சட்டசபையில் யாரும் ஆளுநரை தாக்கி பேசக் கூடாது.. எம்எல்ஏ கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தல்
சென்னை: தமிழ்நாடு சட்டசபையில் ஆளுநர் ஆற்றிய உரை அரசியல் அரங்கில் மிகப் பெரியளவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள இந்தச் சூழலில் சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் திமுக எம்எல்ஏ-க்கள் கூட்டம் நடைபெற்றது.
இந்தாண்டு தமிழ்நாடு சட்டசபையின் முதல் கூட்டத்தொடர் நேற்று ஆளுநர் உரையுடன் தொடங்கியது. நேற்று காலை தமிழக சட்டசபைக்கு வருகை தந்த ஆளுநர் ரவி தனது உரையை வாசித்தார்.
ஆளுநர் உரையில் பல்வேறு அம்சங்கள் இடம் பெற்றிருந்தது. குறிப்பாக, சென்னைக்கு அருகே மாமல்லபுரத்தில் துணை நகரம் அமைக்கப்படும் என்ற அறிவிப்பு உள்ளிட்ட பல அறிவிப்புகள் இடம் பெற்றிருந்தது.

புகார்கள்
இருப்பினும், அரசு தயாரித்துத் தந்த உரையை ஆளுநர் முழுமையாக வாசிக்கவில்லை என்றும் சில வார்த்தைகளையும் தவிர்த்துவிட்டார் என்றும் புகார்கள் கிளம்பின. பேச்சின் தொடக்கத்தில் தமிழ்நாடு என்று குறிப்பிட்டாலும், அதன் பிறகுத் தனது உரையில் தமிழ்நாடு அரசு என்பதற்குப் பதிலாக இந்த அரசு என்ற வார்த்தையைப் பயன்படுத்தினார். அதேபோல திராவிட மாடல் என்ற வார்த்தையை ஆளுநர் தவிர்த்துள்ளார். மேலும், அம்பேத்கர், பெரியார், அண்ணா, கருணாநிதி பெயர்கள் இடம்பெற்றிருந்த பத்தியையும் அவர் படிக்கவில்லை என்ற கூறப்படுகிறது.

வெளியேறிய ஆளுநர்
இதையடுத்து ஆளுநரின் ஆங்கில பேச்சு சட்டசபை குறிப்பில் ஏறக் கூடாது என்றும் அரசு தயார் செய்து தந்த உரையே சட்டசபை அவைகுறிப்புகளில் ஏற வேண்டும் என்றும் முதல்வர் ஸ்டாலின் ஆளுநர் இருக்கும் போதே தீர்மானம் கொண்டு வந்தார். இதனால் அதிருப்தியடைந்த ஆளுநர் ரவி, முதல்வர் பேசிக்கொண்டிருக்கும் போதே வெளியேறினார். இது தமிழக அரசியலில் மிகப் பெரியளவில் பேசுபொருளானது. இதற்கு பல்வேறு அரசியல் தலைவர்களும் ஆதரவாகவும் எதிராகவும் கருத்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

திமுக எம்எல்ஏக்கள் கூட்டம்
இந்த பரபரப்பான அரசியல் சூழலில் இன்று காலை சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக எம்எல்ஏ-க்கள் கூட்டம் நடைபெற்றது. இது குறித்த அறிவிப்பை அக்கட்சியின் கொறடா கோவி. செழியன் சில நாட்களுக்கு முன்பு வெளியிட்டிருந்தார். அதன்படி தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் சென்னை அண்ணா அறிவாலயத்தில் அமைந்துள்ள கலைஞர் அரங்கத்தில் இந்த கூட்டம் நடைபெற்றது. இதில் நேற்று சட்டசபையில் நடந்த நிகழ்வுகள் தொடங்கி பல்வேறு விஷயங்கள் ஆலோசிக்கப்பட்டது. குறிப்பாக "சட்டசபையில் யாரும் ஆளுநரைத் தாக்கி பேசக் கூடாது" என்று எம்எல்ஏ கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தியதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

இன்று என்ன நடக்கும்
முன்னதாக சபாநாயகர் அப்பாவு தலைமையில் நேற்று நடைபெற்ற அலுவல் ஆய்வுக் குழுக் கூட்டத்தில் வரும் ஜன.13ஆம் தேதி வரை கூட்டத்தொடரை நடத்த முடிவு செய்யப்பட்டது. இன்று சட்டசபையில் மறைந்த எம்எல்ஏ திருமகன் ஈவெரா மறைவுக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, சட்டசபை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த கூட்டத்தின் கடைசி நாளில் சட்டசபை உறுப்பினர்களின் கேள்விகளுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிலளிப்பார்.












Click it and Unblock the Notifications