வெள்ளை அறிக்கை எப்போது வரும்.. நிதி அமைச்சர் மரிய வில்சன் அப்டேட்
திருநெல்வேலி: சட்டமன்ற தேர்தல் தமிழகத்தில் பெரும் அரசியலில் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. திமுக, அதிமுகவை தோற்கடித்து தவெக ஆட்சிக்கு வந்துள்ளது. தவெகவின் செயல்பாடுகள் மீது ஆதரவும், எதிர்ப்பும் கலந்துகட்டி வருகிறது. லஞ்சத்தை ஒழித்து நேர்மையான ஆட்சியை வழங்குவோம். நிதிநிலை குறித்து வெள்ளை அறிக்கை வெளியிடுவோம் என்று முதலமைச்சர் விஜய் கூறினார். இந்நிலையில் வெள்ளை அறிக்கை தொடர்பாக நிதி அமைச்சர் அப்டேட் வெளியிட்டுள்ளார்.
திருநெல்வேலி பொறுப்பு அமைச்சராக நிதியமைச்சர் மரிய வில்சன் நியமிக்கப்பட்டுள்ளார். திருநெல்வேலி மாவட்ட ஆட்சியரகத்தில் அனைத்து துறை அதிகாரிகளுடன் ஆய்வு கூட்டம் நடத்தப்பட்டது. இதில் எம்எல்ஏக்கள், எம்பிக்கள் ஆகியோரும் கலந்து கொண்டனர். அப்போது மரிய வில்சன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், "வளர்ச்சி திட்ட பணிகள், தென்மேற்கு பருவமழை முன்னெச்சரிக்கை உள்ளிட்டவை குறித்து ஆலோசனை நடத்தினோம்.

வெள்ளை அறிக்கை எப்போது
காவல்துறையுடன் இணைந்து போதை பொருள் புழக்கத்தை எப்படி தடுப்பது, சட்டம் ஒழுங்கு பிரச்சனை உள்ளிட்டவை குறித்து ஆலோசனை செய்யப்பட்டது. திருநெல்வேலியில் குழந்தை பைக்கில் இருந்து கீழே விழுந்து உயிரிழந்த சம்பவம் மிகவும் துரதிர்ஷ்டவசமானது. இனிமேல் அப்படி ஒரு சம்பவம் நடக்காத வகையில் நடவடிக்கை எடுக்கப்படும். எல்லா பிரச்சனைகளையும் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும்.
அடுத்த 5 மாதங்களில் செய்ய வேண்டிய பணிகள் குறித்து அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது. தாமிரபரணி உள்ளிட்ட விவகாரங்களில் விரைந்து நடவடிக்கை எடுக்க சொல்லியுள்ளோம்.
வெள்ளை அறிக்கையை தமிழ்நாடே எதிர்பார்த்து கொண்டிருக்கிறது. கூடிய விரைவில் முதலமைச்சர் வெள்ளை அறிக்கை வெளியிடுவார். நாங்கள் ஆட்சிக்கு வந்தே 40 நாட்கள் தான் ஆகிறது. தாலிக்கு தங்கம், தாய் மாமன் சீர், மகளிர் உரிமைத் தொகை, மகளிர் பயணம் உள்ளிட்ட அனைத்து திட்டங்களையும் படிப்படியாக முதலமைச்சர் வாயிலாக தெரியவரும்.
பட்ஜெட் தாக்கல்
எல்லா திட்டங்களும் அவர் மூலம் அறிவிக்கப்பட்டு செயல்படுத்தப்படும். வருகிற 18 ஆம் தேதி சட்டமன்றம் கூடுகிறது. பட்ஜெட் தாக்கல் குறித்து சபாநாயகர் அறிவிப்பு வெளியிடுவார். அனைத்து திட்டங்கள் குறித்த அறிவிப்புகளையும் முதலமைச்சர் வெளியிடுவார்" என்றார். உள்ளாட்சி அமைப்புகளுக்கான நிதி வரவில்லை என்கிற கேள்விக்கு அவர் பதில் அளிக்க மறுத்துவிட்டார்.












Click it and Unblock the Notifications