Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தம்பி சின்னதுரையின் கல்வி செலவு முழுவதையும் அண்ணனாக நான் ஏற்கிறேன்.. அன்பில் மகேஷ் உருக்கமான வீடியோ!

Subscribe to Oneindia Tamil

சென்னை: நாங்குநேரியில் சக மாணவர்கள் அரிவாளால் வெட்டப்பட்ட சின்னதுரை மற்றும் அவரது தங்கையின் படிப்பிற்கான முழு செலவையும் அண்ணனாக நான் ஏற்கிறேன் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.

நெல்லை மாவட்டம் நாங்குநேரி அருகேயுள்ள கிராமத்தைச் சேர்ந்த கூலி தொழிலாளிகளின் மகன் சின்னதுரை(17) அரசு உதவி பெறும் பள்ளியில் பன்னிரெண்டாம் வகுப்பும், மகள் (14) ஒன்பதாம் வகுப்பும் படித்து வருகின்றனர். இந்நிலையில், பள்ளியில் படிக்கும் சக மாணவர்கள், மாணவன் சின்னதுரையை சாதி ரீதியாக இழிவுபடுத்தி, தொந்தரவு கொடுத்து வந்துள்ளனர்.

இதனையடுத்து மாணவர் சின்னதுரை ஒரு வாரமாக பள்ளிக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்துள்ளார். ஒருவாரம் ஆன நிலையில் பள்ளி நிர்வாகம் அவரது பெற்றோரிடம் தொடர்பு கொண்டு பள்ளிக்கு அனுப்பி வைக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளனர். அதனைத் தொடர்ந்து பள்ளிக்கு சென்ற மாணவரிடம் ஆசிரியர்கள் விசாரணை நடத்தியுள்ளனர். அதில் பள்ளியில் தன்னை சிலர் அடிப்பதாக கூறியுள்ளார் சின்னதுரை.

இதையடுத்து, ஆசிரியரிடம் எங்களை எப்படி நீ காட்டிக்கொடுக்கலாம் எனக் கேட்டு அந்த மாணவர்கள் சின்னதுரையிடம் சண்டைபோட்டு மிரட்டியுள்ளனர். அதைத்தொடர்ந்து இரவு 10.30 மணியளவில், 6 பேர் கொண்ட கும்பல், மாணவன் சின்னதுரை வீடு புகுந்து சரமாரியாக வெட்டியுள்ளனர். தடுக்க வந்த சின்னதுரையின் தங்கைக்கும் அரிவாள் வெட்டு விழுந்துள்ளது.

இதனையடுத்து அங்கு வந்த அக்கம் பக்கத்தினர் இருவரையும் மீட்டு நாங்குநேரி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பின்னர், திருநெல்வேலி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இந்த கொடூர அரிவாள் வெட்டு சம்பவத்தால் அதிர்ச்சியால் சின்னத்துரையின் தாத்தா கிருஷ்ணன் மாரடைப்பால் உயிரிழந்தார்.

பள்ளி மாணவர்கள் இடையே சாதி பிரச்சனையால் ஏற்பட்ட மோதல் கொடூரமான தாக்குதல் வரை சென்றது தமிழ்நாட்டையே அதிர்ச்சிக்கு உள்ளாக்கி உள்ளது. சின்னதுரையை தாக்கிய சக மாணவர்கள் உட்பட 6 பேர் மீது வழக்கு பதியப்பட்டது. பின்னர் அவர்கள் கைது செய்யப்பட்டு நெல்லை சிறார் கூர்நோக்கு இல்லத்தில் அடைக்கப்பட்டுள்ளனர்.

பள்ளியில் படிக்கும் மாணவர்கள் சக மாணவன் மீது இப்படியொரு கொடூரமான அரிவாள் வெட்டு சம்பவத்தில் ஈடுபட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி இச்சம்பவம் தொடர்பாக வேதனை தெரிவித்து ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். தம்பி சின்னதுரையின் கல்லூரி படிப்பிற்கான முழு செலவையும் அண்ணனாக நான் ஏற்கிறேன் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அந்த வீடியோவில் தெரிவித்துள்ளார்.

