“டெல்லி குண்டுவெடிப்பு பயங்கரவாதிகள் பாதாளத்தில் இருந்தாலும் வேட்டையாடுவோம்”.. அமித் ஷா சபதம்!
டெல்லி: டெல்லி குண்டுவெடிப்பு சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளிகளை அவர்கள் பாதாள உலகத்தில் இருந்தாலும் அரசு வேட்டையாடும், டெல்லி கார் குண்டு வெடிப்பு சம்பவத்தில் குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை கிடைப்பதை உறுதி செய்வோம் என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.
நவம்பர் 10 ஆம் தேதி தலைநகர் டெல்லியில் செங்கோட்டை அருகே கார் வெடிகுண்டு மூலம் நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலில் 13 பேர் உடல் சிதறி உயிரிழந்தனர். 25க்கும் மேற்பட்டவர்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்திய இந்த சம்பவம் குறித்து தேசிய புலனாய்வு முகமை அமைப்பு விசாரணை நடத்தி வருகிறது.

டெல்லி கார் குண்டுவெடிப்பு வழக்கில் காயமடைந்தவர்களில் மேலும் இருவர் உயிரிழந்ததை அடுத்து, பலி எண்ணிக்கை 15 ஆக உயர்ந்துள்ளது. அதாவது குண்டுவெடிப்பில் காயம் அடைந்த லுக்மான் (50) மற்றும் வினய் பதக் (50) என இருவர் சசிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். மேலும் பலர் இன்னும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
செங்கோட்டை அருகே கார் குண்டுவெடிப்பை நடத்தியவர் டாக்டர் உமர் உன் நபி என்பதை தடயவியல் டிஎன்ஏ பரிசோதனையில் அவரது உயிரியல் மாதிரியை அவரது தாயின் மாதிரியுடன் பொருந்திப் பார்த்தி டெல்லி காவல்துறை உறுதிப்படுத்தியது. டாக்டர் உமர் உன் நபியுடன் தொடர்புடையதாகக் கூறப்படும் பயங்கரவாதக் குழு குறித்து என்ஐஏ தீவிரமாக விசாரணை நடத்தி வருகிறது.
இந்நிலையில், டெல்லி பயங்கரவாத தாக்குதலில் ஈடுபட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா உறுதி கூறியுள்ளார். டெல்லி சம்பவத்தால் நாடு முழுவதும் பெரும் அதிர்வலை ஏற்பட்ட நிலையில், பயங்கரவாதத்துக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமித் ஷா கூறியுள்ளார்.
ஹரியாணாவில் இன்று நடைபெற்ற வடக்கு மண்டல கவுன்சில் கூட்டத்தில் பங்கேற்ற உள்துறை அமைச்சர் அமித் ஷா பேசுகையில், "பிரதமர் மோடியின் தலைமையின் கீழ், பயங்கரவாதத்தை அதன் வேரில் இருந்து ஒழிப்பதில் அரசு உறுதியாக உள்ளது. டெல்லி குண்டுவெடிப்பில் ஈடுபட்ட குற்றவாளிகள், பாதாள உலகில் இருந்தாலும், அவர்களைத் தேடி வேட்டையாடுவோம். அவர்கள் செய்த குற்றத்திற்கு கடுமையான தண்டனை வழங்கப்படுவதை உறுதி செய்வோம்.
டெல்லி பயங்கரவாத தாக்குதலில் ஈடுபட்டவர்களுக்கு வழங்கப்படும் தண்டனை, நம் நாட்டில் இதுபோன்ற தாக்குதலை யாரும் நினைத்துப் பார்க்கக் கூடத் துணியக்கூடாது என்ற செய்தியை உலகுக்குக் காட்டும்" என்று தெரிவித்துள்ளார்.
மேலும் பேசிய அமித் ஷா, "போக்சோ சட்டத்தின் கீழ் பாலியல் குற்ற வழக்குகளில் விரைவான விசாரணை அவசியம். பெண்கள் மற்றும் சிறார்களை குறிவைத்து நடத்தப்படும் கொடூரமான குற்றங்களை எந்த நாகரிக சமூகமும் பொறுத்துக்கொள்ளாது. பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பு அரசின் முதன்மையான முன்னுரிமையாக உள்ளது. விசாரணைகளை விரைவுபடுத்தவும், சரியான நேரத்தில் நீதி வழங்கவும் விரைவு சிறப்பு நீதிமன்றங்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும்." எனக் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications