நாளை முதல் சென்னை மெட்ரோ ரயில் சேவை நீட்டிப்பு.. நெரிசல் மிகு நேரங்களில் 5 நிமிடங்களுக்கு ஒரு ரயில்
சென்னை: தமிழ்நாட்டில் கொரோனா ஊரடங்கில் கூடுதல் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், நாளை முதல் மெட்ரோ ரயில் சேவை காலை 5.30 மணியில் இருந்து இரவு 11 மணி வரை இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Recommended Video
தமிழ்நாட்டில் கடந்த மே மாதம் கொரோனா 2ஆம் அலை உச்சத்தில் இருந்தது. அந்த சமயத்தில் நிலைமையைக் கட்டுப்படுத்த முதல் இரண்டு வாரங்களுக்கு மாநிலம் முழுவதும் தளர்வுகளற்ற ஊரடங்கு அறிவிக்கப்பட்டது.
அந்த சமயத்தில் பொது போக்குவரத்திற்கும் தடை விதிக்கப்பட்டது. கொரோனா மெல்லக் குறையத் தொடங்கியதைத் தொடர்ந்து ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டது. அதன்படி கடந்த ஜூலை 20ஆம் தேதி சென்னையில் மெட்ரோ சேவைக்கு அனுமதி அளிக்கப்பட்டது.

ஊரடங்கு நீட்டிப்பு
இந்தச் சூழலில் நேற்று தமிழ்நாட்டு அரசு வரும் ஆகஸ்ட் 6ஆம் தேதி வரை ஊரடங்கை நீட்டித்து உத்தரவிட்டிருந்தது. தமிழக அரசு வெளியிட்டிருந்த அறிவிப்பில் பல்வேறு தளர்வுகள் குறித்த அறிவிப்பும் இடம் பெற்றிருந்தன. தமிழ்நாட்டில் 50% இருக்கைகளுடன் தியோட்டர்கள் திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அதேபோல ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களுக்கு பஸ் போக்குவரத்து சேவையும் தொடங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மெட்ரோ சேவை நேரம் நீட்டிப்பு
இந்நிலையில், நாளை முதல் மெட்ரோ சேவை நேரம் நீட்டிக்கப்படுவதாகச் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் அறிவித்துள்ளது. அதன்படி நாளை முதல் வார நாட்களில் (திங்கள் முதல் சனி) காலை 5.30 முதல் இரவு 11 மணி வரை மெட்ரோ சேவை இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மக்கள் கூட்டம் அதிகமாக இருக்கும் நேரங்களில் (காலை 8 முதல் 11 மணி வரை, மாலை 5 - 8 மணி வரை) 5 நிமிடத்திற்கு ஒரு ரயில் இயக்கப்படும். இதர நேரங்களில் 10 நிமிடத்திற்கு ஒரு ரயில் இயக்கப்படும்.

விடுமுறை நாட்கள்
அதேபோல ஞாயிற்றுக்கிழமைகள் மற்றும் அரசு பொது விடுமுறை நாட்களில் மெட்ரோ ரயில்கள் காலை 7 மணி முதல் 10 வரை 10 நிமிடங்களுக்கு ஒரு ரயில் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், மெட்ரோ ரயில் நிலையத்தில் நுழைவோரும் மெட்ரோ ரயிலில் பயணிப்போரும் கட்டாயம் மாஸ்க் அணிந்திருக்க வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மாஸ்க்
மாஸ்க் அணியாமல் அல்லது முறையா அணியாமல் இருப்பவர்களிடம் ரூ 200 அபராதமாக வசூலிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. மெட்ரோ நிலையங்களில் மாஸ்க் அணியாமல் அல்லது முறையாக அணியாமல் பயணம் செய்த 176 பயணிகளிடம் இருந்து 35,200 ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

பள்ளி, கல்லூரிகள்
தமிழ்நாட்டில் பள்ளி கல்லூரிகளைச் சுழற்சி முறையில் திறக்கவும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி வரும் செப் 1ஆம் தேதி முதல் 9 முதல் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்குப் பள்ளிகள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதர வகுப்புகளுக்குப் பள்ளிகளைத் திறப்பது குறித்து செப் 15ஆம் தேதி முடிவெடுக்கப்படும் என்றும் தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. அதேபோல கல்லூரிகளையும் வரும் செப் 1ஆம் தேதி முதல் திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இந்த நேரத்தில் மெட்ரோ ரயில் சேவை கூட்டம் அதிகம் உள்ள நேரங்களில் 5 நிமிடத்திற்கு ஒரு ரயில் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது, மாணவர்களுக்குப் பெரியளவில் உதவியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications