான்கு அல்லது ஐந்து பேரின் கட்டுப்பாட்டில்தான் உள்ளது. தேர்தலில் தோல்வி அடைந்தாலும் அதே நபர்களே மீண்டும் மீண்டும் போட்டியிட வேண்டும் என்று நினைக்கிறார்கள்" என குற்றம்சாட்டியுள்ளார்.
பாஜக
அவரது இந்த கருத்து தமிழக பாஜக வட்டாரத்தில் புதிய விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே பாஜகவின் பல முன்னணி மற்றும் இரண்டாம் கட்ட நிர்வாகிகள் அண்ணாமலையின் புதிய இயக்கத்தில் இணைந்து வருவதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. அந்த வரிசையில் அமர் பிரசாத் ரெட்டியின் விலகல், அண்ணாமலை அணிக்கு மேலும் வலுசேர்க்கும் நிகழ்வாக பார்க்கப்படுகிறது.
2026 சட்டப்பேரவைத் தேர்தல்
குறிப்பாக, இளைஞர் பிரிவில் செல்வாக்கு கொண்ட தலைவராக கருதப்படும் அமர் பிரசாத் ரெட்டி, அண்ணாமலையின் அரசியல் முயற்சியில் இணைவது, இளைஞர்களை ஈர்க்கும் முயற்சிக்கு கூடுதல் பலம் தரும் என அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர். 2026 சட்டப்பேரவைத் தேர்தலுக்குப் பிறகு தமிழக அரசியல் களம் தொடர்ந்து மாற்றங்களை சந்தித்து வருகிறது. ஒருபுறம் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் ஆட்சியில் இருக்கும் நிலையில், மறுபுறம் அண்ணாமலையின் புதிய இயக்கம் வேகமாக உறுப்பினர்களை சேர்த்து வரும் நிலையில், அமர் பிரசாத் ரெட்டியும் சேர்ந்திருப்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications