நெல்லையில் பாஜக மாநாடு.. நேரில் வரும் அமித்ஷா.. உற்சாகத்தில் நயினார் நாகேந்திரன்.. என்ன மேட்டர்?
சென்னை: தமிழக பாஜக சார்பாக நெல்லையில் நடக்கவுள்ள பூத் கமிட்டி மாநாட்டில் கலந்து கொள்வதற்காக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா வரவுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. இந்த பூத் கமிட்டி மாநாட்டில் தென் மாவட்டங்களைச் சேர்ந்த 30 தொகுதிகளின் பூத் கமிட்டி நிர்வாகிகள் பங்கேற்க உள்ளனர். இதனால் அமித்ஷாவின் வருகை, தமிழக பாஜகவின் அடுத்த அடியை நோக்கி இருக்கும் என்று கருதப்படுகிறது.
தமிழ்நாட்டில் சட்டசபைத் தேர்தலுக்கு இன்னும் 7 மாதங்கள் மட்டுமே உள்ளது. இதனால் திமுக, அதிமுக, காங்கிரஸ், தேமுதிக, பாமக, விசிக உள்ளிட்ட அத்தனை கட்சிகளும் தேர்தல் பணிகளை தீவிரப்படுத்தி இருக்கின்றனர். அந்த வகையில் பாஜக தரப்பில் பூத் கமிட்டி அமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வந்தன. அதற்கான தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் ஒவ்வொரு தொகுதிக்கும் சென்று ஆலோசனை நடத்தி வந்தார்.

பூத் கமிட்டி நிர்வாகிகளுக்கு சிறப்பு ஆலோசனைகளை வழங்கியதோடு, நேரடியாக ஆய்விலும் ஈடுபட்டார். அண்ணாமலை தலைவராக இருந்த போது பல்வேறு பூத் கமிட்டிகள் போலியாக அமைக்கப்பட்டிருந்த சூழலில், அதனை கண்டறிந்து உரிய நடவடிக்கை எடுத்திருக்கிறார். அதன் முதற்கட்டமாக நெல்லையில் ஆகஸ்ட் 22ஆம் தேதி பூத் கமிட்டி நிர்வாகிகளின் மாநாடு நடத்தப்பட உள்ளது.
இந்த மாநாட்டில் தென் மாவட்டங்களைச் சேர்ந்த 30 தொகுதிகளுக்கான பூத் கமிட்டி நிர்வாகிகள் பங்கேற்க உள்ளனர். இதற்கான பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. இதனிடையே நெல்லையில் நடக்கும் பூத் கமிட்டி மாநாட்டில் பங்கேற்க பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டா, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அல்லது மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆகியோரில் ஒருவர் வர வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது.
இதுதொடர்பாக டெல்லி மேலிடத்தில் நயினார் நாகேந்திரன் நேரடியாக பேசி இருந்தார். இந்த நிலையில் மத்திய அமைச்சர் அமித்ஷா நேரடியாக நெல்லை பூத் கமிட்டி மாநாட்டில் பங்கேற்க இருக்கிறார். இதனால் நயினார் நாகேந்திரன் தரப்பு மிகுந்த உற்சாகத்தில் இருக்கிறது. ஏனென்றால் மதுரையில் நடைபெற்ற பாஜக பொதுக்கூட்டத்தில் அண்ணாமலை பெயரை சொன்னதும் பெரிய வரவேற்பு எழுந்தது.
தற்போது நயினார் நாகேந்திரனின் சொந்த மண்ணில் நடக்கும் மாநாட்டிற்கு அமித்ஷா வரவிருப்பதால், தென் மாவட்டங்களைச் சேர்ந்த பாஜகவினரையும் திரட்டும் பணிகளில் நயினார் நாகேந்திரன் தரப்பு ஈடுபட்டு வருகிறது. இந்த மாநாட்டிற்கு பின் தமிழக பாஜகவின் அடுத்த திட்டம் குறித்து அமித்ஷா ஆலோசனை மேற்கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications