ஒரே ஒரு ஓட்டு கூட விழவில்லை.. தனது ஓட்டு கூட தனக்கு கிடைக்காத சோகத்தில் அமமுக வேட்பாளர்!
சென்னை: ஈரோடு மாவட்டம் பெருந்துறை ஊராட்சி ஒன்றியத்தில் 10 ஆவது வார்டில் போட்டியிட்ட அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தைச் சேர்ந்த வேட்பாளர் ஒரு வாக்குக் கூட வாங்கவில்லை.
தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படாத 9 மாவட்டங்களில் கடந்த 6 மற்றும் 9 ஆகிய தேதிகளில் உள்ளாட்சி தேர்தல் நடத்தப்பட்டது. இதன் வாக்கு எண்ணிக்கை நேற்று முதல் நடைபெற்று வருகிறது.
98 சதவீதம் வாக்கு எண்ணிக்கை முடிவடைந்த நிலையில் இன்று பிற்பகலுக்குள் முடிவடைந்துவிடும் என மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

திமுக முன்னிலை
இந்த நிலையில் உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட்ட பெரும்பாலான இடங்களில் திமுக முன்னிலை வகிக்கிறது. அது போல் பல இடங்களில் போட்டியிட்ட தேமுதிக, நாம் தமிழர் கட்சி, மக்கள் நீதி மய்யம், அமமுக ஆகிய கட்சிகள் ஒரு இடத்தில் கூட முன்னணியில் இல்லை. உள்ளாட்சி தேர்தலில் ஆளும் கட்சிதான் வெல்லும் என்பதையும் தாண்டி நிறைய விஷயங்கள் இருக்கின்றன என்பதை இந்த தேர்தல் புரிய வைத்துவிட்டது.

தேர்தலில் வெற்றி
அந்த வகையில் இந்த தேர்தலில் எதிர்பார்த்தவர்களுக்கு வெற்றி கிடைக்கவில்லை. ஆனால் எதிர்பாராதவர்களுக்கு வெற்றி கிடைத்துள்ளது. முன்னணி கட்சி சின்னத்தில் நின்று போட்டியிட்டு தோல்வியையும் கண்டுள்ளனர். யாருக்குமே பரீட்சயம் ஆகாத சின்னத்தில் போட்டியிட்டு வென்ற சுயேச்சையும் இருக்கிறார்.

5ஆவது வார்டு
இந்த நிலையில் ஈரோடு மாவட்டத்தில் 5ஆவது வார்டு மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் பதவிக்கான இடைத்தேர்தலில் திமுக வேட்பாளர் சதாசிவம் அதிமுக வேட்பாளர் தங்கராஜை விட 6,448 வாக்குகள் வித்தியாசத்தில் வென்றார். அது போல் கோவை மாவட்டத்தில் குருடம்பாளையம் ஊராட்சி 9ஆவது வார்டு உறுப்பினர் தேர்தலில் பாஜகவும் சுயேச்சையும் தலா ஒரு ஓட்டுகளை பெற்றுள்ளன.

9ஆவது வார்டு
தேமுதிகவை சேர்ந்த வேட்பாளர் 2 ஓட்டுக்களை பெற்றார். பெரியநாயக்கன்பாளையம் ஒன்றியம் குருடம்பாளையம் ஊராட்சி 9ஆவது வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. இந்த வார்டில் மொத்தம் 1,551 வாக்குகள் இருக்கும் நிலையில் 913 மட்டுமே பதிவானது. அதில் திமுக சார்பில் கட்டில் சின்னத்தில் போட்டியிட்டவர் 387 வாக்குகளை பெற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் 196 வாக்குகளை பெற்றார்.

அமமுக வேட்பாளர்
பெயின்டிங் பிரஸ் சின்னத்தில் போட்டியிட்ட தேமுதிக வேட்பாளர் 2 வாக்குகளை மட்டுமே பெற்றார். இந்த நிலையில் ஈரோடு மாவட்டம் பெருந்துறை ஊராட்சி ஒன்றியத்தில் 10 ஆவது வார்டில் போட்டியிட்ட அமமுக வேட்பாளர் சண்முகம் ஒரு வாக்கை கூட பெறவில்லை. இவரது வாக்கு வேறு வார்டில் இருந்ததால் தனது ஓட்டு கூட தனக்கு கிடைக்காத சூழல் ஏற்பட்டது.












Click it and Unblock the Notifications