’அம்மா’ இல்லாத பிள்ளையான அதிமுக..எடப்பாடியை அசிங்கப்படுத்திய அமித் ஷா! மனதுக்குள் குமுறும் ர.ர.க்கள்
சென்னை: 2026 சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு தொகுதி பங்கீடு கூட்டணி பேச்சு வார்த்தைகள் தீவிரமாகி வருகின்றன. திமுக கூட்டணிக்கு தலைமை வகிக்கும் திமுக கூட்டணி கட்சிகள் அனைத்தையும் அறிவாலயத்திற்கு வரவைத்து பேச்சுவார்த்தை நடத்துகிறது. ஆனால் நாங்கள் தான் கூட்டணிக்கு தலைமை எனச் சொல்லிக் கொள்ளும் அதிமுகவோ தொகுதி பங்கிட்டு பட்டியலுடன் டெல்லிக்கு பயணிக்கிறது.
ஜெயலலிதா இருந்தபோது சென்னையை தேடி வந்த பாஜக தலைவர்கள் தற்போது எடப்பாடியை டெல்லிக்கு வரவழைத்துள்ளதால் அதிமுக தொண்டர்கள் மனக்குமுறலில் இருப்பதாக கூறுகின்றனர். மேலும் ஜெயலலிதா இருந்திருந்தால் இப்படி எல்லாம் நடக்குமா? என சமூக வலைதளங்களில் தங்கள் ஆதங்கத்தை கொட்டி தீர்த்து வருகின்றனர்.
2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு தமிழக அரசியலுக் களம் சூடாகி வருகிறது. திமுக அதிமுக கட்சிகள் தங்கள் கூட்டணியை பலப்படுத்தும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். தேர்தலுக்கு இன்னும் சில வாரங்களே இருக்கும் நிலையில் கூட்டணி பேச்சு வார்த்தைகள் தொகுதி பங்கீடு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.

2026 சட்டசபைத் தேர்தல்
திமுகவை பொருத்தவரை பத்தாண்டுகளுக்கு மேலாக அந்த கூட்டணி வலுவாக இருக்கும் நிலையில் இந்த தேர்தலிலும் அதே கூட்டணி தொடர்வதோடு தேமுதிக, மக்கள் நீதி மய்யம் உள்ளிட்ட சில கட்சிகள் கூடுதலாக இணைந்துள்ளது. திமுக காங்கிரஸ் இந்திய கம்யூனிஸ்ட் மதிமுக உள்ளிட்ட கட்சிகள் போர்க்கொடி தூக்கிய நிலையில் அதனை பேச்சுவார்த்தைகள் மூலம் சமாளித்தது.
தொகுதி பங்கீடு
தற்போது சில கட்சிகளுடன் தொகுதி பங்கீடு முடிவடைந்துள்ளது. இன்னும் விடுதலை சிறுத்தைகள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகளுடன் பேச்சுவார்த்தை, தொகுதி பங்கீடு நடைபெற இருக்கிறது. கடைசி நேர இழுபறிகள் இருந்தாலும் வெற்றிகரமாக கூட்டணியை முடித்து விடுவார் ஸ்டாலின் என நம்பிக்கையை தெரிவிக்கின்றனர் திமுகவினர். அதே நேரத்தில் எதிர்முகமான அதிமுகவில் இன்னும் கூட்டணி பேச்சு வார்த்தை வெளிப்படையாக தொடங்கவில்லை.
அதிமுக பாஜக கூட்டணி
தமிழகத்தில் அதிமுக தான் கூட்டணிக்கு தலைமை என அதிமுகவினர் சொல்லி வந்தாலும் பாஜகவினர் தேசிய அளவில் தாங்கள்தான் கூட்டணி தலைமை என்பது போல காட்டிக் கொள்கின்றனர் என்ற விமர்சனம் வெளிப்படையாக முன்வைக்கப்படுகிறது. பாமக உடன் பேச்சுவார்த்தை நடத்தியது, விஜயை கூட்டணிக்குள் கொண்டுவர முயற்சித்தது என பல நேரங்களை பாஜகவே இது தொடர்பாக நடவடிக்கைகளை எடுத்தது. இந்த நிலையில் தொகுதி பங்கிட்டு பட்டியலுடன் எடப்பாடி பழனிச்சாமி இன்று டெல்லி சென்று இருக்கிறார். அமித் ஷாவின் அழைப்பின் பேரில் அவர் டெல்லி சென்றிருப்பதாக கூறப்படுகிறது.
தமிழக பாஜக
கூட்டணி பங்கீடு தொடர்பாக தமிழக பாஜக தேர்தல் பொறுப்பாளரான பியூஸ் கோயல் இன்று சென்னை வருவதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் அது ரத்து செய்யப்பட்டு எடப்பாடி பழனிச்சாமி டெல்லி சென்றிருக்கிறார். விஜய் உடன் கூட்டணி வாய்ப்பு பறிபோன நிலையில் தற்போது இறுதிப்பட்டியலை தயார் செய்யும் பணியில் பாஜக மும்முரம் காட்டி வருகிறது.
எடப்பாடி பழனிசாமி
இந்த நிலையில் பாஜகவின் செயல்பாடுகளால் அதிமுக தொண்டர்கள் மிகுந்த மன வருத்தத்தில் இருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது. தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சரும் அதிமுக பொதுச் செயலாளர் ஆன ஜெயலலிதா இருந்தவரை எவ்வளவு பெரிய கட்சியாக இருந்தாலும் எந்த தலைவராக இருந்தாலும் போயஸ் கார்டனுக்கு சென்று பேச்சுவார்த்தை நடத்துவது தான் வழக்கம். பிரதமர் நரேந்திர மோடி சென்னை வந்தபோது நேரடியாக போயஸ் கார்டன் சென்று ஜல்லுதாவை சந்தித்து பேசினார்.
ஜெயலலிதா காலம்
1996, 2001, 2006, 2011, 2016 சட்டமன்ற தேர்தல்களில் ஜெயலலிதா தலைமையில் அதிமுக சட்டமன்ற தேர்தலை சந்தித்தபோது தமிழகத்தின் அனைத்து பிரதான கட்சிகளும் அதன் கட்சிகளின் தலைவர்களும் நேரடியாக போயஸ் கார்டனுக்கு சென்று நள்ளிரவு வரை காத்திருந்து கூட்டணி பேச்சு வார்த்தையை நடத்தினர். ஆனால் தற்போது இரண்டு கோடி தொண்டர்களைக் கொண்ட இயக்கத்தின் தலைவரை டெல்லிக்கு வரவழைத்து அமித்ஷா பேசியிருப்பது அதிமுகவினர் இடையே கொந்தளிப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
அதிமுக தொண்டர்கள் அதிருப்தி
ஒரு விசாரணைக்கு ஆஜராக சம்மன் அனுப்புவது போல கூட்டணி பேச்சு வார்த்தைக்கு அமித்ஷா எடப்பாடி பழனிச்சாமி அழைத்திருக்கிறார், தமிழகத்தை அதிக முறை ஆண்ட கட்சியின் பொதுச்செயலாளர் பேச்சுவார்த்தைக்காக அமித்ஷா டெல்லிக்கு அழைத்திருக்கிறார் என அதிமுக தொண்டர்களிடையே மனக்குமுறலை வெளிப்படுத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications