சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

டிரெண்டான அரசுப் பள்ளி மாணவர்கள்! - அதிரடி காட்டிய அமைச்சர் அன்பில் மகேஷ்; அடுத்த சர்ப்ரைஸ் என்ன?

Google Oneindia Tamil News

சென்னை: 'அரசுப் பள்ளியா இது?' என பொதுமக்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியிருக்கிறது, பள்ளிக்கல்வித்துறை. தமிழ்நாடு முழுவதும் அரசுப் பள்ளிகளில் நடைபெற்று வரும் 'கலைத்திருவிழா', கலர்ஃபுல் விழாவாக களைகட்டியுள்ளது.

பள்ளிகளில் கலைத் திருவிழா நிகழ்ச்சி முடிவடைந்த சூடு குறைவதற்குள் அதுதொடர்பான காணொளிகளை துறைசார்ந்த டுவிட்டர் பக்கத்தில் பதிவேற்றி வருவது கூடுதல் சிறப்பு. அந்தவகையில், தஞ்சாவூர் ஒன்றியத்தில் மாணவர் ஒருவர் செதுக்கிய காய்கறிச் சிற்பம் சமூக வலைத்தளங்களில் வைரலானது.

அமெரிக்காவில் அமைச்சர் அன்பில் மகேஷ்! தொழில்நுட்பக் கல்வித் திட்டத்தை நேரில் ஆய்வு! புது முயற்சி! அமெரிக்காவில் அமைச்சர் அன்பில் மகேஷ்! தொழில்நுட்பக் கல்வித் திட்டத்தை நேரில் ஆய்வு! புது முயற்சி!

யார் இந்த மாணவர் ?

யார் இந்த மாணவர் ?

காய்கறிச் சிற்பத்தைச் செதுக்கிய மாணவரின் திறமையை சமூக ஊடகங்களில் கொண்டாடி வருகின்றனர். இதற்கு இணையாக தேவதானப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியின் மாணவர் ஒருவர், 'ஊரெல்லாம் உன் பாட்டுதான், உள்ளத்தை மீட்டுது' என்ற இளையராஜாவின் பாடலைப் பாடி அசத்திய வீடியோவும் வைரலாக வலம் வருகிறது. ஒரு தொழில்முறை பாடகரைப் போல அந்த மாணவர், சுருதி சுத்தமாகத் தரமாகப் பாடுவதுதான் ஹைலைட்.

தனது குரலால் பலரின் இதயங்களை இந்த மாணவர் வென்றுவிட்டார் என்றால், இன்னொரு மாணவி தனது பேச்சால் வென்று காட்டியிருக்கிறார். திருப்பூர் வடக்குப் பகுதியிலுள்ள ஒரு பள்ளியில் நடந்த விழாவில் அம்மாணவி, வெளிநாட்டினருக்கு ஈடாக ஆங்கிலம் பேசிய வீடியோ பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

திருவாரூர் மாவட்டத்தில் களிமண்ணில் மான் சிற்பம் செய்த மாணவர், அனைவரின் பாராட்டையும் பெற்றுள்ளார். அடுத்ததாக, ஜெயங்கொண்ட சோழபுரம் மாணவர்கள் பெரிய பெரிய பறை இசைக்கருவிகளை அடிக்கும் அடி, வானத்து மேகங்களைக் கிழிக்கும் அளவுக்கு உற்சாகத்தைக் கொடுத்துள்ளது.

அதேபோல், அரும்பாக்கம் மற்றும் குடவாசல் பள்ளி மாணவர்கள் பறை இசை வாசிக்கும் வீடியோவும் கேட்பவர்களை ஆட்டம் போட வைத்துள்ளன. திருப்பூர் அரசுப் பள்ளி மாணவர் ஒருவர், மிருதங்கம் வாசிப்பில் தாளம் தப்பாமல் அடிக்கும் வீடியோவை பார்க்கும்போது, 'இந்தப் பிள்ளைகளின் திறமையை எல்லாம் இத்தனை நாளாக ஏன் உலகறிய செய்யவில்லை?' எனக் கேட்கத் தோன்றுகிறது. இந்த வீடியோவை தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறையின் டுவிட்டர் பக்கத்தில் ஏறக்குறைய 5,500 பேர் கண்டு களித்துள்ளனர்.

