பாமக மாநாடு பாடலால் வெடித்த சர்ச்சை.. 2வது பாடலை வெளியிட்டு சர்ச்சையை முடிவுக்கு கொண்டுவந்த அன்புமணி
சென்னை: பாமக சித்திரை முழுநிலவு மாநாட்டை ஒட்டி ராமதாஸ், அன்புமணி தனித்தனியாக பாடல்களை வெளியிட்ட நிலையில் தற்போது சர்ச்சை முடிவுக்கு வந்துள்ளது. ராமதாஸை முன்னிலைப்படுத்தாமல் அன்புமணி ஏற்கனவே பாடல் வெளியிட்டதால் சர்ச்சை ஏற்பட்டிருந்தது.
இந்நிலையில், ராமதாஸை முன்னிலைப்படுத்தி புதிய பாடலை வெளியிட்டு சர்ச்சையை முடிவுக்கு கொண்டு வந்துள்ளார் அன்புமணி ராமதாஸ். பாமக நிறுவனர் ராமதாஸை முன்னிலைப்படுத்தி அன்புமணி புதிய பாடலை வெளியிட்டுள்ளார்.

சித்திரை முழுநிலவு மாநாடு
சித்திரை முழுநிலவு வன்னியர் இளைஞர் மாநாட்டிற்கு, பாமக தலைவர் அன்புமணி மற்றும் பாமக நிறுவனர் ராமதாஸ் தங்களை முன்னிலைப்படுத்தி, தனித்தனியாக பாடல் வெளியிட்டு இருந்தது சர்ச்சையை ஏற்படுத்தியது.
வரும் மே 11 ஆம் தேதி மாமல்லபுரம் அடுத்த திருவிடந்தை கிழக்கு கடற்கரை சாலை அருகே வன்னியர் சங்கத்தின் சித்திரை முழு நிலவு மாநாடு நடைபெற உள்ளது. 12 ஆண்டுகளுக்கு பிறகு நடைபெறும் இந்த மாநாட்டை ஒட்டி, அக்கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் வீடியோ பாடல் ஒன்றை வெளியிட்டு இருந்தார்.
மாநாடு பாடல்
அந்தப் பாடலில், ஒரு இடத்தில் மட்டுமே ராமதாஸின் புகைப்படம் இடம்பெற்றிருந்தது. முழுமையாக அந்தப் பாடல் அன்புமணி பற்றியே இருந்தது. "அண்ணன் அன்புமணி அழைக்கிறார்" என்று அந்தப் பாடல் தொடங்கியது. அன்புமணியின் அருமை பெருமைகளை புகழும் வகையில் பாடல் வரிகள் இடம்பெற்றிருந்தன.
இந்நிலையில், மாநாட்டை ஒட்டி பாமக நிறுவனர் ராமதாஸ், தனியாக வீடியோ ஒன்றை வெளியிட்டார். அதில், அன்புமணியின் படம் ஒரு இடத்தில் கூட இடம்பெறாத நிலையில், "ஐயா அழைக்கிறார்" என்று அந்தப் பாடல் தொடங்கியது.
ராமதாஸ் - அன்புமணி கருத்து மோதல்
ஏற்கெனவே, பாமகவில் இளைஞரணி தலைவர் முகுந்தன் நியமனம் தொடர்பாக ராமதாஸ் மற்றும் அன்புமணி இடையே கட்சி மேடையிலேயே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனை தொடர்ந்து, பாமக தலைவர் பொறுப்பில் இருந்து அன்புமணி ராமதாஸை நீக்குவதாக ராமதாஸ் அறிவித்தார்.
பின்னர், கட்சியினர், குடும்பத்தினர் என இரு தரப்பிலும் ஆலோசனை நடத்தினர். பல கட்ட ஆலோசனைகள் நடைபெற்ற நிலையில், இருவருக்கும் இடையிலான பிரச்சினை சுமுக முடிவை எட்டியதாக அக்கட்சியின் கௌரவ தலைவர் ஜி.கே.மணி குறிப்பிட்டார்.
சித்திரை முழுநிலவு மாநாட்டு பாடல்
அதன் பிறகு, சித்திரை மாநாட்டு குழு தலைவராக அன்புமணியை நியமித்து ராமதாஸ் உத்தரவிட்டார். இந்நிலையில், இருவரும் தங்களை முன்னிலைப்படுத்தி தனித்தனியாக வீடியோ வெளியிட்டதால், அன்புமணி மற்றும் ராமதாஸ் இடையே மோதல் போக்கு நீடிப்பதாகவே கருதப்பட்டது.
இந்நிலையில், சித்திரை முழுநிலவு மாநாடு 2ம் பாடல் பாமக சார்பில் இன்று வெளியிடப்பட்டுள்ளது. பாமக தலைவர் அன்புமணி ராமதாஸின் சமூக வலைதள பக்கத்தில் இந்தப் பாடல் வெளியிடப்பட்டுள்ளது. ஏற்கனவே வெளியிடப்பட்டிருந்த முதல் பாடல் அன்புமணியை முன்னிலைப்படுத்தி இருந்தது சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் ராமதாஸை முன்னிலைப்படுத்தி அடுத்த பாடல் வெளியிடப்பட்டுள்ளது.
இரண்டாவது பாடல் வெளியீடு
"அய்யா என்று சொல்லும் போதே ஆயிரம் கோடி மகிழ்ச்சியடா.." என்ற வரிகளுடன் இந்தப் பாடல் தொடங்குகிறது. அதன்பிறகு பாதிக்கு மேல் அன்புமணியை பிரதானப்படுத்திய வரிகள் இடம்பெறுகின்றன. "அய்யா வழியில் எங்கண்ணன்.. மக்களைக் காக்கும் அன்பண்ணன்".. என்ற வரிகளுடன் அன்புமணியை புகழ்கிறது இந்தப் பாடல்.
முதல் பாடலில் ராமதாஸ் பற்றி எதுவும் இல்லாத நிலையில், இரண்டாவது பாடலில் ராமதாஸையும் முன்னிலைப்படுத்தி புதிய பாடலை வெளியிட்டு சர்ச்சையை அன்புமணி முடிவுக்கு கொண்டு வந்துள்ளதாகத் தெரிகிறது.












Click it and Unblock the Notifications