சினிமாவை மிஞ்சும் பயங்கரம்.. கொல்லப்பட்ட விஏஓ லூர்து! மக்களை வஞ்சிக்கும் திமுக அரசு - டிடிவி கண்டனம்
சென்னை: மணல் கொள்ளை விவகாரத்தில் தூத்துக்குடியை சேர்ந்த கிராம நிர்வாக அலுவலர் அலுவலகத்தில் வைத்தே வெட்டிக் கொல்லப்பட்ட சம்பவத்துக்கு அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கண்டனம் தெரிவித்து இருக்கிறார்.
இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்டு உள்ள அவர், “மணல் கொள்ளை தொடர்பான விவகாரத்தில், தூத்துக்குடி மாவட்டம், முறப்பநாடு அருகே கோவில்பத்து கிராம நிர்வாக அலுவலர் திரு.லூர்து பிரான்சிஸ் அவரது அலுவலகத்தில் பணியில் இருக்கும் போதே வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார் என்ற செய்தி அதிர்ச்சியளிக்கிறது.

தமிழகத்தில் நடைபெறும் பல்வேறு கனிம வளக் கொள்ளைகளைத் தி.மு.க. அரசு தடுத்து நிறுத்தாமல் வேடிக்கை பார்ப்பதினால் ஏற்பட்ட விளைவுதான் இந்தப் படுகொலை. கடந்த இரண்டு ஆண்டுகளாக திராவிட மாடல் ஆட்சி என சொல்லி, ஒருபுறம் மக்களை தி.மு.க. அரசு வஞ்சித்து வருகிறது. மறுபுறம் கனிம வளக் கொள்ளையைத் தடுக்க முற்படும் நேர்மையான அதிகாரிகள் மீது தாக்குதலும், படுகொலைகளும் சமூக விரோதிகளால் சர்வ சாதாரணமாக நடைபெற்று வருகிறது.
இதுவரை நடைபெற்ற தாக்குதல்களுக்கும் படுகொலைகளுக்கும் என்ன பதில் சொல்லப் போகிறார் முதல்வர்? பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் தீர்வு என்றால் இந்தப் படுபாதக செயல்களில் ஈடுபடும் சமூக விரோதிகள் மீதான நடவடிக்கை என்ன? இந்த சமூக விரோத சக்திகளைப் பார்த்து அரசு அஞ்சி நடுங்குகிறதா..” என்று கேள்வி எழுப்பி உள்ளார்.
முன்னதாக விஏஒ கொலைக்கு இரங்கல் தெரிவித்த முதலமைச்சர் ஸ்டாலின் ரூ.1 கோடி நிவாரணமாக அறிவித்தார். இதுகுறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில், “தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் வட்டம், முறப்பநாடு கோவில்பத்து கிராம நிர்வாக அலுவலராகப் பணிபுரியும் திரு. லூர்து பிரான்சிஸ் (வயது 53) த/பெ. திரு.யேசுவடியான், என்பவரை இன்று மதியம் அவர் அலுவலகத்தில் பணியில் இருந்தபோது இரண்டு நபர்கள் அரிவாளால் வெட்டியுள்ளனர்.
தலை மற்றும் கைகளில் பலத்த காயமுற்ற திரு. லூர்து பிரான்சிஸ் அவர்கள் அவசர சிகிச்சைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்துள்ளார். இவரைத் தாக்கிய இரு நபர்களில் ராமசுப்பு என்பவர் உடனடியாகக் கைது செய்யப்பட்டுள்ளார்.
முதற்கட்ட விசாரணையின்படி, ராமசுப்புவின் மீது திரு.லூர்து பிரான்சிஸ், கிராம நிர்வாக அலுவலர் அளித்த புகாரின் பேரில், கடந்த வாரம் மணல் கடத்தல் வழக்கு பதிவு செய்யப்பட்டதால், ஆத்திரம் அடைந்த ராமசுப்பு மற்றொரு நபரை அழைத்துக் கொண்டு அவரை வெட்டியதாகத் தெரிய வருகிறது. இதுகுறித்து, காவல் துறையின் மூலம் உரிய மேல் விசாரணை நடைபெற்று வருகிறது.
திரு. லூர்து பிரான்சிஸ், கிராம நிர்வாக அலுவலர் பணியிலிருக்கும்போது வெட்டிக் கொல்லப்பட்ட சம்பவம் நமக்கெல்லாம் மிகுந்த துயரத்தினை அளித்துள்ளது. தம் கடமையை முறையாக நிறைவேற்றி, அதன் காரணமாக உயிரிழந்த கிராம நிர்வாக அலுவலரின் பொறுப்புணர்வையும், கடமை உணர்ச்சியையும் தமிழ்நாடு அரசு போற்றுகின்றது.
இக்கொடிய சம்பவத்தில் உயிரிழந்த திரு.லூர்து பிரான்சிஸ் அவர்கள் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், வருத்தத்தையும் தெரிவித்துக்கொள்கிறேன். மேலும், திரு. லூர்து பிரான்சிஸ் அவர்களின் குடும்பத்தினருக்கு அரசு சார்பாக உடனடியாக முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து ஒரு கோடி ரூபாய் நிதியுதவியும் அவரது குடும்பத்தில் ஒருவருக்கு அரசு பணி வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன்.” என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.












Click it and Unblock the Notifications