மத்திய உளவுத்துறையின் ரகசிய நோட்.. தமிழ்நாடு வரும் அமித் ஷா கையில் 2 பேப்பர்.. உள்ளே இருப்பது என்ன?
சென்னை: தமிழ்நாடு வரும் உள்துறை அமைச்சர் அமித் ஷா கையில் இரண்டு முக்கியமான ரிப்போர்டுகள் இருப்பதாக கூறப்படுகிறது.
தமிழக சட்டமன்றத் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், பாஜகவின் தேர்தல் "மாஸ்டர் மைண்டும்" மத்திய உள்துறை அமைச்சருமான அமித் ஷா, பிப்ரவரி 13 மற்றும் 14 ஆகிய தேதிகளில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார். இரண்டு நாள் பயணமாக வரும் அவர், தமிழக அரசியலில் பெரும் அதிர்வுகளை ஏற்படுத்தக்கூடிய இரண்டு முக்கிய ஆவணங்களுடன் வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

அமித் ஷாவின் கையில் இருக்கும் அந்த 'இரண்டு தாள்கள்'
அமித் ஷாவின் இந்தப் பயணம் வெறும் தேர்தல் பிரச்சாரமாக மட்டும் இருக்கப்போவதில்லை. அவர் கையில் வைத்துள்ள இரண்டு முக்கியப் பட்டியல்கள் கூட்டணி மற்றும் கட்சிக்குள் பெரிய மாற்றங்களை உண்டாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது:
புதிய கட்சிப் பொறுப்புகள்: முதல் பேப்பரில், தேர்தலை முன்னிட்டு தமிழக பாஜகவில் அதிரடியாக மாற்றப்பட வேண்டிய புதிய பொறுப்பாளர்கள் மற்றும் நிர்வாகிகள் பட்டியல் உள்ளதாகக் கூறப்படுகிறது. தேர்தலை எதிர்கொள்ளும் வகையில் கட்சி இயந்திரத்தை வலுப்படுத்த இந்த மாற்றங்கள் அமையும். முக்கியமாக் பல தேர்தல் பொறுப்புகள் இதில் இருக்கும். முக்கியமாக அண்ணாமலைக்கு வழங்க வேண்டிய புதிய பதவி பற்றியும் இதில் தகவல் இருக்கும்.
50 தொகுதிகள் பட்டியல்: இரண்டாவது தாளில், தமிழகத்தில் பாஜக போட்டியிட விரும்பும் 50 முக்கிய தொகுதிகள் மற்றும் அந்தத் தொகுதிகளுக்கான உத்தேச வேட்பாளர் பட்டியல் இடம் பெற்றுள்ளது.
மத்திய உளவுத்துறை (Intelligence) அறிக்கை பின்னணி
இந்த 50 தொகுதிகள் மற்றும் வேட்பாளர் பட்டியலானது சாதாரணமான ஒன்றல்ல. இது முழுக்க முழுக்க மத்திய உளவுத்துறையின் ரகசிய அறிக்கையின் அடிப்படையில் தயார் செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் எந்தெந்த தொகுதிகளில் பாஜகவிற்கு வெற்றி வாய்ப்பு அதிகம் உள்ளது, மக்களிடையே யாருக்கு ஆதரவு இருக்கிறது என்பது குறித்த விரிவான தரவுகளின் அடிப்படையில் இந்த "வின்னபிலிட்டி" (Winnability) ரிப்போர்ட் தயார் செய்யப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.
அதிமுகவிடம் 50 இடங்கள் - பாஜகவின் பிளான்
தமிழகத்தில் அதிமுக தலைமையிலான கூட்டணியில் பாஜக அங்கம் வகிக்கிறது. பாமக (அன்புமணி தரப்பு), அமமுக (டி.டி.வி. தினகரன்), தமாகா (ஜி.கே. வாசன்) உள்ளிட்ட கட்சிகளுடன் இணைந்து மெகா கூட்டணியை உருவாக்கி, ஆளும் திமுக அரசுக்குச் சவால் விட பாஜக திட்டமிட்டுள்ளது.
இந்தச் சூழலில், உளவுத்துறை அறிக்கையை முன்னிறுத்தி, அதிமுகவிடம் இருந்து 50 தொகுதிகளைப் பெற பாஜக தலைமை காய் நகர்த்தி வருகிறது. இது கூட்டணியில் ஒரு பெரிய விவாதத்தை ஏற்படுத்த வாய்ப்புள்ளது.
புதுச்சேரி மற்றும் தமிழகப் பயணம்
பிப்ரவரி 13-ல் தமிழகம் வரும் அமித் ஷா, முக்கிய கட்சி நிர்வாகிகளுடன் ரகசிய ஆலோசனை நடத்துவார். பிப்ரவரி 14 அன்று புதுச்சேரி காரைக்கால் பகுதியில் நடைபெறும் பொதுக்கூட்டத்திலும் அவர் உரையாற்ற உள்ளார். இன்னும் இரண்டு மாதங்களில் தேர்தல் வரவுள்ள நிலையில், அமித் ஷாவின் இந்த வருகை தமிழக அரசியல் களத்தில் பெரும் திருப்பமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications