மீண்டும் பெரிய முடிவு எடுத்த டிடிவி தினகரன்.. கட்சி தொடங்கியது முதல் அமைத்த கூட்டணி இப்படித்தான்!
சென்னை: மீண்டும் என்.டி.ஏ கூட்டணியில் இணைந்துள்ளது அமமுக. 2024 லோக்சபா தேர்தலில் பாஜக உடன் கூட்டணி அமைத்து போட்டியிட்ட தினகரன், அதிமுக - பாஜக கூட்டணி அமைந்ததால் அந்தக் கூட்டணியில் இருந்து விலகினார். இந்நிலையில், சட்டசபை தேர்தல் நெருங்கி வரும் சூழலில் மீண்டும் என்.டி.ஏ கூட்டணியில் இணைந்துள்ளார். அமமுக இதுவரை அமைத்த கூட்டணிகள் பற்றி பார்க்கலாம்.
தமிழக சட்டசபை தேர்தல் இன்னும் சில மாதங்களில் நடைபெற இருக்கிறது. அனைத்து கட்சிகளும் தீவிரமாக தேர்தல் பணிகளில் ஈடுபட்டு வருகின்றன. ஆளுங்கட்சியான திமுக ஆட்சியை தக்கவைத்துக் கொள்ளவும், எதிர்க்கட்சியான அதிமுக ஆட்சியை பிடிக்கவும் கங்கணம் கட்டிக்கொண்டு செயல்படுகின்றன. ஆளுங்கட்சியான திமுக கூட்டணியில் காங்கிரஸ், மதிமுக, கம்யூனிஸ்ட் கட்சிகள், விடுதலை சிறுத்தைகள், இந்திய யூனியன் முஸ்லீம் லீக், மக்கள் நீதி மய்யம் என பல கட்சிகள் உள்ளன.

டிடிவி தினகரன்
திமுகவுக்கு எதிராக வலிமையான கூட்டணியை உருவாக்க அதிமுக பாஜக கூட்டணி முயன்று வருகிறது. அதற்கு ஏற்றவாறு வியூகம் அமைத்து வருகிறது. பாஜக தலைமையில் இருந்து மூத்த தலைவர்கள் பல்வேறு கட்டங்களாக பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர். இதற்கிடையே, கூட்டணி தொடர்பாக இன்று அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தனது கட்சி நிர்வாகிகளிடையே அவசர ஆலோசனை மேற்கொண்டார்.
அதிமுக பாஜக கூட்டணி கட்சிகளின் முதல் பிரசார பொதுக்கூட்டம் மதுராந்தகத்தில் 23 ஆம் தேதி நடக்கிறது. இதில் பிரதமர் மோடி பங்கேற்று பேசுகிறார். கூட்டணி கட்சிகளின் தலைவர்கள் பேச இருக்கிறார்கள். எனவே கூட்டணியை இறுதி செய்யும் பணிகள் வேகமாக நடந்து வருகிறது. தற்போது வரை அதிமுக பாஜக கூட்டணியில் பாமக (அன்புமணி). தமாக, புதிய நீதிக்கட்சி, இந்திய ஜனநாயக கட்சி இடம்பெற்றுள்ளது.
என்.டி.ஏ கூட்டணியில் அமமுக
இந்தக் கூட்டணியில் தேமுதிக, அமமுகவை சேர்க்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகின. இந்த நிலையில் அதிமுக - பாஜகவின் தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைவதாக அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் அதிரடியாக அறிவித்துள்ளார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து வெளியேறிய நிலையில் மீண்டும் இணைவதாக தெரிவித்துள்ளார்.
சென்னையில் இன்று நடைபெற்ற மாவட்ட செயலாளர்கள் கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த டிடிவி தினகரன், "அதிமுக - பாஜக கூட்டணியில் இணைந்து 2026 சட்டமன்ற தேர்தலை சந்திக்கிறோம். தமிழகத்தில் ஜெயலலிதா ஆட்சியை மீண்டும் அமைக்கும் நோக்கில் தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைகிறோம். பழைய விஷயங்களை நினைத்துக் கொண்டு கட்சி மற்றும் தமிழ்நாட்டு நலனை பின்னுக்கு தள்ளிவிடக் கூடாது. எங்களுக்குள் நடப்பது பங்காளி சண்டைதான். விட்டுக் கொடுப்பவர் கெட்டுப் போவதில்லை." எனத் தெரிவித்தார்.
