ஓபிஎஸ்ஸுடன் கைகுலுக்கல்.. எடப்பாடிக்கு நோ அட்மிஷன்.. 2024 லோக்சபா தேர்தல் வியூகத்தில் அமித்ஷா!
சென்னை: நாடாளுமன்றத் தேர்தலில் யாருடன் கூட்டணி என்பது குறித்து தமிழக பாஜக தலைமை அலுவலகமான கமலாலயத்தில் பாஜக நிர்வாகிகள் மத்திய அமைச்சர் அமித்ஷாவுடன் ஆலோசனை நடத்தப்பட்டது.
நாடாளுமன்றத் தேர்தல் வரும் 2024ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் நடைபெற வாய்ப்பிருக்கிறது. இந்த நிலையில் இந்த தேர்தலில் பாஜக ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் முனைப்பு காட்டி வருகின்றன. தென் மாநிலங்களில் பாஜக அரசுக்கு கடும் எதிர்ப்பு நிலவி வருகிறது. தெலுங்கானா மாநில முதல்வர் சந்திரசேகர ராவ் தேசிய அளவில் ஒரு கட்சியை தொடங்கிவிட்டார்.
அது போல் வடமாநிலங்களை எடுத்துக் கொண்டால் மேற்கு வங்க மாநிலத்தை எடுத்துக் கொண்டால் மம்தா பானர்ஜி எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து வலுவான வேட்பாளரை நிறுத்த வேண்டும் என வலியுறுத்தி வருகிறார். இதற்காக அவர் திமுக உள்ளிட்ட கட்சிகளுடன் பேசி வருகிறார்.

நிதீஷ் குமார்
மேலும் பீகார் முதல்வர் நிதீஷ் குமாரும் பாஜக கூட்டணியிலிருந்து வெளியேறிவிட்டார். இவர் எதிர்க்கட்சிகளின் பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்தப்படுவார் என கூறப்படுகிறது. அது போல் டெல்லி அரசுடனும் மத்திய அரசுக்கு ஏழாம் பொருத்தமாகவே உள்ளது.

குமரி டூ காஷ்மீர்
இந்த நிலையில் குமரி முதல் காஷ்மீர் வரை காங்கிரஸ் கட்சி எம்பி ராகுல் காந்தி இந்திய ஒற்றுமை யாத்திரையை நடத்தி வருகிறார். செல்லும் இடங்களிலெல்லாம் பாஜகவுக்கு எதிரான கருத்துகளை ராகுல் குறிப்பிட்டு வருகிறார். இந்த நிலையில் சென்னையில் தனியார் விழா ஒன்றில் கலந்து கொள்ள மத்திய அமைச்சர் அமித்ஷா வருகை தந்துள்ளார்.

பாஜக நிர்வாகிகள்
அவர் இன்று மதியம் பாஜக நிர்வாகிகளை சந்தித்தார். இந்த சந்திப்பில் நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுகவிடம் இருந்து எத்தனை இடங்களை கேட்டு பெறுவது என்பது குறித்து அமித்ஷா ஆலோசனை நடத்தினார். அது போல் எந்தெந்த தொகுதிகள் பாஜகவுக்கு வெற்றியை தரும் என்பது குறித்தும் அலசப்பட்டதாம்.

மதிய உணவுக்கு பிறகு
தற்போது மதிய உணவுக்கு பிறகு இந்த ஆலோசனை தொடங்கியது. இந்த ஆலோசனை கூட்டத்தில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, எம்எல்ஏ வானதி சீனிவாசன் உள்ளிட்ட 84 நிர்வாகிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. அவர்களின் கருத்துகளையும் அமித்ஷா கேட்டாராம். என்னதான் நாடாளுமன்றத் தேர்தலுக்கு இன்னும் ஒன்றரை ஆண்டுகளுக்கு மேல் இருந்தாலும் கடைசி நேரத்தில் நிலவும் குழப்பத்தை போக்க இப்போது பேசி வைத்துக் கொள்வது நல்லது என அமைச்சர் அமித்ஷா விரும்புகிறாராம்.

பாஜக தலைமை
இந்த ஆலோசனை தமிழக பாஜக தலைமையகமான கமலாலயத்தில் முதல் தளத்தில் நடைபெற்றது. நமக்கு கிடைத்த தகவலின்படி தமிழகம் மற்றும் புதுவையில் உள்ள 40 லோக்சபா தொகுதிகளில் 25 தொகுதிகளில் அதிமுக போட்டியிடுவது என்றும் மீதமுள்ள 15 இடங்களை கூட்டணி கட்சிக்கு ஒதுக்குவது என்றும் எடப்பாடி பழனிசாமி தரப்பு முடிவு செய்துள்ளதாக தெரிகிறது. இந்த முறை கூட்டணியில் தேமுதிகவையும் சேர்க்க முயற்சிக்கப்படுமாம். இதற்காக கடந்த முறை அவர்கள் கேட்ட தொகுதிகளை ஒதுக்கீடு செய்ய அதிமுக முன்வந்துள்ளதாகவும் தெரிகிறது. இவையெல்லாம் தகவலறிந்த வட்டாரங்கள் கூறிய தகவல்களே ஒழிய உண்மை நிலவரம் என்ன என்பது குறித்து தெரியவில்லை.

டெல்லி தலைமை
அதிமுக பிரிந்து கிடக்கும் சூழலில் டெல்லி தலைமையின் ஆதரவு எடப்பாடி பழனிசாமியை காட்டிலும் ஓபிஎஸ்ஸுக்கு இருப்பதாக சொல்லப்படுகிறது. இன்றைய தினம் அமித்ஷாவை சந்திக்க ஓபிஎஸ்ஸுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டதாக தெரிகிறது. ஆனால் எடப்பாடி பழனிசாமி அனுமதி வழங்கப்படவில்லை. எனினும் ஓபிஎஸ்ஸுடன் அமித்ஷா கைகுலுக்கல் மட்டுமே நடத்தினார் என்றும் அவருடன் அதிமுக விவகாரங்களை பேசவில்லை என்றும் தெரிகிறது. இதனால் கூட்டணி பேச்சுவார்த்தையை தமிழக பாஜக தலைமை யாருடன் நடத்தும் என்ற கேள்வி எழுந்துள்ளது.












Click it and Unblock the Notifications