மாம்பழத்தை தட்டி தூக்கிய அன்புமணி.. சின்னாய்யாவுக்கு தூது விட்ட ’மாஜி’ தலைகள்! கதவை அடைச்சுட்டாராமே!
சென்னை: பாமகவில் வீசிய உட்கட்சி அரசியல் புயல் சற்றே ஓய்ந்திருக்கிறது. அன்புமணிக்கு ஆதரவாக தேர்தல் ஆணையம் கடிதம் கொடுத்திருக்கும் நிலையில் ராமதாஸ் தரப்பு கடும் அதிருப்தியில் இருக்கிறது. இந்த நிலையில் ராமதாஸ் தரப்பில் இருக்கும் சில முக்கிய தலைவர்கள் அன்புமணி தரப்புக்கு தூதுவிட்ட நிலையில் அதனை அவர் நிராகரித்துவிட்டதாகக் கூறப்படுகிறது. மேலும் சில தலைவர்கள் அன்புமணி தரப்புக்குத் தாவத் தயாராக இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
பாட்டாளி மக்கள் கட்சியில் கிட்டத்தட்ட ஆறு மாதங்களுக்கும் மேலாகக் கடும் மோதல் தந்தை ராமதாஸ் மகன் அன்புமணி இடையே நிலவி வந்தது. கட்சியின் எதிர்காலம் கருதி மகன் அன்புமணியைத் தலைவராக்கிய ராமதாஸ், அவரையே பதவி நீக்கம் செய்வதாக அறிவித்தார்.
மேலும் கட்சியின் தலைவராக நானே தொடர்வேன் என்றும் அதிரடியாக அறிவித்தார். தொடர்ந்து ராமதாஸ் அணி, அன்புமணி அணி என பாமகவில் பிளவு ஏற்பட்டது. அதே நேரத்தில் கட்சியின் பொதுக்குழு மூலம் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட தனக்குத்தான் அதிகாரம் இருக்கிறது எனக் கூறி அன்புமணி ராமதாