அடியோடு மறக்கப்படும் பூர்வீகக் கட்டட கலை! கன்னியாகுமரியில் மழையால் வீடுகள் சரிவது எதனால்?
சென்னை: கன்னியாகுமரியில் பருவமழைக் காலங்களில் வீடுகளில் விரிசல், மழை நீர்க் கடிவு, கட்டட சரிவுகள் ஏற்படுவது ஏன் என்பது தெரியுமா?
இதுகுறித்து கட்டட வடிவமைப்பாளர் மற்றும் உதவி பேராசிரியை நிவேதா வேலன் ஒன் இந்தியா தமிழுக்கு பிரத்யேகமாக அளித்த கட்டுரையில் கூறியிருப்பதாவது: உப்புக்காற்று வீச முப்பெரும் கடல்களின் காட்சியை காட்டும் கடவுளின் பெயரை பெற்ற நிலம் கன்னியாகுமரி. சூரிய உதயத்தையும் அஸ்தமனத்தையும் ஒரு சேர காட்டும் கடற்கரை, இயற்கையிலேயே கடினமான நிலப்பரப்புகள், மலை மேடுகள், அதீத மழைப் பொழிவு என பன்முகத்தன்மை கொண்ட நிலமாக விளங்குகிறது.
முற்றம்

ஆகையால் கன்னியாகுமரியில் மழைக் காலங்களில் வீடுகளில் விரிசல், மழை நீர் கசிவு, கட்டட சரிவுகளை பார்க்கலாம். இத்தகைய சூழலில் மலை சரிவுகளில் கட்டப்படும் கட்டடங்கள் பேரழிவுகளால் பாதிக்கப்படக் கூடிய தன்மை அதிகம். எனவே இவற்றை போன்ற இடங்களில் நிலம் சார்ந்த கட்டுமானம் திட்டமிடல் மற்றும் வடிவமைப்பு ஆகியவற்றின் தேவை பெரும் முக்கியத்துவம் பெறும்.
அவ்வாறு பொருட்படுத்தாமல் கட்டினால் பிற்காலத்தில் கட்டடத்திற்கு கடுமையான சேதங்கள் உண்டாகும். இன்றைய காலகட்டத்தில் மானுட நல்வாழ்விற்கும் பொழுதுபோக்கிற்காகவும் காடுகள் அருகே அமைக்கப்படும் குடியிருப்புகள், உல்லாச போக்கிடங்கள் கட்டுமானம், விலங்குகளின் வாழ்வாதாரத்தை மட்டும் பாதிக்காமல் அரியவகை தாவரங்களையும் அழிகின்றன.
மழையால் சேதமடைந்த வீடு

மலை கிராமங்களில் நகரமயமாவதன் வளர்ச்சியை கட்டுப்படுத்த, அதன் சுற்றுச்சூழல் பாதிப்பை குறைக்க விதிக்கப்படும் கட்டட கட்டுப்பாடுகள், சூழலுக்கு பொருத்தமற்ற அதிவேக கட்டுமானங்களுக்கு வழிவகுக்கின்றன. நகர்ப்புறங்களில் இடபற்றாக்குறைக்கும் அதிவேக வாழ்வியலுக்காகவும் கட்டப்படும் நவீனமயமான பல அடுக்குமாடி குடியிருப்பு கன்னியாகுமரி போன்ற இடங்களில் கட்டப்படும்போது அது குடியிருப்பாளர்களின் புகலிடத் தேவையை போக்குமே தவிர நிலத்தின் சூழலை கணக்கில் கொள்ளாமல் கட்டப்படுவதால் நுட்பமான இயற்கை சுற்றுச்சூழல் அமைப்புக்கு அது சேதத்தை ஏற்படுத்துவதோடு சரிவான நிலப்பரப்பில் பொருத்தமற்ற கட்டுமானமாகவே அது பார்க்கப்படும்.
எனினும் அதிகரித்து வரும் நகரமயமாக்கல் காரணமாக மலைப்பாங்கான பிராந்தியத்தில் நிலையான வளர்ச்சி தேவைப்படுகிறது. மலை குடியிருப்புகளில் கட்டட சட்டங்கள் பொருளாதார விரிவாக்கம் மற்றும் வேகமான நகரமயமாக்கல் மட்டுமே கருத்தில் கொள்ளாமல் சூழலுக்கு பொருத்தமான நவீன கட்டுமானங்கள் இயற்கைக்கு பாதிப்பு ஏற்படாமல் இருக்க வேண்டும் என்பது அவசியம்.
நிலைத்தன்மை, அணைப்புச் சுவர்

