ஈரோட்டில் சதத்தை நெருங்கிய வெப்பம்.. மறுபுறம் காத்திருக்கும் மழை.. எங்கெல்லாம் பெய்யும் தெரியுமா
வரும் நாட்களில் எங்கெல்லாம் மழை இருக்கும் என்பது குறித்த தகவல்களை வானிலை மையம் பகிர்ந்துள்ளது.
சென்னை: தமிழ்நாட்டில் சமீப காலமாகவே வெப்பம் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், வரும் நாட்களில் எங்கெல்லாம் மழை பெய்ய வாய்ப்பிருக்கிறது என்பது குறித்த தகவல்களை வானிலை மையம் வெளியிட்டுள்ளது.
தமிழ்நாட்டில் பெய்த வடகிழக்கு பருவமழை ஜனவரி மாதமே முடிந்துவிட்டது. அப்போது இயல்பைக் காட்டிலும் சற்று கூடுதலாக மழை பெய்ததால் பொதுமக்களும் விவசாயிகளும் மகிழ்ச்சியடைந்தனர்.
நாடு முழுக்க இருக்கும் நீர்பிடிப்பு பகுதிகளில் நல்ல நிலையிலேயே இருக்கிறது. இதனால் அடுத்து வரும் கோடைக் காலத்தில் எந்தவொரு தண்ணீர் பஞ்சமும் ஏற்படாது என்றே கூறப்படுகிறது.

வெப்பம்
கோடைக் காலம் இன்னும் தொடங்கவில்லை என்றாலும் கூட இப்போதே மாநிலத்தில் பெரும்பாலான பகுதிகளில் வெப்பம் அதிகரித்துவிட்டது. குறிப்பாக பிப். மாதமே வெப்பம் சில இடங்களில் சதத்தைத் தொட்டுவிட்டது. வரும் காலங்களில் வெப்பம் மேலும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது. கடந்த 24 மணி நேரத்தில், கன்னியாகுமரி மற்றும் புதுச்சேரியில் வெப்பம் 3 டிகிரி செல்சியஸ் வெப்பம் அதிகமாகப் பதிவாகியுள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

ஈரோட்டில் சதத்தை நெருங்கும் வெப்பம்
அதேபோல கடந்த 24 மணி நேரத்தில் ஈரோடு மாவட்டத்தில் அதிகபட்ச வெப்பம் பதிவாகியுள்ளது. அங்கு அதிகபட்சமாக 99.68 டிகிரி பாரன்ஹூட் வெப்பம் பதிவாகியுள்ளது. மற்ற மாவட்டங்களில் பெரியளவில் வெப்பத்தில் மாற்றம் இல்லை. அதேபோல கடந்த 24 மணி நேரத்தில் திருப்பத்தூர் மாவட்டத்தில் 61.16 டிகிரி பாரன்ஹூட் பதிவாகியுள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. அதேபோல வரும் நாட்களில் எங்கே மழை பெய்யும் என்பது குறித்த தகவல்களும் பகிரப்பட்டுள்ளது.

மழை எங்கே
அதன்படி கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக இன்று (05.03.2023) தென் தமிழக மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நாளை (மார்ச் 6) மற்றும் நாளை மறுநாள் (மார்ச் 7) தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் பொதுவாக வறண்ட வானிலை நிலவக்கூடும். வரும் மார்ச் 8 மற்றும் 9 தேதிகளில் தென் தமிழக கடலோர மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள், அதனை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

சென்னை
மேலும், சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளுக்கான வானிலையைப் பொறுத்தவரையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 33-34 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 22-23 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும். கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவு (சென்டிமீட்டரில்) ஏதுமில்லை. அதேபோல மீனவர்களுக்கும் எவ்வித எச்சரிக்கையும் விடுக்கப்படவில்லை.












Click it and Unblock the Notifications