இன்று பாபர் மசூதி இடிப்பு தினம்.. தமிழகத்தில் 1.20 லட்சம் போலீஸ் பாதுகாப்பு.. வெடிகுண்டு சோதனை
சென்னை: பாபர் மசூதி இடிப்பு தினம் இன்று கடைப்பிடிக்கப்படும் நிலையில் தமிழகம் முழுவதும் உள்ள கோவில், பஸ், ரயில் நிலையங்கள் உள்பட மக்கள் அதிகம் கூடும் இடங்களில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. சென்னை, கோவை, கார்த்திகை தீபவிழா நடைபெறும் திருவண்ணாமலையில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
பாபர் மசூதி இடிப்பு தினம் இன்று (செவ்வாய்க்கிழமை) அனுசரிக்கப்படுகிறது. இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டார்.
இதையடுத்து கடந்த 2 நாட்களாகவே கோவில், பஸ், ரயில் நிலையங்களில் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். மேலும் சந்தேகத்துக்குரிய இடங்களில் மோப்பநாய்கள் சோதனையிட்டன.
டிசம்பர் 6.. பாபர் மசூதி இடிப்பு தினம்.. தமிழ்நாடு முழுக்க 1.20 லட்சம் போலீசார் பாதுகாப்பு

1.20 லட்சம் போலீஸ் பாதுகாப்பு
இந்நிலையில் தான் பாபர் மசூதி இடிப்பு தினமான இன்று பாதுகாப்பு இன்னும் பலப்படுத்தப்பட்டுள்ளது. தீபாவளிக்கு முந்தைய நாள் கோவையில் கார் வெடிப்பு நிகழ்ந்த நிலையில் தமிழக போலீசார் மிகவும் கவனமாக செயல்பட்டு வருகின்றனர். அதன்படி தமிழ்நாட்டில் இன்று கோவில், பஸ், ரயில் நிலையங்கள் உள்பட மக்கள் அதிகம் கூடும் இடங்களில் மொத்தம் 1.20 லட்சம் போலீசார் கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

வெடிகுண்டு சோதனை
தமிழகத்தின் தலைநகரான சென்னையில் 15 ஆயிரம் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் சென்னை சென்ட்ரல், எழும்பூர், தாம்பரம் உள்ளிட்ட முக்கிய ரயில் நிலையங்களிலும், கோயம்பேடு பஸ் நிலையத்திலும் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட உள்ளது. சில இடங்களில் போலீசார் துப்பாக்கி ஏந்தி பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் சென்னை, கோவை உள்பட தமிழ்நாட்டில் உள்ள விமான நிலையங்களில் போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. வெடிகுண்டு நிபுணர்கள் மோப்பநாய் உதவியுடன் சோதனை நடத்தினர்.

உடைமைகள் சோதனை
மேலும் தமிழக ரயில் நிலையங்களில் மட்டும் 3000 ரயில்வே போலீசார் உள்பட மொத்தம் 4,300 பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். ரயில் நிலையங்களில் நுழையும் பயணிகளின் உடைமைகள் தீவிரமாக சோதனை செய்யப்பட்டு வருகிறது. இதேபோல் பஸ் நிலையங்களிலும் சோதனை தொடர்கிறது.

கோவை-திருவண்ணாமலைக்கு தனிகவனம்
மேலும் தமிழகத்தில் தீபாவளியையொட்டி நடந்த கோவை கார் வெடிப்பு சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. முன்னதாக கோவையில் பெட்ரோல் குண்டு வீச்சுகள் நடந்தன. இதனால் கோவையில் தனிக்கவனம் செலுத்தப்பட்டுள்ளது. அங்கு 3000 போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் இன்று கார்த்திகை தீபத் திருவிழா பரணி தீபத்துடன் துவங்கி நடைபெற்று வருகிறது. இன்று மாலை மலையில் கார்த்திகை மகாதீபம் ஏற்றப்பட உள்ளது. இதனால் அங்கும் பலத்த போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.