‘கேளடா மானிடா’ - வைரலான பாரதியின் பாடல்

‘கேளடா மானிடா’ - வைரலான பாரதியின் பாடல்

நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள கிள்ளுகுடி அரசுப் பள்ளியின் திறந்தவெளி வளாகத்தில் நடந்த இலக்கிய நாடக நிகழ்ச்சியில் ஒரு மாணவி 'கண்ணகி' வேடம் ஏற்று 'சிலப்பதிகார' பாடல்களை உச்சரிப்பதைக் கேட்கும்போது அன்றைய காலத்தில் மு.கருணாநிதியின் கண்ணகியைத் திரையில் பார்த்த ஞாபகம் எழுகிறது.

மேலபுலம் பள்ளி மாணவர் ஒருவர் ஒப்பாரி வைக்கும் வீடியோவும் பலரது கண்களில் நீரை வரவழைத்துள்ளது. ஆண்டிமடம் வட்டாரத்தில் உள்ள ஓர் அரசுப் பள்ளியின் மாணவர் ஒருவர், பாரதியாரின் 'கேளடா மானிடா' பாடலைப் பாடி சிறப்பான வரவேற்பினைப் பெற்றுள்ளார்.

இப்படி தமிழ்நாடு முழுவதும் உள்ள அரசுப் பள்ளியில் பயிலும் 6 ஆம் வகுப்பு முதல் 8ஆம் வகுப்பு வரையிலான மாணவ, மாணவிகளுக்கு 'கலைத்திருவிழா' போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன.

கவின்கலை மற்றும் நுண்கலை ஆகிய பிரிவுகளிலும் இசை, இசைக்கருவி வாசித்தல், நடனம், நாடகம் என்பதைத்தாண்டி மொழித்திறன் போட்டிகளும் ஒருங்கிணைக்கப்பட்டு வருகின்றன. அனைத்து வகை அரசு நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் இப்போட்டிகளில் பங்கேற்று வருகின்றனர்.

இதற்காக, 'ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம்' என்ற பாடலுக்கான காணொளி ஒன்றை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது. அந்த வீடியோ, பல செய்திச் சானல்களில் முக்கியமான ஒன்றாக மாறியுள்ளது. அந்தளவுக்கு அரசுப் பள்ளிகளின் தரத்தை உயர்த்தும் பணிகளை திமுக அரசு தொடர்ந்து முன்னெடுத்து வருகிறது.

'ஆட்டம் பாட்டம் போடுவதால் கல்வித்தரம் உயர்ந்துவிடுமா?' என்று சிலர் கேட்கலாம். அவர்கள் வெறும் பாடப்புத்தகத்தை மட்டும் படித்துவிட்டு வரி மாறாமல் எழுதி மதிப்பெண் எடுப்பதால் மட்டும் கல்வித்தரம் உயர்வதில்லை என்பதையும் சேர்த்து உணரவேண்டும்.

மாணவர்களின் கலைவிழாவுக்கு எந்தளவுக்கு பள்ளிக்கல்வித்துறை முக்கியத்துவம் தருகிறதோ, அதே அளவுக்குப் பிற செயல்பாடுகளுக்கும் கொடுத்து வருகிறது.

குறிப்பாக, வேளாண் ஆராய்ச்சி நிலையத்தில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு உள்ளுறைப் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. 12 ஆம் வகுப்பு முடித்தவுடன் சுயமாக தொழில் தொடங்குவதற்கான முன்னேற்பாடாக இந்தப் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.

வேளாண் விஞ்ஞானியாக பயிற்சி

வேளாண் விஞ்ஞானியாக பயிற்சி

நாற்றங்கால் தயாரிப்பு, மண்புழு வளர்ப்பு, கால்நடை வளர்ப்பு, பயிர் பாதுகாப்பு போன்றவை செயல்முறை விளக்கத்தோடு கற்றுக் கொடுக்கப்படுகின்றது. பயிற்சியில் கலந்து கொள்ளும் மாணவர்களுக்குச் சான்றிதழும் வழங்கப்படுகிறது. இதைப்போலவே தொழிற்கூடங்களிலும் பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகின்றன.