மேலும் அந்த வீடியோவில், "மாணவர்களே.. மிகப்பெரிய ஆளுமைகள் எல்லாம் நமக்கு நிறைய புத்திமதிகள் சொல்லி இருக்கிறார்கள். மனிதநேயம் என்றால் என்ன என்ற அடிப்படை விஷயத்தை பல்வேறு விதங்களில் வலியுறுத்தி இருக்கிறார்கள். அதெல்லாம் புத்திக்கே ஏறாமல் இருந்த மனிதர்களுக்கு எல்லாம் கொரோனா என்ற கொடூரமான நோய் நம்மை தாக்கும்போது தான் புத்திக்கு ஏறியது.

திமுக ஆட்சிக்கு வந்தபிறகு, பள்ளிக் கல்விக்காக முதல்வர் கொண்டு வந்துள்ள திட்டங்களால் இவ்வளவு பேர் பயன் பெறுகிறார்கள் என பெருமையாக பேசுகிறோம். நம்மை பார்த்து மற்ற மாநிலங்கள் எல்லாம் பொறாமைப்படும் அளவுக்கு பள்ளிக் கல்வியில் பல திட்டங்களை செயல்படுத்துகிறோம். இப்படியான சூழலில் 2 நாட்களுக்கு முன்பு ஒரு நிகழ்வு நடக்கிறது. அது எந்த மாவட்டம், எந்த பள்ளி என்றெல்லாம் நான் சொல்ல விரும்பவில்லை.

Anbil mahesh poyyamozhi says that he take care of chinnadurai education expenses

மாணவர்களுக்கு ஒரே ஒரு வேண்டுகோள், நீங்கள் பள்ளிக்கு செல்லும்போது புத்தியை கூர்மைப்படுத்திக்கொள்ள வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம். உங்களை கூர்நோக்கு இல்லத்தில் சேர்க்க வேண்டும் என்று ஆசைப்படவில்லை. ஆனால் ஒருசில சம்பவங்கள் எங்களை மிகவும் பாதிக்கிறது. நாங்கள் அறிவு சார்ந்து மாணவர்களை முன்னேற்ற நினைக்கும்போது, உங்களுக்குள் இருக்கும் வேற்றுமையால் ஏற்படும் சம்பவங்களால் மிகவும் சோர்வடைந்து வருகிறோம்.

மாணவர்களிடையே வேற்றுமையை உருவாக்க நினைக்கிறவர்கள் யாராக இருந்தாலும் ஒடுக்கவேண்டும் என நினைக்கும் அரசு இது. பாதிக்கப்பட்ட மாணவன், மாணவி இருவரையும் பாதுகாப்பான வகையில் நல்ல கல்வி நிறுவனத்தில் சேர்த்து படிக்க வைப்பேன். பள்ளிக்கல்வித்துறை அமைச்சராக இது என் கடமை. நான் எப்படி உங்களை தம்பியாக, தங்கையாக பார்க்கிறேனோ, மாணவர்களே நீங்கள் எல்லோரும் சக மாணவர்களை சகோதரர்களாக பாருங்கள்.

முதல்வர் சொல்வதுபோல படிப்பில் கவனம் செலுத்துங்கள். "எல்லோருக்கும் எல்லாம்" எனச் சொல்லும் முதல்வரை பெருமைப்பட வையுங்கள். ஒரு அமைச்சராக அல்ல, உங்கள் வீட்டுப் பிள்ளையாக, உங்கள் அண்ணனாகச் சொல்கிறேன். மாணவர்களே அனைவரையும் அரவணைத்துச் செல்லுங்கள். இனியும் இதுபோன்ற ஒரு சம்பவம் நடக்கவே கூடாது. மாற்றத்தை உருவாக்கும் பொறுப்பும் கடைமையும் உங்களுக்கு உள்ளது" எனத் தெரிவித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+