2 நாட்கள் முகாமிட்டும்.. அமித்ஷாவை சந்திக்க வராத எடப்பாடி.. பின்னணியில் 2 முக்கிய காரணங்கள்!
சென்னை: மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா 2 நாள் பயணமாக தமிழ்நாடு வந்த போதும், அவரை எடப்பாடி பழனிசாமி நேரில் சந்திக்காதது விவாதப் பொருளாக மாறி இருக்கிறது. இதற்கு அமித்ஷாவின் டிமாண்ட்களை எடப்பாடி பழனிசாமி ஏற்க மறுப்பதும், எடப்பாடி பழனிசாமி ஒதுக்குவதாக கூறும் தொகுதிகளை அமித்ஷா ஏற்க மறுப்பதுமே காரணமாக சொல்லப்படுகிறது.
தமிழ்நாட்டில் சட்டசபைத் தேர்தலுக்கு இன்னும் 2 மாதங்கள் மட்டுமே இருக்கும் நிலையில், அதிமுக - பாஜக கூட்டணி கடந்த ஆண்டு ஏப்ரல் மாதமே உறுதி செய்யப்பட்டது. இந்த கூட்டணி அமைக்கப்பட்டு சுமார் 8 மாதங்கள் கடந்துவிட்ட சூழலில், தற்போது தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. இதனிடையே மத்திய அமைச்சர் அமித்ஷா 2 நாள் பயணமாக தமிழகம் வந்தார்.

தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரனின் பிரச்சார நிறைவு விழாவில் பங்கேற்ற அமித்ஷா, தமிழ்நாட்டில் ஏப்ரல் மாதம் மோடி தலைமையின் கீழ் என்டிஏ கூட்டணி ஆட்சி அமையும் என்று தெரிவித்தார். இதையடுத்து திருச்சியில் இருந்த அமித்ஷாவை அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்பி வேலுமணி சந்தித்து ஆலோசனை நடத்தினார்.
அந்த நேரத்தில் எடப்பாடி பழனிசாமி சேலம் மாவட்டத்தில் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். இதனால் அடுத்த நாளில் அமித்ஷா - எடப்பாடி பழனிசாமி சந்திப்பு நடக்கும் என்று பார்க்கப்பட்டது. ஆனால் கடைசி வரை இவர்களின் சந்திப்பு நடக்கவில்லை. இதற்கு 2 முக்கியமான காரணங்கள் சொல்லப்படுகிறது. அதாவது அமித்ஷா தரப்பில் ஒருங்கிணைந்த அதிமுக உருவாக வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.
அதாவது டிடிவி தினகரன் மற்றும் ஓபிஎஸ் ஆகிய இருவரையும் கூட்டணியில் இணைக்க வேண்டும் என்று கூறி இருக்கிறார். ஆனால் எடப்பாடி பழனிசாமி அதற்கு ஒப்புக் கொள்ள மறுப்பதாக கூறுகின்றனர். அதேபோல் பாஜகவுக்கு சுமார் 50 தொகுதிகள் வரை ஒதுக்க வேண்டும் என்று அமித்ஷா நேரடியாகவே கூறி இருக்கிறார்.
ஆனால் எடப்பாடி பழனிசாமியோ 28 தொகுதிகள் வரை மட்டுமே ஒதுக்கப்படும் என்று கூறுவதாக சொல்கிறார்கள். இதனால் அமித்ஷாவின் 2 முக்கிய டிமாண்ட்களையும் எடப்பாடி பழனிசாமி ஏற்க மறுத்து, எஸ்பி வேலுமணி மூலமாக பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார். இதனால் அமித்ஷா தரப்பில் அடுத்தக்கட்ட நடவடிக்கையை எடுக்க தயாராகி வருவதாக கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications