திருவான்மியூர் - உத்தண்டி உயர்மட்ட பால ஒப்பந்தம் ரத்து? முதல்வர் விஜய் முடிவுக்கு அன்புமணி வரவேற்பு

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னை கிழக்குக் கடற்கரைச் சாலையில் திருவான்மியூரிலிருந்து உத்தண்டி வரை 13.30 கி.மீ தொலைவுக்கு ரூ.2100 கோடியில் 4 வழி உயர்மட்ட பாலம் அமைப்பதற்காக ஐதராபாத்தைச் சேர்ந்த கே.என்.ஆர் கன்ஸ்ட்ரக்ஷன்ஸ் நிறுவனத்திற்கு வழங்கப்பட்டிருக்கும் ஒப்பந்தத்தை ரத்து செய்வது குறித்து அரசு ஆய்வு செய்து வருவதற்கு பாமக நிறுவனர் அன்புமணி ராமதாஸ் வரவேற்பு தெரிவித்துள்ளார்.

பாமக நிறுவனர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறுகையில், "சென்னை கிழக்குக் கடற்கரைச் சாலையில் திருவான்மியூரிலிருந்து உத்தண்டி வரை 13.30 கி.மீ தொலைவுக்கு ரூ.2100 கோடியில் 4 வழி உயர்மட்ட பாலம் அமைப்பதற்காக ஐதராபாத்தைச் சேர்ந்த கே.என்.ஆர் கன்ஸ்ட்ரக்ஷன்ஸ் நிறுவனத்திற்கு வழங்கப்பட்டிருக்கும் ஒப்பந்தத்தை ரத்து செய்வது குறித்து அரசு ஆய்வு செய்து வருவதாக வெளியாகியுள்ள செய்திகள் மகிழ்ச்சியளிக்கின்றன. மக்களின் வரிப்பணம் ரூ.700 கோடியை ஊழல் மூலம் சுரண்டும் இந்த ஒப்பந்தம் இரத்து செய்யப்படுவது வரவேற்கத்தக்கது ஆகும்.

Anbumani Ramadoss

திருவான்மியூருக்கும், உத்தண்டிக்கும் இடையே ரூ.2100 கோடியில் உயர்மட்டச் சாலை அமைப்பதற்கான ஒப்பந்தம் கடந்த திசம்பர் 24-ஆம் நாள் ஐதராபாத்தைச் சேர்ந்த கே.என்.ஆர் கன்ஸ்ட்ரக்ஷன்ஸ் நிறுவனத்திற்கு வழங்கப்பட்ட நாளில் இருந்தே ஒப்பந்தத்தை ரத்து செய்ய வேண்டும் என்றும், இதன் பின்னணியில் நடந்த ஊழல் மற்றும் கூட்டுச் சதி குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தி வருகிறேன். கடைசியாக கடந்த மே 28-ஆம் தேதி கூட இது தொடர்பாக அறிக்கை வெளியிட்டிருந்தேன். அதற்கு காரணம் இந்தத் திட்டத்திற்கான ஒப்பந்தத்தில் ஊழல் நடந்திருப்பது அப்பட்டமாக தெரிவது தான்.

உயர்மட்ட பாலம் அமைக்க ரூ.2100 கோடி செலவாகும் என குறிப்பிட்டிருந்த நிலையில், அதில் ரூ.700 கோடி குறைவாக ரூ.1400 கோடியில் அப்பணியை முடித்துத் தருவதாக மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த திலிப் பில்ட்காப் என்ற நிறுவனம் ஒப்பந்தப்புள்ளி அளித்திருந்தது. ஆனால், அதிக தொகையை குறிப்பிட்டிருந்த கே.என்.ஆர் கன்ஸ்ட்ரக்ஷன்ஸ் நிறுவனத்திற்கு ஒப்பந்த அளிக்க வேண்டும் என்பதற்காக திலிப் பில்ட்காப் நிறுவனத்தின் ஒப்பந்தப் புள்ளியை எந்தக் காரணமும் கூறாமல் திமுக அரசு நிராகரித்து விட்டது. பின்னர் கே.என்.ஆர் கன்ஸ்ட்ரக்ஷன்ஸ் நிறுவனத்திற்கு ஒப்பந்தம் அளிக்கப்பட்டது.

கே.என்.ஆர் கன்ஸ்ட்ரக்ஷன்ஸ் நிறுவனத்திற்கு ஒப்பந்தம் அளிக்கப்பட்டதை எதிர்த்தும், தங்களின் ஒப்பந்தப்புள்ளி இரத்து செய்யப்பட்டதை எதிர்த்தும் தொடக்கத்தில் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த திலிப் பில்ட்கான் நிறுவனம் பின்னர் ஏனோ பின்வாங்கி விட்டது. திமுக ஆட்சியில் ஒப்பந்தம் வழங்கப்பட்டு பணிகள் தொடங்கப்பட்ட நிலையில், புதிய ஆட்சியிலும் தடையின்றி பணிகள் நடைபெற்று வந்த நிலையில் தான் ஒப்பந்தத்தை ரத்து செய்ய வேண்டும் என்று குரல் கொடுத்து வந்தேன். அதன் பிறகாவது இந்த ஒப்பந்தத்தின் பின்னணியில் பெருமளவில் ஊழல் நடந்திருப்பதை தெரிந்து கொண்டு அதை இரத்து செய்வதற்கான முயற்சிகளை அரசு தொடங்கியிருப்பது நீதி வெல்லும் என்பதைக் காட்டுகிறது.

வண்டலூரில் இருந்து மீஞ்சூர் வரையிலான வெளிவட்ட சாலையை மதுரவாயல் பகுதியுடன் இணைப்பதற்காக 6 வழி உயர்மட்டப்பாலம் அமைக்கப்படவுள்ளது. இந்த பாலம் அமைக்க ஒரு கிலோ மீட்டருக்கு ரூ.147 கோடி மட்டுமே செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ள நிலையில், அதை விட அகலம் குறைந்த 4 வழி உயர்மட்டப்பாலத்திற்கு கிலோ மீட்டருக்கு ரூ.157.89 வழங்குவதை ஏற்றுக்கொள்ளவே முடியாது.

திருவான்மியூர் - உத்தண்டி உயர்மட்ட பாலத்திற்கு அதிகபட்சமாகவே ரூ.1400 கோடி தான் செலவாகும் எனும் நிலையில், அதில் 50 விழுக்காடான ரூ.700 கோடியை ஒரு தனியார் நிறுவனத்திற்கு கூடுதலாக வழங்கும் வகையில் ஒப்பந்தம் செய்வது மக்களுக்கு இழைக்கப்படும் துரோகம் ஆகும். கடந்த ஆட்சியில் இதன் பின்னணியில் இருந்த அமைச்சர்கள், அதிகாரிகள் உள்ளிட்ட அனைவருமே தண்டிக்கப்பட வேண்டியவர்கள் தான்.

எனவே, எந்த தயக்கமும் இல்லாமல் திருவான்மியூர் - உத்தண்டி உயர்மட்ட பாலம் திட்டத்தை செயல்படுத்த கே.என்.ஆர் கன்ஸ்ட்ரக்ஷன்ஸ் நிறுவனத்திற்கு வழங்கப்பட்டுள்ள ஒப்பந்தத்தை உடனடியாக இரத்து செய்ய வேண்டும். இந்த ஒப்பந்தத்தின் பின்னணியில் நடந்த ஊழல்கள் மற்றும் முறைகேடுகள் குறித்து சிபிஐ விசாரணைக்கு தமிழக அரசு ஆணையிட வேண்டும்" இவ்வாறு கூறியுள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+