தமிழகத்திற்கு தேவை அரசியலில் மாற்றம்.. ஊழலை ஏற்க மாட்டோம்.. யாரை சொல்கிறார் அமர் பிரசாத் ரெட்டி
தமிழகத்திற்கு அரசியலில் மாற்றம் தேவை என அமர்பிரசாத் ரெட்டி கருத்து
சென்னை: தமிழகத்திற்கு தேவை ஆட்சி மாற்றம் அல்ல, அரசியலில் மாற்றம். ஒரு நாளும் ஊழலை ஏற்றுக் கொள்ளவே முடியாது என பாஜக நிர்வாகி அமர்பிரசாத் ரெட்டி ஒரு ட்வீட்டை போட்டுள்ளார்.
அண்ணாமலையின் தீவிர விசுவாசியாக இருப்பவர் அமர்பிரசாத் ரெட்டி. தமிழகத்தில் பாஜக ஆட்சிக்கு வர வேண்டும் என்பதை காட்டிலும் அண்ணாமலை முதல்வராக வர வேண்டும் என விரும்புபவர்.
இந்த நிலையில் கடந்த சில நாட்களாக அதிமுக- பாஜக கூட்டணியில் உரசல் ஏற்பட அமர்பிரசாத் ரெட்டியும் ஒரு காரணம் என சொல்லப்படுகிறது. அதாவது நிர்மல் குமார் விலகின் போது இவர் கூறிய கருத்து கூட்டணிக்குள் அதிர்வலையை ஏற்படுத்தியது.

நிர்மல் குமார்
பாஜகவிலிருந்து விலகி அதிமுகவில் இணைந்த நிர்மல் குமார் கூறுகையில் பல சங்கடங்களைக் கடந்து கடந்த ஒன்றரை ஆண்டுகளாக கட்சியில் பயணித்தேன். உண்மையாக நேர்மையாக உழைத்தேன், வேதனை மட்டுமே மிச்சம் என கூறி அண்ணாமலை மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன் வைத்தார். மேலும் அண்ணாமலை சொந்த கட்சியினரையே வேவு பார்க்கிறார் என்றெல்லாம் விமர்சித்தார்.

தமிழக பாஜக நிர்வாகிகள்
இந்த நிலையில் இவரை தொடர்ந்து தமிழக பாஜக தகவல் தொழில்நுட்ப அணி மாநில செயலாளராக இருந்த திலீப் கண்ணன், நிர்வாகி அம்மு உள்ளிட்ட 20 க்கும் மேற்பட்டோர் அதிமுகவில் இணைந்தனர். இந்த நிலையில் இதுகுறித்து அமர்பிரசாத் ரெட்டி தனது ட்விட்டரில் கண்டித்து ட்வீட் போட்டியிருந்தார். அதில்
அதிமுக கூட்டணி கட்சியாக இருந்துக் கொண்டு இதை செய்திருக்க கூடாது. ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலில் ஜனநாயக மரபுகளை காலில் போட்டு மிதித்து, முழுமையாக மக்களை விலை கொடுத்து வாங்கிய இரு பெரும் திராவிட இயக்கங்கள், ஜனநாயகம் குறித்து வாய் கிழிய பேசலாமா?

420 களாக வலம் வந்தவர்கள்
இனி, அந்தச் சொல்லை இரு கட்சியினரும் பயன்படுத்தாமல் இருப்பதே அச்சொல்லுக்கான மரியாதை! நாலாண்டு காலம் 420களாக வலம் வந்தவர்கள் கதையெல்லாம் ஊரறிந்த விவகாரம். அப்படி இருக்கையில், கொள்கையற்ற கட்சி மாறி- பிழைப்புவாதிகளை வைத்து, அடுத்தவரை கேவலப்படுத்தி ரசிக்கும் கேவலமானவர்கள் தலைமைப் பொறுப்புக்குத் தகுதியானவரா?