அமமுக
மதுரை மாவட்டம் மேலூரில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் தனது புதிய கட்சியின் பெயர் மற்றும் கொடியை கடந்த 2018 மார்ச் மாதம் அறிவித்தார் தினகரன். அந்தக் கூட்டத்தில் தமது கட்சியின் பெயர் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் என்று அறிவித்தார், கறுப்பு, வெள்ளை, சிவப்பு நிற கொடியில் ஜெயலலிதாவின் படம் இடம் பெற்ற கொடியையும் அறிமுகம் செய்தார். இரட்டை இலையையும், அதிமுகவையும் மீட்கும் வரை இந்த பெயரில் செயல்படுவோம் என்று டி.டி.வி. தினகரன் அப்போது தெரிவித்தார்.
2019 லோக்சபா தேர்தல்
2019 நாடாளுமன்றத் தேர்தல் மற்றும் 22 சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தலின் போது உச்சநீதிமன்ற வழிகாட்டுதலின்படி, தேர்தல் ஆணையம் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்திற்கு பரிசுப் பெட்டி சின்னத்தைப் பொதுச்சின்னமாக வழங்கியது. இந்தக் கட்சியானது தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்யப்படாததால் இந்த அணிக்குப் பொதுவான சின்னம் வழங்கியபோதும், அவர்கள் சுயேச்சைகளாகவே கருதப்படுவார்கள் எனவும் உச்சநீதிமன்றம் அறிவித்தது. இந்த தேர்தலில் தென் தமிழகத்தில் சில தொகுதிகளில் கணிசமான வாக்குகளைப் பெற்றாலும், அனைத்து சீட்களிலும் தோல்வி அடைந்தது அமமுக. இந்த தேர்தலில் 5.38% வாக்குகளைப் பெற்றது அமமுக.
2021 சட்டசபை தேர்தல்
2021 சட்டசபை தேர்தலில் அமமுக, தேமுதிக உடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டது. அமமுக 161 இடங்களிலும் தேமுதிக 60 தொகுதிகளிலும், எஸ்.டி.பி.ஐ கட்சி 6 இடங்களிலும் மேலும் சில கட்சிகளும் கூட்டணி அமைத்து தேர்தலைச் சந்தித்தன. அனைத்து இடங்களிலும் அமமுக கூட்டணி தோல்வியைத் தழுவியது. கோவில்பட்டி தொகுதியில் டிடிவி தினகரன் தோல்வி அடைந்தார். அமமுக 2.35% வாக்குகள் பெற்றது.
2024 லோக்சபா தேர்தல்
2024 லோக்சபா தேர்தலில் பாஜக உடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டது அமமுக. பாஜக கூட்டணியில் தேனி, திருச்சி ஆகிய 2 லோக்சபா தொகுதிகளில் போட்டியிட்ட அமமுக 2 தொகுதிகளிலும் தோல்வி அடைந்தது. தேனியில் டிடிவி தினகரன் தோல்வி அடைந்தார். அமமுக 0.91% வாக்குகளைப் பெற்றிருந்தது.
இதைத்தொடர்ந்து கடந்த ஆண்டு, அதிமுக கூட்டணியில் பாஜக இணைந்ததை அடுத்து, தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து டிடிவி தினகரன் விலகினார். அதன்பின்பு, எடப்பாடி பழனிசாமியை கடுமையாக விமர்சித்து வந்தார். கட்சிக்கே துரோகம் செய்தவர் எடப்பாடி எனவும் டிடிவி தினகரன் கூறி வந்தார். இதற்கிடையே பாஜகவின் அழுத்தத்தால் டிடிவி தினகரனை கூட்டணியில் சேர்ப்பதற்கு எடப்பாடி பழனிசமி கிரீன் சிக்னல் காட்டியுள்ளார். இதனை அடுத்து, அவர் தற்போது மீண்டும் அதிமுக பாஜக கூட்டணியில் இணைந்துள்ளார்.












Click it and Unblock the Notifications