நாடாளுமன்ற தேர்தல்.. அதிமுக கூட்டணியை அமித்ஷா இன்னும் உறுதி செய்யவில்லை.. மீண்டும் அண்ணாமலை பகீர்
சென்னை: நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணியை அமித்ஷா இன்னும் உறுதி செய்யவில்லை. அமித்ஷா உண்மையில் என்ன கூறினார்? என்பது பற்றி பாஜக மாநில தலைவர் அண்ணாமலை இன்று விளக்கம் அளித்து மீண்டும் பரபரப்பை கிளப்பி உள்ளார்.
தமிழ்நாட்டில் அதிமுக கூட்டணியில் பாஜக உள்ளது. இந்நிலையில் தான் இந்த கூட்டணியில் குழப்பம் ஏற்பட்டது. இந்நிலையில் மாநில பாஜக தலைவர் அண்ணாமலை கட்சி நிர்வாகிகள் கூட்டத்தில் தமிழ்நாட்டில் அதிமுக உடனான கூட்டணியை விரும்பவில்லை என பேசியதாக தகவல்கள் வெளியாகின.
அதாவது, ‛‛தமிழ்நாட்டில் திராவிட கட்சிகளுடன் கூட்டணி வைக்க விரும்பவில்லை. அதிமுகவுடன் கூட்டணி வைத்தால் கட்சி தலைவர் பதவியை ராஜினாமா செய்து தொண்டனாக செயல்படுவேன்'' என பேசியதாக தகவல்கள் வெளியாகின. இதற்கு அதிமுகவினரும் பதில் கருத்து கூறிய நிலையில் கூட்டணியில் குழப்பம் ஏற்பட்டது.

அமித்ஷா-ஈபிஎஸ் கருத்து
இந்நிலையில் தான் டெல்லியில் தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கலந்துகொண்டார். அப்போது செய்தியாளர்கள் தமிழ்நாட்டில் பாஜக கூட்டணி குறித்து கேள்வி எழுப்பினர். தமிழ்நாட்டில் அதிமுக கூட்டணியில்தான் இருக்கிறோம் என்று அமித்ஷா தெரிவித்தார். அதன்பிறகு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியும் அதிமுக, பாஜக கூட்டணி தொடர்கிறது என்றார். இதன்மூலம் அதிமுக-பாஜக இடையேயான கூட்டணி பிரச்சனை முடிவுக்கு வந்ததாக கருதப்பட்டது.

அண்ணாமலை பேட்டி
இந்நிலையில் தான் இன்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கூறிய தகவல் மீண்டும் விவாதத்தை கிளப்பி உள்ளது. சென்னையில் இன்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பத்திரிகையாளர்களை சந்தித்தார். மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தமிழ்நாட்டில் உள்ள அதிமுக-பாஜக கூட்டணி குறித்து பேசியது பற்றி கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு அண்ணாமலை விளக்கம் அளித்தார். அப்போது அண்ணாமலை கூறியதாவது:

நான் சொல்வதை தான் அமித்ஷாவும் கூறினார்
‛‛கூட்டணியில் பாஜக உள்ளதா? என்ற கேள்விக்கு ‛இருக்கிறது' என்று தான் அமித்ஷா கூறினார். ஆனால் அமித்ஷா கூட்டணியை உறுதி செய்துவிட்டதாக செய்தி வெளியிடுகின்றனர். நான் சொல்வதை தான் அமித்ஷாவும் கூறியுள்ளார். இப்போது அதிமுக-பாஜக கூட்டணியில் உள்ளது. நாடாளுமன்ற தேர்தலுக்கு இன்னும் 9 மாதம் உள்ளது. எத்தனை சீட் கொடுப்பார்கள்?, எந்தெந்த சீட் கொடுப்பார்கள்? என்பதை பார்க்க வேண்டும். நமக்கும் அவர்களுக்கான கொள்கைகள், எந்தெந்த இடங்கள் வழங்கப்படுகிறது? என்பன போன்ற விஷயங்கள் உள்ளன.

இப்போதே முடிவெடுக்க முடியாது
இதனால் நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி குறித்து இப்போதே முடிவெடுக்க முடியாது. மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்னும் கூட்டணியை முடிவு செய்யவில்லை. அரசியலில் கல்லில் எழுதப்பட்ட வார்த்தைகள் இல்லை. அரசியல், கூட்டணியை பொறுத்தமட்டில் தண்ணீரில் எழுதப்பட்ட வார்த்தைகள் தான் அதிகம். இருப்பினும் பாஜக கூட்டணி பற்றி தேசிய தலைமை தான் முடிவெடுக்கும்; தலைமையின் முடிவுக்கு நாங்கள் கட்டுப்படுவோம். இதனால் நாடாளுமன்ற தேர்தலுக்கு இன்னும் 9 மாதங்கள் இருக்கும்போது இப்போதே முன்னுரையும், முடிவுரையும் எழுதமுடியாது என்பது தான் எனது விளக்கம்'' என்றார். அண்ணாமலையின் இந்த விளக்கம் தற்போது மீண்டும் விவாதத்தை கிளப்பி உள்ளது.












Click it and Unblock the Notifications