கொங்கு மண்டலம்
கொங்கு மண்டலம் தங்களது கோட்டை என சொல்லிக் கொண்ட அதிமுகவினருக்கு வாக்காளர்கள் தக்க பாடத்தை புகட்டியுள்ளனர். 66000 வித்தியாசத்தில் தோற்றது மீள்வதற்கான அறிகுறி இல்லை. கோட்டையை பிடிப்பதை மறந்து விடுங்கள். தமிழகத்தின் ஒரே எதிர்காலம் பாஜகதான். தமிழகத்தில் பாஜக அண்ணாமலை தலைமையில் ஆட்சியமைக்கும் என அமர்பிரசாத் ரெட்டி தெரிவித்திருந்தார்.

பாஜக தலைமையில் கூட்டணி
மாநில அளவில் அதிமுக தலைமையிலும் தேசிய அளவில் பாஜக தலைமையிலும் கூட்டணி என பாஜக தலைவர் அண்ணாமலை, அதிமுக நிர்வாகிகள் கூறி வந்த நிலையில் அதிமுகவை அமர்பிரசாத் விமர்சித்திருப்பது சலசலப்பை ஏற்படுத்தியிருந்தது. இந்த நிலையில்தான் நேற்றைய தினம் அரும்பாக்கத்தில் மாநில நிர்வாகிகள் கூட்டத்தில் பேசிய அண்ணாமலை , அதிமுக உள்பட திராவிட கட்சிகளுடன் கூட்டணி வைக்க விருப்பம் இல்லை. ஒரு வேளை கூட்டணி அமைத்தால் என் பதவியை ராஜினாமா செய்வேன். கூட்டணிக்காக நான் யாருக்கும் சலாம் போட மாட்டேன் என தெரிவித்துள்ளார்.

வானதி எதிர்ப்பு
அண்ணாமலையின் இந்த பேச்சு கட்சியின் மூத்த நிர்வாகிகளான வானதி, கரு நாகராஜன் உள்ளிட்டோருக்கு அதிருப்தியை ஏற்படுத்தியிருந்த நிலையில் இதுகுறித்து அமர்பிரசாத் ரெட்டி தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது: தமிழகத்துக்கு தேவை ஆட்சி மாற்றம் அல்ல அரசியலில் மாற்றம். அந்த மாற்றத்தை உருவாக்க தான் தன் ஐபிஎஸ் பதவியை விட்டுட்டு தமிழகத்துக்கு வந்தவர் தலைவர் அண்ணாமலை அவர்கள். ஊழல் இல்லாத தமிழகத்தை உருவாக்க வேண்டும் என்பதுதான் தமிழக மக்களின் கனவு. ஒரு நாளும் ஊழலை ஏற்றுக் கொள்ளவே முடியாது என குறிப்பிட்டுள்ளார்.

அதிமுக கோட்டையை மறந்துவிட வேண்டியதுதான்
இதுகுறித்து அரசியல் நிபுணர்களிடம் கேட்ட போது அவர்கள் கூறுகையில், 66 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் ஈரோடு கிழக்கில் கோட்டை விட்ட அதிமுக இனி மீள்வது எங்கே... இனி கோட்டையை மறந்துவிடுங்கள். தமிழகத்தின் எதிர்காலம் பாஜகதான் என கூறியுள்ளார். தற்போது அண்ணாமலை தமிழகத்தில் அதிமுகவுடன் கூட்டணி இல்லை என கூறியுள்ளார். அதை ஆமோதிக்கும் வகையில் அமர்பிரசாத் ரெட்டியோ தமிழகத்திற்கு தேவை அரசியலில் மாற்றம் என தெரிவித்துள்ளார். மேலும் ஊழலை ஒரு போதும் அனுமதிக்க மாட்டோம் என கூறியுள்ளார். அப்படியென்றால் இவர் ஊழல் கட்சி என யாரை கூறுகிறார் என்ற கேள்வி எழுந்துள்ளது என நிபுணர்கள் தெரிவித்தனர்.












Click it and Unblock the Notifications