சென்னை - கோவை ரூட் தான் உச்சம்.. நெல்லை, மதுரைக்கு பெரிய ஷாக்.. 38% அதிகரித்த ஆம்னி பஸ் கட்டணம்
சென்னை: நாளை மறுநாள் தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. இந்த பண்டிகையையொட்டி சென்னையில் இருந்து சொந்த ஊர்களுக்கு பொதுமக்கள் படையெடுத்து செல்லும் நிலையில் தனியார் ஆம்னி பஸ்களில் டிக்கெட் கட்டணம் என்பது உச்சம் தொட்டுள்ளது. குறிப்பாக சென்னை - கோவை ரூட்டில் டிக்கெட் கட்டணம் என்பது அதிகமாக உயர்ந்துள்ளது. அதேபோல் சென்னை - திருநெல்வேலி, சென்னை - மதுரை பஸ்களும் ராக்கெட் வேகத்தில் கட்டணத்தை அதிகரித்துள்ளன.
தீபாவளி பண்டிகை நாளை மறுநாள் கொண்டாடப்பட உள்ளது. இதனால் சென்னையில் தங்கி பணியாற்றி வரும் மக்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல தொடங்கி உள்ளனர். மக்கள் கூட்ட நெரிசல் இன்றி எளிதாக பயணம் செய்ய வசதியாக சிறப்பு ரயில்கள், சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

நேற்று முதல் சென்னையில் இருந்து மக்கள் சொந்த ஊர்களுக்கு புறப்பட்டு வருகின்றனர். இன்றும், நாளையும் சென்னையில் இருந்து இன்னும் கூடுதலான மக்கள் சொந்த ஊர்களுக்கு கிளம்ப உள்ளனர். இந்நிலையில் தான் தனியார் ஆம்னி பஸ்களில் டிக்கெட் கட்டணம் என்பது பலமடங்கு அதிகரித்துள்ளது.
பொதுவாக தீபாவளி, பொங்கல் உள்பட தொடர் விடுமுறை நாட்களில் ஆம்னி பஸ்களின் கட்டணம் என்பது பிற நாட்களை விட அதிகரிக்கும். பண்டிகை காலங்களில் மக்களின் தேவை அதிகரிப்பதால் தனியார் ஆம்னி பஸ் உரிமையாளர்கள் சங்கம் புதிய கட்டணத்தை நிர்ணயம் செய்யும். இந்த கட்டணம் என்பது சாதாரண நாட்களை ஒப்பிடும்போது சற்று அதிகமாக இருக்கும்.
ஆனாலும் கூட பல தனியார் பஸ்கள் ஆம்னி பஸ் உரிமையாளர்கள் சங்கம் நிர்ணயித்த கட்டணத்தை விட அதிகளவில் டிக்கெட் கட்டணத்தை வசூல் செய்கின்றன. அதன்படி குறைந்தபட்சம் 15 சதவீதம் முதல் அதிகபட்சமாக 38 சதவீதம் வரை கட்டணம் என்பது உயர்த்தி வசூலிக்கப்படுகிறது. மேலும் தற்போது சென்னை - கோவை ரூட்டில் அதிக கட்டணம் என்பது வசூலிக்கப்படுகிறது.
அதாவது நாளைய தினம் சென்னையில் இருந்து கோவை செல்லும் தனியார் ஆம்னி ஏசி ஸ்லீப்பர் பஸ்களில் ஒருவருக்கான டிக்கெட் கட்டணம் ரூ.3,399 ஆக உள்ளது. ரூ.2,465 தான் வசூலிக்க வேண்டும் என்று ஆம்னி பஸ் உரிமையாளர்கள் கூறியுள்ள நிலையில் கட்டணம் ரூ.3,399 ஆக உள்ளது. அதேபோல் ஏசி இல்லாத (Seater)பஸ்சில் சென்னை - கோவை டிக்கெட் விலை ரூ.1,720 ஆக நிர்ணயம் செய்யப்பட்ட நிலையி்ல தற்போது ரூ.2 ஆயிரத்துக்கு விற்பனை செய்யப்படுகிறது.
அதேபோல் மதுரை, திருநெல்வேலி, தூத்துக்குடி, நாகர்கோவில் உள்ளிட்ட தென்மாவட்டங்களுக்கு செல்லும் பஸ்களிலும் டிக்கெட் கட்டணம் என்பது 15 சதவீதம் முதல் 28 சதவீதம் அளவுக்கு உயர்ந்துள்ளது. சென்னையில் இருந்து மதுரைக்கு ஏசி இல்லாத (Seater) ஆம்னி பஸ்சில டிக்கெட் கட்டணம் ரூ.1,690 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ள நிலையில் ரூ.2,200 வசூலிக்கப்படுகிறது. ஏசி ஸ்லீப்பர் பஸ்சில் நிர்ணயிக்கப்பட்ட ரூ.2,330 கட்டணத்துக்கு பதில் ரூ.2,700 வசூலிக்கப்படுகிறது.
அதேபோல் சென்னையில் இருந்து திருநெல்வேலிக்கு ஏசி இல்லாத சீட்டர் பஸ்சில் நிர்ணயிக்கப்பட்ட கட்டணம் ரூ.1,910க்கு பதில் ரூ.2400 வசூலிக்கப்படுகிறது. அதேபோல் ஏசி ஸ்லீப்பர் பஸ்சில் ரூ.2,790 க்கு பதில் ரூ.3,580 என்பது கட்டணமாக உள்ளது. இதனால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications