மினுமினுத்த தாம்பரம்.. வேற லெவல் "புரமோஷன்".. பொசுக்குனு இறங்கியடித்த மாநகராட்சி.. சென்னை மகிழ்ச்சி
சென்னை: தாம்பரம் மாநகராட்சி புத்தம் புதிய பொலிவுடன் தயாராகி கொண்டிருக்கிறது.. இது தொடர்பான செய்தி ஒன்று வெளியாகி தாம்பரம் மக்களுக்கு கூடுதல் உற்சாகத்தை தந்துள்ளது.
தாம்பரம் மாநகராட்சியை பொறுத்தவரை, தாம்பரம், பல்லாவரம், அனகாபுத்தூர், பம்மல், செம்பாக்கம் போன்ற நகராட்சிகளும், பெருங்களத்தூர், பீர்க்கன்காரணை, மாடம்பாக்கம், சிட்லபாக்கம், திருநீர்மலை போன்ற பேரூராட்சிகளும் என ஒன்றாக இணைக்கப்பட்டு, கடந்த 2021ம் வருடம் முதல் தாம்பரம் மாநகராட்சியாக உருவாக்கப்பட்டது.

வார்டுகள்: அந்தவகையில், மொத்தம் 5 மண்டலங்கள் , 70 வார்டுகள் இங்கிருக்கின்றன.. 10 லட்சத்திற்கும் மேற்பட்டோர் வசித்து வருகிறார்கள்.. ஆனால், தாம்பரம் மாநகராட்சி உருவாக்கப்பட்டு 2 வருடங்கள் ஆகியும், 70 வார்டுகளில் உள்ள தெரு பெயர் பலகைகள், இதுவரை மாற்றப்படாமலேயே உள்ளது.
அதாவது, நகராட்சி, பேரூராட்சியின்போது வைக்கப்பட்ட பழைய பெயர்ப்பலகைகளே, பல பகுதிகளில் இப்போதும் இருக்கிறதாம். எனவே, தாம்பரம் மாநகராட்சி எல்லைக்கு உட்பட்ட அனைத்து சாலைகளிலும் பெயர் பலகைகள் மாற்றி அமைக்கப்பட வேண்டும் என்று பொதுமக்களிடமும், உள்ளாட்சி பிரதிநிதிகளிடமும் தொடர்ந்து கோரிக்கைகள் எழுந்தவண்ணம் இருந்தது.
புதிய மாற்றங்கள்: இதையடுத்து இந்த கோரிக்கைகள் ஏற்கப்பட்டதுடன், புதிய மாற்றங்களையும் கொண்டுவருவது என சில மாதங்களுக்கு முன்பு, மாநகராட்சி சார்பில் முடிவு செய்யப்பட்டது.
மேலும், 5 மண்டலங்களில் 70 வார்டுகளிலும், பெயர் பலகைகளை மாற்றியமைக்க, 5.56 கோடி ரூபாய்க்கு டெண்டர்' விடப்பட்டதாகவும், இதில், 2,500 புதிய பெயர் பலகைகள் பொருத்தப்பட உள்ளதாகவும், ஏற்கனவே இருக்கும் 2,300 பலகைகளில் பழைய ஸ்டிக்கர்களை நீக்கிவிட்டு, புதிதாக ஒட்டப்பட உள்ளதாகவும் செய்திகள் வெளியாகியிருந்தன.
பெயர் பலகைகள்: அதுமட்டுமல்ல, 5.56 கோடி ரூபாய் மதிப்பீட்டில், 2500 தெருக்களில் புதிய தெரு பெயர் பலகைகள், 2300 தெருக்களில் ஏற்கனவே உள்ள பெயர் பலகைகளில் ஒளிரும் ஸ்டிக்கர்கள் அமைக்கும் பணியும் வேகமெடுத்தது. இப்போது, பெயர் பலகைகளில் ஒளிரும் வகையிலான ஸ்டிக்கர்கள் அமைக்கும் பணிகள் மே மாத இறுதிக்குள் முடிக்கப்படும் என்று தாம்பரம் மாநகராட்சி சார்பில் நம்பிக்கை தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற தேர்தல் பணி காரணமாக 20 சதவீத பணிகள் மட்டுமே நடந்து வந்த நிலையில், இபபோது, தேர்தல் பணிகள் முடிவுற்ற நிலையில், மீண்டும் பணிகள் மும்முரமாகி வருகிறதாம்.. இப்போது, 40 சதவீத பணிகள் முடிக்கப்பட்டு, பணிகள் துரிதமாக நடப்பாகவும், இந்த பணிகள் அனைத்துமே மாத இறுதிக்குள் முடிக்கப்படும் எனறும் தாம்பரம் மாநகராட்சி சார்பில் உறுதி தெரிவிக்கப்பட்டுள்ளது.
மகிழ்ச்சி: இப்படி பெயர் பலகைகளை மாற்றம் செய்தால், அனைவரும் நகர பகுதிகளை அறிந்துகொள்ள உதவியாக இருப்பதுடன், மக்கள் சரியான இடத்திற்கு செல்லமுடியும் என்று நம்பப்படுவதால், தாம்பரம் மக்கள் படுகுஷியில் உள்ளார்கள்.












Click it and Unblock the Notifications