தமிழக அரசின் அடுத்த ஆக்சன்.. ஆட்டோ, ஷேர் ஆட்டோ என்ன ஆகுறது? பாயிண்டை பிடித்த டிடிவி தினகரன்
சென்னை: தனியார் மினி பேருந்துகளுக்கு அனுமதி வழங்கி போக்குவரத்துத்துறையை படிப்படியாக தனியார் மயமாக்கும் நடவடிக்கையை உடனடியாக கைவிடுவதோடு, புதிய பேருந்துகளை கொள்முதல் செய்து பொதுமக்களுக்கு தேவையான போக்குவரத்து வசதியை அரசுப் போக்குவரத்துக் கழகம் மூலமாகவே ஏற்படுத்தி தருவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் கூறியுள்ளார்.
தமிழகத்தில் தற்போது சுமார் 3000 மினி பஸ்கள் இயக்கப்பட்டு வரும் நிலையில் அப்பேருந்து சேவையை மேம்படுத்த புதிய திட்டம் செயல்படுத்தப்படும் என தமிழக அரசு அறிவித்தது. இதற்கான திட்ட வரைமுறை கடந்த மாதம் வெளியானது.

அதில் போக்குவரத்து சேவை இருக்கும் இடங்களில் மேலும் கூடுதலாக நான்கு கிலோமீட்டர் மினி பேருந்துகளை இயக்கவும், தேவைக்கேற்ப சென்னையின் திருவொற்றியூர், மணலி, மாதவரம், பெருங்குடி உள்ளிட்ட மண்டலங்களில் மினி பேருந்துகளை இயக்க பரிசீலிக்க அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது.
இதற்கு தமிழ்நாடு மினி பேருந்து உரிமையாளர்கள் வரவேற்பு தெரிவித்த நிலையில், சிஐடியு, ஏஐடியுசி உள்ளிட்ட தொழிற்சங்கங்கள் கடும் கண்டனத்தை தெரிவித்து இருக்கின்றன. மேலும் இது தொடர்பான கருத்து கேட்பு கூட்டமும் நடைபெற்றது. இதற்கு தொழிற்சங்கங்களோடு, ஆட்டோ ஓட்டுனர்களும் எதிர்ப்பு தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில் தனியார் மினி பேருந்துகளுக்கு அனுமதி வழங்கி போக்குவரத்துத்துறையை படிப்படியாக தனியார் மயமாக்கும் நடவடிக்கையை உடனடியாக கைவிட வேண்டும் என அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,"தமிழகத்தில் கூடுதலாக தனியார் மினி பேருந்துகளை இயக்க அனுமதிப்பது அரசுப் போக்குவரத்துக் கழகங்களை சீர்குலைக்க வழிவகுக்கும். போக்குவரத்துத்துறையை படிப்படியாக தனியார் மயமாக்கும் நடவடிக்கைகளை தமிழக அரசு உடனடியாக கைவிட வேண்டும்.
சென்னை புறநகர் பகுதிகளான திருவொற்றியூர், மணலி, மாதவரம், அம்பத்தூர், வளசரவாக்கம், ஆலந்தூர், பெருங்குடி, அம்பத்தூர் உட்பட தமிழகம் முழுவதும் தனியார் மினி பேருந்துகளை இயக்குவது தொடர்பான தமிழக அரசின் புதிய வரைவுத்திட்ட அறிக்கையும், அது தொடர்பான இன்று நடைபெற்ற கருத்துக் கேட்பு கூட்டமும் அரசுப் போக்குவரத்துத்துறையை தனியார்மயமாக்கும் வகையிலேயே அமைந்துள்ளன.
தமிழகத்தில் லாப நோக்கத்தை மட்டுமே குறிக்கோளாய் கொண்டு விதிமுறைகளை மீறி இயங்கி வரும் தனியார் பேருந்துகளை கட்டுப்படுத்த முடியாத நிலையில், தற்போது சென்னை உட்பட தமிழகம் முழுவதும் கூடுதல் மினி பேருந்துகளை இயக்கும் அனுமதியை தனியாரிடம் வழங்குவது மேலும் மோசமான விளைவையே ஏற்படுத்தும் என போக்குவரத்துத் தொழிற்சங்கங்கள் குற்றம் சாட்டியுள்ளன.
ஏற்கனவே அரசுப் பேருந்துகளின் வழித்தடங்கள் இருக்கும் இடங்கள் உட்பட 25 கிலோ மீட்டர் தூரம் வரை தனியார் மினி பேருந்துகளை இயக்க அனுமதிப்பது, சென்னை போன்ற பெருநகரங்களில் ஆட்டோ (Auto), ஷேர் ஆட்டோ (Share Auto), மேக்சி கேப் (Maxi Cab ) போன்ற வாகனங்களை இயக்கி வரும் தொழிலாளார்களின் வாழ்வாதாரத்தை கேள்விக்குறியாக்கும் வகையில் அமைந்துள்ளது.
எனவே, தனியார் மினி பேருந்துகளுக்கு அனுமதி வழங்கி போக்குவரத்துத்துறையை படிப்படியாக தனியார் மயமாக்கும் நடவடிக்கையை உடனடியாக கைவிடுவதோடு, புதிய பேருந்துகளை கொள்முதல் செய்து பொதுமக்களுக்கு தேவையான போக்குவரத்து வசதியை அரசுப் போக்குவரத்துக் கழகம் மூலமாகவே ஏற்படுத்தி தருவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்துகிறேன்." என கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications