போன ஜென்மத்தில் பாவம் செய்தவர்கள் மாற்றுத்திறனாளிகளாக பிறக்கிறார்கள்.. விஷத்தை கக்கிய சொற்பொழிவாளர்
சென்னை: சென்னை அசோர் நகரில் உள்ள அரசு பள்ளியில் சொற்பொழிவாற்றிய நபர், போன ஜென்மத்தில் செய்த பாவம் செய்தவர்கள் இந்த ஜென்மத்தில் மாற்றுத்திறனாளிகளாகவும் ஏழைகளாகவும் பிறப்பதாக விஷத்தை கக்கும் வகையில் பேசியதை அடுத்து அது குறித்து விசாரணை நடைபெறுகிறது.
சென்னை அசோக் நகரில் அரசு பள்ளி இயங்கி வருகிறது. இது மேல்நிலைப் பள்ளியாகும். இங்கு 1000-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகிறார்கள். இந்த பள்ளியில் பிளஸ் 2 படித்து வரும் மாணவ, மாணவிகளின் மன அழுத்தத்தை போக்க ஒரு சொற்பொழிவு நிகழ்ச்சியை பள்ளி தலைமை ஆசிரியை முடிவு செய்தார்.

இதற்காக சொற்பொழிவாளர் மகாவிஷ்ணு என்பவர் வரவழைக்கப்பட்டார். அவர் திடீரென சம்பந்தமே இல்லாமல் மறுபிறவி குறித்து பேசியது சர்ச்சையாகியுள்ளது. அதாவது மகாவிஷ்ணு பேசுகையில் மற்ற பிறவிகளில் செய்த பாவங்களால்தான் மறுபிறவி கிடைக்கிறது.
போன ஜென்மத்தில் பாவம் செய்தவர்கள்தான் இந்த ஜென்மத்தில் மாற்றுத்திறனாளிகளாகவும் ஏழைகளாகவும் பிறக்கிறார்கள். அது போல் கால், கை இழந்து, கண் பார்வையற்றவர்களாக பிறப்பதற்கு பாவங்கள்தான் காரணம் என சிறிதும் மனசாட்சியே இல்லாமல் ஒருவரது இயலாமையை பேசியுள்ளார்.
அப்போது அங்கிருந்த பார்வையற்ற மாற்றுத்திறனாளி ஆசிரியர் ஒருவர், மகாவிஷ்ணுவின் பேச்சை கேட்டு அதிர்ந்து போய் கடுமையாக எதிர்த்துள்ளார். அப்போது அவரை , மகாவிஷ்ணு, அறிவற்றவர் என விமர்சனம் செய்தது பெரும் சர்ச்சையானது. இந்த வீடியோ சமூகவலைதளங்களில் வைரலானது.
இதற்கு மாற்றுத்திறனாளிகள் சங்கத்தினர், சமூக ஆர்வலர்கள், நெட்டிசன்கள் என கடும் கண்டனத்தை தெரிவித்தனர். படிக்கும் பிஞ்சுகளின் மனதில் நஞ்சை கலக்கும் விதமாக பேசுவதா என மகாவிஷ்ணுவுக்கு கண்டனங்கள் எழுந்தன. இது குறித்து தகவலறிந்த மாவட்ட முதன்மை கல்வி அலுவலர், தலைமை ஆசிரியை விளக்கம் அளிக்க உத்தரவிட்டுள்ளார்.
அந்த விளக்கத்தில் என்ன தலைப்பு கொடுக்கப்பட்டது, எந்த நிகழ்ச்சிக்காக மகாவிஷ்ணு வரவழைக்கப்பட்டார் என கேள்விகளை எழுப்பி நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. இந்த சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications