தாலியும் மாலையுமாய் மணக்கோலத்தில் மணமகள் செய்த காரியம்..நொந்து நூடுல்ஸ் ஆன 36 வயது மாப்பிள்ளை நாகேஷ்
சென்னை: 36 வயதுக்கு பிறகு தனக்கு திருமணமாவதால், மிகுந்த மகிழ்ச்சியில் இருந்தார் மாப்பிள்ளை நாகேஷ்.. திருமணத்தன்று எல்லோரும் கலகலப்பாக மணமக்களை ஆசீர்வதித்து, சொந்த கிராமத்திற்கு திரும்பினார்கள்.. ஆனால் மகிழ்ச்சியான அந்த நாளில் யாரும் எதிர்பாராத திருப்பம் ஒன்று நடந்தது. அதுதான் சோஷியல் மீடியாவில் தற்போது வைரலாகி வருகிறது.
மகாராஷ்டிரா மாநிலம் பீட் மாவட்டத்தில் உள்ளது அம்பாஜோகை என்ற தாலுகா.. இங்கு உள்ள ஒரு கிராமத்தான் கோட்ரி கிராமம். இங்கு வசிக்கும் நாகேஷ் ஜக்தாப் என்பவருக்கு 36 வயதாகியும் திருமணம் நடக்கவில்லை..

இதனால் நாகேஷூக்கு பெண் பார்க்கும் படலம் நீண்டு கொண்டே வந்தது.. இறுதியில் ஒரு புரோக்கர் மூலம் பிரித்தி ராவத் என்ற பெண்ணின் அறிமுகம் கிடைத்தது. பேச்சுவார்த்தைக்கு பிறகு, அந்த பெண்ணுடன் நாகேஷூக்கு திருமணம் நிச்சயமாகியது.
புரோக்கர் கமிஷன்
இந்த திருமண ஏற்பாட்டிற்காக, ரூ.1 லட்சத்து 90 ஆயிரம் கமிஷனாக நாகேஷிடமிருந்து வாங்கினாராம் புரோக்கர்.. ஆனால், 'பெண் வீட்டார் வரதட்சணை எதுவும் கேட்கமாட்டார்கள்' என்ற வாக்குறுதியும் நாகேஷூக்கு புரோக்கர் தந்துவிட்டாராம். அதனால்தான் 2 லட்சம் ரூபாய் வரை புரோக்கர் கமிஷனாக தந்துள்ளார்.. பிறகு பெரிய ஏற்பாடுகள் இல்லாமல் எளிமையான முறையில் திருமணத்தை நடக்க முடிவு செய்தது.
அதன்படியே காய்ஜ் தாலுகாவில் உள்ள ஒரு கோவிலில் மதியம் 12.30 மணிக்கு நாகேஷ் ஜக்தாப்புக்கும், பிரித்தி ராவத்துக்கும் திருமணம் கோலாகலமாக நடந்தது. அதன் பிறகு, திருமணத்துக்கு வந்திருந்த மணமகள் தரப்பினர் அனைவரும், மணமகன் வீட்டுக்கு சென்றனர்.
திருமணம் முடிந்து சில மணி நேரத்தில், மணமகள் பிரீத்தி கழிவறைக்கு செல்வதாக கூறிவிட்டு போனார்..அதாவது 12.30 மணிக்ககு திருமணம் என்றால், மாலை 4.30 மணியளவில் மணமகள் பிரித்தி ராவத் வீட்டின் வெளியே இருந்த கழிவறைக்கு செல்வதாக சொல்லிவிட்டு வெளியே வந்தார்.. பிறகு நைசாக அங்கிருந்து தப்பிவிட்டார்.
மணக்கோலத்தில் தனியாக
திருமணமான முதல் நாளே, அதுவும் மணக்கோலத்தில் மணப்பெண் ரோட்டில் தனியாக செல்வதை பார்த்த கிராம மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். 'ஏதோ தவறு நடக்கிறதே' என்று எண்ணி, உடனடியாக அவர்கள் மணமகன் வீட்டாருக்கு தகவல் கொடுத்தனர். சுதாரித்துக்கொண்ட மணமகன் வீட்டார், மணமகளைத் தேடிச் சென்றனர்.
திக்கோல் அம்பா பஸ் ஸ்டாண்டில், மணப்பெண் இருப்பதை தெரிந்துகொண்டு, அங்கே சென்று அவரை சுற்றி வளைத்து பிடித்தனர். அப்போது மணமகள் பிரித்தி, வீட்டை விட்டு வெளியே வந்தது குறித்து முன்னுக்கு பின் முரணாக பேசியிருக்கிறார்.
அத்தை எங்கே
இதனால் சந்தேகம் அடைந்த மணமகன் வீட்டார், உடனடியாகப் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து, மணமகள் பிரித்தி ராவத்திடம் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
இப்போதுதான், பல அதிர்ச்சி தகவல்களை மணமகள் போலீசாரிடம் சொன்னார்.. அதாவது, பிரித்தி ராவத் ஒரு திருமண மோசடி கும்பலை சேர்ந்தவர் என்பதும், பணத்திற்காகவே இந்த திருமணத்திற்கு சம்மதித்ததாகவும், கழுத்தை நீட்டிய சில மணி நேரங்களில் அங்கிருந்து தப்பி ஓட முயற்சித்ததாகவும் கூறினார்.
இந்த மோசடிக்கு மூளையாக இருந்தது பிரித்தியின் அத்தை, கல்யாண புரோக்கர் என்பது தெரியவந்தது.. இந்த கும்பல், பணத்திற்காக மணமகளாக நடித்து, திருமணத்துக்குப் பிறகு தப்பி செல்வதையே வழக்கமாக வைத்திருக்கிறார்கள் என்பதும் ஊறுதியானது..
இதையடுத்து, இது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார், தலைமறைவான மணமகள் பிரித்தி ராவத்தின் அத்தை, தரகர் உள்ளிட்ட 3 பேரையும் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
நாகேஷூக்கு அதிர்ச்சி
திருமணம் முடிந்து ஒருசில மணி நேரங்களிலேயே நடந்த இந்தத் துணிகர சம்பவம், கோட்ரி கிராம மக்களை அதிர்ச்சியடைய வைத்திருக்கிறது. கல்யாணமாகி 4 மணி நேரத்திலேயே தப்பிய மணமகள்' சம்பவம், தற்போது இணையத்திலும் பேசுபொருளாகி இருக்கிறது.
ஆனால், 36 வயது வரை கல்யாணமாகாமல் இருந்து, இப்போதுதான் புதுவாழ்வு கிடைக்க போவதாக ஆசையுடன் இருந்த நாகேஷ், இன்னும் இந்த அதிர்ச்சியில் இருந்து மீளவில்லையாம்.












Click it and Unblock the Notifications