இதற்காக பல நிறுவனங்களைச் சேர்ந்த வல்லுநர்களை வரவழைத்து 470 பள்ளிகளில் படிக்கும் மொத்தம் 12,500 மாணவ, மாணவிகளுக்கு 12 விதமான தொழிற்கல்வி வகுப்புகளை 40 மணிநேர உள்ளுறைப் பயிற்சியாகக் கற்பித்து வருகின்றனர்.

மேலும், பள்ளி மாணவர்களிடையே திரைப்படங்களைத் திரையிட்டுக் காட்டி, அத்துறை சார்ந்த ஆளுமைகளை அழைத்துவந்து வகுப்பறையில் வைத்து விவாதிக்கும் புதிய திட்டம் ஒன்றுக்கு செயல்வடிவம் தரப்பட்டுள்ளது. அதற்கான நிகழ்ச்சிகளில் நடிகர் மணிகண்டன், இயக்குநர்கள் சீனு ராமசாமி, ராஜூ முருகன், எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வன் உள்ளிட்ட பலர் பங்கேற்றுள்ளனர். கல்விக்கூடங்களுக்குள் திறக்கப்பட்ட இந்தப் புதிய ஜன்னல், மாணவர்களின் அறிவுலகை மேலும் மேம்பட வைக்கும் முயற்சியாக அமைந்துள்ளது.

திருநெல்வேலி மாவட்டம், கல்லணை மாநகராட்சி மகளிர் மேல்நிலைப்பள்ளி, கள்ளக்குறிச்சி மாவட்டம், அங்கவை சங்கவை அரசு மேல்நிலைப்பள்ளி, சென்னையில் திருவான்மியூர், திருவல்லிக்கேணி, சைதாப்பேட்டை ஆகிய இடங்களில் 'ஸ்வாஷ்' திரைப்படம் போடப்பட்டு, விவாதிக்கப்பட்டுள்ளன.

மாநில அளவிலான கால்பந்து, பேட்மிண்டன், ரக்பி, கோகோ, ஹாக்கி, கபடி, பீச் பால், வாலிபால் ஆகிய விளையாட்டுப் போட்டிகள் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளன. இதில் 6 முதல் 12 வகுப்பு வரை படிக்கும் மாணவர்கள் பங்கேற்று சிறப்பித்து வருகின்றனர்.

இதே அளவுக்கு மாற்றுத்திறனாளி மாணவர்கள் மீதும் அரசு தனிக்கவனம் செலுத்தி வருகிறது. மாற்றுத்திறனாளிகள் தினமான டிசம்பர் 3 அன்று விருகம்பாக்கம் ஜெய்கோபால் கரோடியா அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் சைகை மொழியில் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடல் இசைக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தொடங்கி வைத்தார்.

அப்போது அவர் செய்துகாட்டிய சைகை மொழி காணொளியைப் பலரும் பகிர்ந்து வாழ்த்துகூறி வருகின்றனர். அவர்களுக்காகத் தயாரிக்கப்பட்ட 'தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடல்' காணொளியும் பல்லாயிரக்கணக்கான அன்பு இதயங்களை சமூக வலைதளங்களில் சம்பாதித்துள்ளது.

அடுத்ததாக, துபாயில் நடைபெற்ற சர்வதேச புத்தகக் கண்காட்சிக்கு அரசுப் பள்ளி மாணவர்கள் அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். இதுவரை சென்னை விமானநிலையத்தையே நேரில் காணாத குழந்தைகள், முதன்முறையாக விமானத்தில் பயணித்துள்ளனர்.

2 ஆண்டுகளுக்கு மாதம் ரூ.1,500

2 ஆண்டுகளுக்கு மாதம் ரூ.1,500

'தமிழர்களின் பண்பாட்டை அறிந்துகொள்ளும் வகையில் கீழடி, ஆதிச்சநல்லூர், பொருநை என தொல்லியல் சார்ந்தவற்றை வரலாற்றைப் பாடத்திட்டத்தில் சேர்த்து வருகிறோம்' என சட்டப்பேரவையில் குறிப்பிட்ட அமைச்சர் தங்கம் தென்னரசு, 'தமிழ்மொழியில் இலக்கிய திறனறித் தேர்வு நடத்தப்படும்' என்று அறிவித்திருந்தார்.

