பொதுத்தேர்வில் தமிழில் 100 மதிப்பெண் எடுத்தால் ரூ.10 ஆயிரம் பரிசு.. அன்பில் மகேஷ் அறிவிப்பு!
சென்னை: பொதுத் தேர்வில் தமிழ்ப் பாடத்தில் 100 மதிப்பெண்கள் எடுக்கும் மாணவர்களுக்கு ரூ.10 ஆயிரம் வழங்கப்படும் என்று அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவித்துள்ளார். 6 மாதத்தில் எங்களுக்கு பொதுத்தேர்தலும், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களான உங்களுக்கும் பொதுத்தேர்வும் வந்துவிடும் என்று கூறிய அன்பில் மகேஷ், நீங்களும் வெற்றி பெற வேண்டும், நாங்களும் வெற்றிபெற வேண்டும் என்று கூறியுள்ளார்.
பள்ளிக் கல்வித்துறை சார்பாக சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் முப்பெரும் விழா நடைபெற்றது. இந்த விழாவில் முதல்வர் ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர் அன்பில் மகேஷ் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இந்த விழாவில் ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் தேர்வு செய்யப்பட்ட 2,715 புதிய ஆசிரியர்களுக்கான நுழைவு நிலைப் பயிற்சியை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

அதேபோல் ரூ.277 கோடி மதிப்பிலான சாரண சாரணியர் தலைமை அலுவலகக் கட்டடம், 243 பள்ளிகளில் கட்டப்பட உள்ள வகுப்பாறைக் கட்டடங்கள், ஆய்வகக் கட்டடங்கள், குடிநீர் வசதிகள், சுற்றுச்சுவர் உள்ளிட்ட இதர கட்டடங்களுக்கும் அடிக்கல் நாட்டினார். அதேபோல் ரூ.94 கோடியில் பல்வேறு மாவட்டங்களில் கட்டப்பட்டுள்ள வகுப்பறைக் கட்டிடங்கள் உள்ளிட்டவற்றை திறந்து வைத்தார்.
இந்த விழாவில் அமைச்சர் அன்பில் மகேஷ் புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதன்படி அன்பில் மகேஷ் பேசுகையில், பள்ளிக் கல்வித்துறை கட்டடங்கள் சாதியை ஒழிக்கும் கட்டடங்களாக இருந்து வருகின்றன. 2,715 பட்டதாரி ஆசிரியர்கள் எங்களின் பள்ளிக் கல்வித்துறை குடும்பத்தில் இணைந்துள்ளனர். கல்வி, சுகாதாரம் ஆகிய இரண்டையும் இரு கண்களாக கருதி முதல்வர் செயல்படுத்தி வருகிறார்.
அதேபோல் ஆசிரியர்களே 6 மாதத்தில் உங்களுக்கு பொதுத் தேர்வு வந்துவிடும்.. எங்களுக்கு பொதுத் தேர்தல் வந்துவிடும்.. நாங்களும் வெற்றி பெற வேண்டும்.. நாங்களும் வெற்றி பெற வேண்டும்.. அரசு விழாவில் அரசியலா என்று நினைக்க வேண்டாம்.. நான் அரசியல் பேசவில்லை.. அறிவு சார்ந்த விஷயத்தை கொண்டு செல்வதற்காகவே இங்கு பேசுகிறேன்.
அதுமட்டுமல்லாமல் பொதுத் தேர்வுகளில் தமிழ்ப் பாடத்தில் 100க்கு 100 மதிப்பெண் பெறும் 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ரூ.10 ஆயிரம் வழங்கப்படும். அன்பு கரங்கள் மூலமாக பல திட்டங்கள் தமிழ்நாட்டில் செயல்படுத்தப்படுகின்றன. பள்ளிக் கல்வித்துறை தங்களது இலக்கை கடந்து உழைத்து வருகிறது என்றும் தெரிவித்தார். மேலும், கடந்த பொதுத்தேர்வில் தமிழில் முழு மதிப்பெண் பெற்ற 142 மாணவர்களுக்கு ரூ.10 ஆயிரம் வழங்கப்பட்டது.












Click it and Unblock the Notifications