தற்போதைய நவீன கட்டடக் கலையில் அழகியல் வழி இயக்கப்படுகிறது. பெரும்பான்மையான நவீன கட்டட பொருள்கள் தனித்துவமான மலை சரிவுகளுக்கே உண்டான சூழல் மாற்றங்களுக்கு தகவமைத்துக் கொள்வது கடினம். மண்ணின் திறன் பகுத்தாயாமல் அஸ்திவாரம் அமைப்பது, சரிவான நிலப்பரப்பில் கட்டடம் அமைக்க மண்ணை அப்புறப்படுத்தல், நிரப்புதல், அத்துடன் அதிதீவிர மழைப் பொழிவு காலங்களில் சேதமடையும் கட்டட பொருட்களை பயன்படுத்துவது என கட்டுமான புரிதல் இல்லாமை செலவுகளைத்தான் அதிகரிக்கும்.
இதற்கு விதிவிலக்காக பூர்வீக கட்டடக் கலை நடைமுறைகள் நிலையானதாக இன்றும் பார்க்கப்படுகிறது. பழங்காலங்களில் ஒரு புகலிடம் மனிதனுக்கானது மட்டுமாக இருக்க முடியாது, விலங்குகள், ஊர்வன மற்றும் பறவைகளுக்குமான புகலிடமும்தான். சில நேரங்களில் தாவரங்களும் பற்றி வளரும். குறைந்தபட்சம் நம் முன்னோர்கள் அப்படித்தான் வாழ்ந்தார்கள். பூர்வீக கட்டடக் கலை பல தலைமுறைகளாக திரட்டப்பட்ட அறிவிலிருந்து உருவானவை.
மழையால் சுவரில் ஏற்பட்ட விரிசல்கள்

அது குடியிருப்பாளர்கள் தேவைகளுடன் வடிவமைப்பு தேவைகளின் தொடர்பு, கட்டமைப்பு, சமூக மற்றும் கால நிலை ஆகியவற்றுடன் ஒத்து போகும். இதன் வினையாக பயனுள்ள சிறந்த நிலையான வடிவமைப்பு ஏற்படுகிறது. பூர்வீக வட்டார அல்லது உள்ளூர் கட்டடக் கலை நுட்பங்களில் பல நன்மைகள் இருந்த போதிலும் அவை புதிய வளர்ச்சிக்கு ஏற்றுக் கொள்ளப்படுவதில்லை. இதன் விளைவாக மலைப்பாங்கான நிலப்பரப்பில் கட்டடம் ட்ட நிலையான கான்கிரீட் கட்டுமானம் தேவைப்படுகிறது.
கட்டப்படும் கட்டடங்கள் மக்களின் தேவைகளை பூர்த்தி செய்து நீடித்திருக்க உள்ளூர் பொருட்கள், பூர்வீக கட்டட நடைமுறைகளை பயன்படுத்துவதால் சுற்றுசூழலுக்கு ஏற்படும் பாதிப்புகள் குறையும். பல சமயங்களில் பூர்வீக கட்டடக் கலை குறைபாடற்றதாக தோன்றலாம். ஆனால் அதன் தேவை பற்றிய ஆழமான புரிதல் இருந்தால் மட்டுமே உகந்த இடத்தில் தேவைக்கேற்ப அதை பயன்படுத்த முடியும்.
மழை காலத்தில் சேதமடைந்த வீட்டின் மாடி

