அன்பில் மகேஷுக்கு 3 நாள் போலீஸ் காவல்.. நவ.4 வரை விசாரணை.. நீதிமன்றம் போட்ட உத்தரவு என்ன?
சென்னை: முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் கைது செய்யப்பட்ட விவகாரம் தமிழக அரசியல் வட்டாரத்தில் தொடர்ந்து பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. சிறையில் அவருக்கு வழங்கப்படும் உணவு, உடல்நிலை, போலீஸ் விசாரணை என பல்வேறு விஷயங்கள் நீதிமன்றம் வரை சென்றன. இந்த நிலையில், 3 நாள் போலீஸ் காவல் கோரிய வழக்கில் இன்று நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு அடுத்தகட்ட பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம் உள்ளிட்ட அனுமதிகளை பெற்றுத் தருவதாகக் கூறி பணம் வசூலிக்கப்பட்டதாக எழுந்த புகாரின் அடிப்படையில், திமுக முன்னாள் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி மீது சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

அன்பில் மகேஷ் வழக்கு
இந்த வழக்கில் அக்டோபர் 26-ம் தேதி அன்பில் மகேஷ் கைது செய்யப்பட்டார். இதையடுத்து, சென்னை ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவருக்கு நவம்பர் 6-ம் தேதி வரை நீதிமன்றக் காவல் விதிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து அவர் புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.
இதற்கிடையே, அன்பில் மகேஷை 5 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸார் மனு தாக்கல் செய்தனர். இந்த மனு விசாரணைக்கு வந்தபோது, போலீஸ் காவலுக்கு அன்பில் மகேஷ் தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.
நீதிமன்றத்தில் வாதம்
அன்பில் மகேஷ் ஏற்கனவே போலீஸ் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு அளித்துள்ளதாக அவரது வழக்கறிஞர்கள் தெரிவித்தனர். மேலும், தனியார் பள்ளிகளுக்கான அங்கீகாரத்தை புதுப்பிக்கும் காலத்தை மாற்றியது தொடர்பான அரசாணை, அதிகாரிகள் மற்றும் பள்ளி நிர்வாகிகளுடன் ஆலோசித்த பிறகே பிறப்பிக்கப்பட்டதாகவும் வாதிட்டனர்.
அமைச்சர் என்ற முறையில் கூட்டத்தில் பங்கேற்றதற்காக மட்டும் அன்பில் மகேஷை குற்றவாளியாக்க முடியாது என்றும், பணம் பெற்றதாகக் கூறப்படும் புகாரில் பணம் கொடுத்ததாகச் சொல்லப்படும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்காதது ஏன் என்றும் கேள்வி எழுப்பினர்.
ஜெயில் சாப்பாடு, தூக்கம்
இதற்கிடையே, சிறையில் அன்பில் மகேஷுக்கு வழங்கப்படும் உணவு தொடர்பாகவும் நீதிமன்றத்தில் முறையிடப்பட்டது. முதல் வகுப்பு சிறை வசதி வழங்க உத்தரவிடப்பட்டிருந்தும், மற்ற கைதிகளுக்கு வழங்கப்படும் உணவே அவருக்கும் வழங்கப்படுவதாகவும், அதை சாப்பிட முடியாததால் உடல் எடை குறைந்துள்ளதாகவும் அவரது தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
மேலும், இரவு நேரத்தில் விளக்குகளை அணைக்காமல் வைத்திருப்பதால் தூக்கமும் பாதிக்கப்படுவதாகவும், மருந்துகள் மற்றும் உடல்நிலைக்கு ஏற்ற உணவு வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை வைக்கப்பட்டது.
இதற்கு போலீஸ் தரப்பில் ஆஜரான சிறப்பு அரசு குற்றவியல் வழக்கறிஞர் உஷாராணி, இந்த வழக்கில் பணம் எங்கிருந்து வந்தது, யார் யாருக்கு சென்றது, அன்பில் மகேஷ் மற்றும் அவருடன் தொடர்புடையவர்களின் சொத்து விவரங்கள் என்ன என்பதைக் கண்டறிய வேண்டியுள்ளதாக தெரிவித்தார்.
குறிப்பாக, முத்துக்குமார், சுரேஷ் உள்ளிட்டோரின் பங்கு, பணப்பரிமாற்றம் மற்றும் பினாமி சொத்துகள் தொடர்பாக விசாரிக்க வேண்டியிருப்பதால் 5 நாட்கள் போலீஸ் காவல் தேவை என்றும் வலியுறுத்தினார்.
3 நாள் போலீஸ் காவல்
இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி எல்.எஸ். சத்தியமூர்த்தி, போலீஸார் கேட்ட 5 நாள் காவலுக்கு பதிலாக 3 நாட்கள் காவலில் வைத்து விசாரிக்க அனுமதி அளித்தார்.
விசாரணையின்போது அன்பில் மகேஷுக்கு உடல் ரீதியாகவோ, மன ரீதியாகவோ துன்புறுத்தல் அளிக்கக்கூடாது என்றும், உரிய உணவு மற்றும் மருத்துவ வசதிகளை வழங்க வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டார். மேலும், விசாரணைக் காலத்தில் அவரது வழக்கறிஞர் தினமும் சந்திக்கவும் அனுமதி வழங்கப்பட்டது.
இதையடுத்து, 3 நாட்கள் போலீஸ் காவல் முடிந்ததும் நவம்பர் 2-ம் தேதி மதியம் 12 மணிக்கு அன்பில் மகேஷை மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டது.
இன்று நீதிமன்றம் உத்தரவு
இதனிடையே, அன்பில் மகேஷ் தனக்கு ஜாமீன் வழங்கக் கோரி மனு தாக்கல் செய்துள்ளார். தன் மீது லஞ்சம் பெற்றதற்கான நேரடி ஆதாரங்கள் இல்லை என்றும், போலீஸ் விசாரணைக்கு ஏற்கனவே ஒத்துழைத்துள்ளதாகவும் அவர் மனுவில் குறிப்பிட்டுள்ளார். மேலும், தனக்கு கணைய அழற்சி பாதிப்பு இருப்பதால் தொடர்ந்து மருத்துவக் கண்காணிப்பு தேவைப்படுவதாகவும் தெரிவித்துள்ளார்.
அதேபோல், அவரது வீட்டில் நடைபெற்ற சோதனையின்போது பறிமுதல் செய்யப்பட்ட மின்னணு சாதனங்களை திரும்ப ஒப்படைக்கக் கோரியும் அவரது தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்த நிலையில், இன்று (நவம்பர் 2) அன்பில் மகேஷை மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, போலீஸ் காவல் கோரிய மனு விசாரணைக்கு வந்தது. அப்போது, அவரை 3 நாட்கள் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க சென்னை ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
இதன்படி, வரும் நவம்பர் 4-ம் தேதி மாலை 5 மணி வரை அன்பில் மகேஷிடம் போலீஸார் விசாரணை நடத்தலாம் என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஏற்கனவே 5 நாட்கள் போலீஸ் காவல் கோரப்பட்ட நிலையில், 3 நாட்கள் மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதனால், அடுத்த 3 நாட்களில் பணப்பரிமாற்றம், சொத்து விவரங்கள் உள்ளிட்ட வழக்கின் முக்கிய அம்சங்கள் குறித்து போலீஸார் விசாரணை நடத்த உள்ளனர்.


Click it and Unblock the Notifications
