10 நாள் குழந்தை கையில்.. அரசு தேர்வு மையத்தில் தோன்றிய இளம் அம்மா! தொட்டில் கட்டி உதவிய காலேஜ்.. செம
சென்னை: கல்வி என்பது ஒரு தனிமனிதனின் அறிவு வளர்ச்சியைத் தாண்டி, ஒரு சமூகத்தையே மாற்றும் வலிமை கொண்டது என்பதை மகாராஷ்டிராவைச் சேர்ந்த ஒரு இளம் தாய் மெய்ப்பித்துக் காட்டியுள்ளார்.. 21 வயதான ஷீதல் சந்திரகாந்த் சிட்டே என்ற அந்த பெண்ணை தான் ஊரே வாழ்த்தி கொண்டிருக்கிறது.. என்ன நடந்தது?
மகாராஷ்டிராவை சேர்ந்தவர் 21 வயதான ஷீதல் சந்திரகாந்த் சிட்டே.. இவர் தனது வாழ்க்கையில் எத்தனையோ போராட்டங்களைச் சந்தித்தவர்.. வறுமை காரணமாக பாதியிலேயே நின்ற தனது கல்வியை, கல்யாணத்துக்கு பிறகு விடாமுயற்சியுடன் மீண்டும் தொடர்ந்தார்..

அரசு பொதுத்தேர்வு
இறுதியில் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வுக்கும் தயாரானார்.. ஆனால் அப்படி தேர்வு நேரத்தில், அவருக்கு அழகிய குழந்தை பிறந்தது.. பொதுவாக பிரசவம் முடிந்து பெண்கள் நீண்ட காலம் ஓய்வு எடுப்பது வழக்கம், ஆனால் ஷீதலின் கல்வி தாகம் அவரை முடங்கி இருக்க விடவில்லை..
குழந்தை பிறந்து வெறும் 2 நாளிலேயே, உடல் வலியையும் சோர்வையும் பொருட்படுத்தாமல் தனது ஆங்கில தேர்வை எழுத அவர், எக்ஸாம் ஹாலுக்கு வந்தார்.. அவருக்கு துணையாக அவருடைய சகோதரி உடனிருந்து உதவி செய்தார்..
பிறகு 10 நாட்களே ஆன பச்சிளம் குழந்தையை கையில் ஏந்தியபடி, தன்னுடைய அடுத்த தேர்வான அரசியல் அறிவியல் பாடத்தை எழுதவும் ஆர்வத்துடன் வந்தார் ஷீதல்.. வீட்டில் குழந்தையை பார்த்துக் கொள்ள யாரும் இல்லாத சூழலில், தனது கணவர் வேலைக்கு சென்றதால் குழந்தையை தனியாக விட்டு வர முடியாமல் தேர்வு மையத்திற்கே அழைத்து வரும் நிலைக்கு அவர் தள்ளப்பட்டார்..
இளம்தாய் ஷீத்தல்
ஆனாலும் தேர்வு எழுதாமல் போவதை விட, குழந்தையுடனாவது சென்று தேர்வை எழுதி விட வேண்டும் என்பதில் அவர் உறுதியாக இருந்தார்..
ஷீத்தலின் இந்த அசாத்திய துணிச்சலைக் கண்ட பீப்பில்ஸ் கல்லூரி நிர்வாகம் நெகிழ்ந்து போனது.. அவருக்கு உதவுவதற்காக அந்தத் தேர்வு மையத்தில் "மாத்ருசினேக் கக்ஷா" என்ற பெயரில் தாய்மார்களுக்கான பிரத்யேக அறையை உடனடியாக ஏற்பாடு செய்தனர்..
அங்கு அந்த பிஞ்சு குழந்தை உறங்குவதற்கு வசதியாக ஒரு தொட்டிலையும் அமைத்துக் கொடுத்தனர்.. இதனால் தன்னுடைய குழந்தை பாதுகாப்பாகவும் அமைதியாகவும் இருப்பதை உறுதி செய்த பிறகு, ஷீதல் எந்தவிதப் பதற்றமும் இன்றி தனது தேர்வைச் சிறப்பாக எழுதி முடித்தார்.. ஒரு தாயாக தனது கடமையைச் செய்து கொண்டே, ஒரு மாணவியாக தனது எதிர்காலக் கனவையும் அவர் கைவிடாமல் பிடித்துக் கொண்டார்..
இந்த செய்தி மகாராஷ்டிரா மாநிலம் முழுவதும் காட்டுத்தீயாக பரவி, பலரது பாராட்டுகளைப் பெற்று வருகிறது..
10 நாள் குழந்தை - சபாஷ்
மாவட்டக் கல்வி அலுவலர் மாதவ் சால்கர் மற்றும் பள்ளி வாரிய நிர்வாகிகள் ஷீதலின் விடாமுயற்சியைப் பார்த்துப் பூரித்துப் போயுள்ளனர்.. கல்வி கற்பதற்குத் தடைகள் ஆயிரம் வந்தாலும், தெளிவான இலக்கும் மன உறுதியும் இருந்தால் எதையும் சாதிக்கலாம் என்பதற்கு இந்தச் சம்பவம் ஒரு சிறந்த எடுத்துக்காட்டாகும்..
படிப்புக்கு வயது அல்லது குடும்பச் சூழ்நிலை ஒருபோதும் தடையாக இருக்கக் கூடாது என்பதை உலகிற்கு உணர்த்திய ஷீதல், இன்று பல இளம் பெண்களுக்கு ஒரு மிகப்பெரிய நம்பிக்கையாகவும் முன்மாதிரியாகவும் மாறியுள்ளார்.. இக்கட்டான சூழலிலும் கல்வியை நேசிக்கும் அவரது இந்தச் செயல், சமூகத்தில் ஒரு பெரிய மாற்றத்திற்கான விதையாக அமைந்துள்ளது....!!!
மொத்தத்தில், பெண்களின் முன்னேற்றத்திற்கு தடைகள் தேவையில்லை என்பதை இந்த இளம் தாய் நிரூபித்துள்ளார்..!!












Click it and Unblock the Notifications