அதன்படி, தமிழ் மொழியறிவு, இலக்கண மற்றும் இலக்கிய அறிவை மாணவர்கள் பெருக்கிக் கொள்வதற்காகத் தனி பயிற்சிகள் தரப்பட்டு, அதற்காகத் தேர்வுகள் நடத்தப்பட்டுள்ளன.

அதாவது, 'பள்ளி மாணவ, மாணவிகளிடையே இலக்கியம், இலக்கணம், தமிழ்மொழி மீதான அறிவை வளர்ப்பதற்கான முயற்சியாக இந்தத் தேர்வு நடத்தப்படும்' என்று அமைச்சர் கூறியிருந்தார். அதற்கான தேர்வு, கடந்த அக்டோபர் மாதம் நடத்தப்பட்டது.

இத்தேர்வை எழுதுவதற்கு அளவீடாக அளவீடாக பத்தாம் வகுப்பு பாடங்களை வைத்துள்ளனர். இத்தேர்வை 11 ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் எழுதியுள்ளனர். அதில் அரசுப் பள்ளிகளைச் சேர்ந்த 1 லட்சத்து 80 பேர் பங்கேற்றனர்.

இதே தேர்வை, அரசு உதவிபெறும் பள்ளிகளைச் சேர்ந்த 54 ஆயிரம் மாணவர்கள் கலந்து கொண்டுள்ளனர். தனியார் பள்ளிகளைச் சேர்ந்த ஏறக்குறைய 78 ஆயிரம் மாணவர்களும் இத்தேர்வை எழுதினர்.

அதில், 1,500 மாணவர்கள் வெற்றி பெற்றுள்ளனர். இத்தேர்வில் மாணவிகள் அதிகப்படியாக வெற்றி பெற்றுள்ளனர். குறிப்பாக, நாகப்பட்டினத்தைச் சேர்ந்த மாணவி அபிநயா 100க்கு 97 மதிப்பெண்ணைப் பெற்றுள்ளார்.

தமிழ்மொழி இலக்கிய திறனறித் தேர்வில் வென்றவர்களுக்கு இரண்டு ஆண்டுகளுக்கு மாதம் ஊக்கத் தொகையாக ரூபாய் 1,500 வழங்கப்பட உள்ளது.

மாணவர்களுக்கு மைக்ரோசாஃப்ட் பயிற்சி

மாணவர்களுக்கு மைக்ரோசாஃப்ட் பயிற்சி

மாணவர்களுக்கு கணினிப் பயிற்சி அளிப்பது தொடர்பாகப் பேசியுள்ள அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, ''அமெரிக்காவுக்குச் சென்றிருந்தபோது மைக்ரோ சாஃப்ட் நிறுவனத்தைப் பார்வையிட்டேன். அங்கே பணி செய்பவர்கள், அரசுப் பள்ளி மாணவர்களுக்கு ஜாவா உள்பட தாங்கள் கற்ற அறிவை சொல்லித் தருகின்றனர். அதேபோல் தமிழ்நாட்டு மாணவர்களுக்கும் பாடம் எடுக்க வேண்டும் எனக் கோரிக்கை வைத்துள்ளோம்.

அத்துடன், '12 ஆம் வகுப்பு படித்து முடித்த பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு இந்த வகுப்பில் பங்கேற்பதற்கான சான்றிதழ் கிடைத்தால் அவர்களின் எதிர்காலத்துக்கு நன்மை தரும்' எனக் கூறியுள்ளோம். அவர்களும், பரிசீலனை செய்வதாகக் கூறியுள்ளனர்' என்று தெரிவித்துள்ளார்.

இந்த மாற்றம் பள்ளிக்கல்வியில் நடைபெற்றுள்ள மாற்றம் மட்டுமல்ல; நாளைய எதிர்கால தலைமுறையினர் மத்தியில் ஏற்படப்போகும் ஒரு வரலாற்று மாற்றம். அதற்கான விதையை தமிழ் மண்ணில் ஆழ ஊன்றியிருக்கிறது, அரசின் பள்ளிக்கல்வித்துறை.

English summary
Anbil Mahesh Shining as a minister for Education Department: How govt school students become achievers?
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X