உள்ளூர் நடைமுறையில் கட்டப்படும் வீடுகள் பேரிடர்களை தாங்கி நிற்கின்றன. மேலும் அதன் அமைப்புகள் சமூக தொடர்பா தூண்டும் வகையில் வடிவமைக்கப்படுகின்றன. எவ்வாறு சமூக அக்கறையுள்ள நடைமுறைகள் நவீன கட்டமைப்புகளில் சேர்ப்பது நல்ல தீர்வாக அமையும். உதாரணமாக தற்போதுள்ள வீடுகளில் உட்புற வெப்பநிலையை வழங்க மின்சார கருவிகளின் உதவி தேவைப்படுகிறது. அங்கு மனித உடலுக்கு நன்மை தரும் இயற்கையான காற்றோட்டம் தடை படுகிறது. அதனால் நவீன கட்டுமானங்களில் முற்றத்தின் தேவை இன்றியமையாதது. முற்றமானது அடிப்படையில் கட்டடத்தின் மையத்தில் அமையும்.
ஓர் குடியிருப்பில் முற்றத்தை அமைப்பதின் விளைவாக அங்கு காற்றோட்டம் மேம்படும் . மேலும் அதன் அமைப்பு சுற்றியுள்ள திறப்புகள் வழி காற்றேட்டத்தை அதிகரிக்கும். இதனால் அவ்விடத்தில் குளிர்ச்சி, குறைந்த சூரிய ஊடுருவல் மற்றும் குறைந்த வெப்பநிலை காணலாம். கட்டடம் எப்போதும் காற்றோட்டத்தோடு இருப்பதால் மழை சேதங்கள் குறையும்.
மலை பகுதிகளில் கட்டட திட்டமிடல், வடிவமைப்பு கட்டுமானம் கடினமான ஒன்று. மலைப்பாங்கான பகுதிகளில் கட்டட கட்டுமானங்களை தொடங்குவதற்கு முன் நன்கு பகுத்தாய்வு செயய்யப்படுவது அவசியம். சில எளிய மாற்றங்களை கட்டடங்களில் அமைப்பதன் மூலம் குடியிருப்புகளின் வசதி பன்மடங்கு மேன்படும். கட்டடத்தின் திட்டம் கச்சிதமானதாகவும் அடிப்படையானதாகவும் இருக்க வேண்டும்.
நிலைத்தன்மை, நவீன வடிவமைப்பு, நிலம் சார் கட்டட மரபுகளை ஊக்குவிக்க வேண்டும். கட்டடத்தின் திட்டமிடல் மிக நுட்பமான வடிவங்களை தவிர்க்க வேண்டும். சரிவுகளில் மண்ணின் பக்கவாட்டு அழுத்தத்தை எதிர்க்கும் வகையில் அணைப்புச் சுவர்கள் பயன்படுத்த வேண்டும். சாய்வான கூரைகள் மழைநீர் வெளியேற்றத்தை மேம்படுத்துவதுடன் அது பொருத்தமாக ஒன்றுடன் ஒன்று இணைக்கப்படும் போது நீர் புகாத்தன்மையுடன் விளங்கும்.
மற்ற திசை நோக்கு நிலைகளைவிட வடக்கு நோக்கிய குடியிருப்புகளின் வெப்பநிலை குறைவாக இருக்கும். அதே சமயம் மேற்கு நோக்கிய முற்றம் உடைய அமைப்பில் அதிக வெப்பநிலை தென்படும். இவ்வாறு வரலாற்று சிறப்புமிக்க மலைவாழ் சமூகங்களில் பயன்படுத்தப்படும் பாரம்பரிய கட்டுமான நுட்பங்கள், கட்டட பொருட்கள் எதிர்கால வளர்ச்சிக்கான அடித்தளமாகவும் பொருத்தமான மலை குடியேற்ற கட்டுமானங்களை வடிவமைக்கவும் உதவும். மரம், கல், மண் மற்றும் மூங்கில் போன்றவை வலுவான தட்பவெப்பநிலைத்தன்மையை கொண்டவை. மலை நகரங்களின் சுற்றுச்சூழலுக்கு தீங்கு விளைவிக்காதவை.
இதற்கு உகந்ததாக தற்போதைய கட்டடக் கலையில் பார்க்கப்படுவது நிலைத்தன்மை. நிலைத்தன்மை என்பது அத்தியாவசிய வளங்களை குறைக்காமல் அல்லது சுற்றுச்சூழலை எதிர்மறையாக பாதிக்காமல் செயல்படுவது. பூமியில் இயற்கை வளத்தின் நிலைத்தன்மையை பற்றிய கவலை வளர்ந்து வருவதால் நிலைத்தன்மை அடைய பூர்வீக கட்டடக் கலையை பயன்படுத்துவது நல்ல தீர்வாக விளங்கும். இவ்வாறு நிவேதா பாலன் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications