கெரியரை காலி செய்த ஒற்றை ட்வீட்.. 14 முறை சொல்லி சொல்லி அடித்த சிஎஸ்கே வீரர்.. கலங்கும் ரசிகர்கள்!
சென்னை: சிஎஸ்கே அணியின் முக்கியமான மிடில் ஆர்டர் வீரரான அம்பதி ராயுடு சத்தமே இன்றி இந்த ஐபிஎல் தொடரில் மிக சிறப்பாக ஆடி வருகிறார். இந்த சீசன் மட்டுமின்றி கடந்த சில சீசன்களாகவே ராயுடு சிஎஸ்கே அணியின் மிக முக்கியமான வீரராக திகழ்ந்து வருகிறார்.
இந்திய அணியின் மிக சிறந்த மிடில் ஆர்டர் வீரராக உருவெடுப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டவர் அம்பதி ராயுடு. ஐபிஎல் போட்டிகளில் சிறப்பாக ஆடி கவனம் பெற்றவர் 2010க்கு பின் இந்திய அணியில் இடம்பெறுவார், நிரந்தரமாக வாய்ப்பு பெறுவார் என்றே கணிக்கப்பட்டது. ஆனால் கிடைத்த சில போட்டிகளில் இவரை தன்னை நிரூபிக்க முடியவில்லை.
ஐபிஎல் போட்டிகளில் நன்றாக ஆடினாலும் தேசிய அணியில் இடம் கிடைத்த சமயங்களில் பெரிதாக இவரால் சாதிக்க முடியவில்லை. அதேபோல் இவர் இந்தியன் கிரிக்கெட் லீக் போட்டிகளில் ஆடி கொஞ்சம் பிசிசிஐ எதிர்ப்பையும் சம்பாதித்துக்கொண்டார்.

இந்தியன் கிரிக்கெட் லீக்
இந்திய கிரிக்கெட் லீக் போட்டிகளுக்கு பின் இவரால் பிசிசிஐ அமைப்பிடம் பெரிய அளவில் நன்மதிப்பை பெற முடியவில்லை. அதன்பின் 2012, 13 சமயங்களில் இந்திய அணியில் இடம்பிடித்தாலும் இவருக்கு தொடர் வாய்ப்புகள் வழங்கப்படவில்லை. இப்போது இந்திய அணியில் இளம் வீரர்களுக்கு எப்படி தொடர் வாய்ப்புகள் வழங்கப்பட்டு நீண்ட ரன் கொடுக்கப்படுகிறதோ எப்படி அம்பதி ராயுடுவிற்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை.

உலகக் கோப்பை
அம்பதி ராயுடு அதன்பின் சிஎஸ்கே ஐபிஎல்லில் திரும்பி வந்த போது சிஎஸ்கே மூலம் ஏலம் எடுக்கப்பட்டார். அவரின் கம்பேக் சிஎஸ்கேவில் இருந்துதான் தொடங்கியது. சிஎஸ்கேவின் முதல் கம்பேக் சீசனிலேயே ராயுடு சிறப்பாக ஆடினார். சிஎஸ்கே கோப்பை வெல்லவும் அவர் முக்கிய காரணமாக இருந்தார். இதனால் 2019 உலகக் கோப்பை அணியில் இவர் தேர்வு செய்யப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்டார். ஆனால் பிசிசிஐ இவரை கண்டுகொள்ளவில்லை.

மிடில் ஆர்டர்
இந்திய அணியில் மிடில் ஆர்டரில் ஆட நல்ல வீரரே இல்லை. விஜய் சங்கருக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டது. ஆனால் பலமுறை நிரூபித்த அனுபவம் மிக்க ராயுடுவிற்கு வாய்ப்பு கொடுக்கப்படவில்லை. விஜய் சங்கர் பவுலிங், பேட்டிங், பீல்டிங் செய்வார். அவர் 3டி வீரர், அதனால் தேர்வு செய்தோம் என்று அப்போதைய தேர்வுக்குழு தலைவர் எம்எஸ்கே பிரசாத் தெரிவித்தார். இதனால் கோபம் அடைந்த ராயுடு, 3டி கிளாஸ் போட்டு நான் தொடரை பார்க்க போகிறேன் என்று ட்வீட் செய்து எம்எஸ்கே பிரசாத்தையும், பிசிசிஐ அமைப்பையும் சீண்டினார்.

சீண்டல்
தனக்கு பதிலாக விஜய் சங்கருக்கு வாய்ப்பு கொடுத்ததை ராயுடு இப்படி விமர்சனம் செய்து இருந்தார். இந்த ட்வீட்தான் அவரின் கெரியரை காலி செய்தது. அதன்பின் பிசிசிஐ ராயுடுவை பெரிதாக மதிக்கவில்லை. அவர் அடுத்தடுத்த சீசன்களில் நன்றாக ஆடியும் இவரை பிசிசிஐ அணியில் எடுக்கவில்லை. இப்போதும் கூட மிடில் ஆர்டருக்கு இந்திய அணி நிரந்தர வீரரை தேர்வு செய்யவில்லை. ஆனாலும் ராயுடுவிற்கு வாய்ப்பு மட்டும் வழங்கப்படவே இல்லை.

நிரூபித்தார்
இந்த நிலையில்தான் டி 20 உலகக் கோப்பை தொடரில் ராயுடுவிற்கு வாய்ப்பு வழங்க வேண்டும். அவரை மாற்று வீரராக எடுக்க வேண்டும் என்று ரசிகர்கள் கோரிக்கைகள் வைக்க தொடங்கி உள்ளனர். ராயுடு சிஎஸ்கே அணியில் மிக சிறப்பாங்க ஆடி வருகிறார். கடந்த 2018ல் இருந்து ராயுடு சேஸிங்கில் பேட்டிங் இறங்கி 14 முறை அவுட் ஆகாமல் இருந்துள்ளார். இந்த 14 போட்டிகளிலும் சிஎஸ்கே வெற்றிபெற்று இருக்கிறது.14 முறை சொல்லி சொல்லி அடித்துள்ளார் ராயுடு. அதாவது ராயுடு களத்தில் இருந்தால் சேஸிங்கில் சிஎஸ்கே தோல்வி அடையாது என்பதை அவர் நிரூபித்து இருக்கிறார்.

பாவம்
ஆனால் பலமுறை இப்படி ராயுடு தன்னை நிரூபித்தும் கூட தொடர்ந்து அவர் புறக்கணிக்கப்பட்டு வருகிறார். மற்ற வீரர்களுக்கு சர்வதேச போட்டிகளில் வழங்கப்பட்ட வாய்ப்பு ராயுடுவிற்கு வழங்கப்படவில்லை. அவரை மேலும் புறக்கணிக்காமல், ஒரே ஒரு ட்வீட்டை மனதில் வைத்து அவரை பழி வாங்காமல் மீண்டும் அவரை அணியில் எடுக்க வேண்டும் என்று ரசிகர்கள் கோரிக்கை வைக்க தொடங்கி உள்ளனர். தொடர்ந்து அவர் சிறப்பாக ஆடுகிறார், இனியும் அவரை புறக்கணிப்பது நல்லது கிடையாது என்று ரசிகர்கள் ட்வீட்டர் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் கோரிக்கை விடுத்துள்ளனர்.












Click it and Unblock the Notifications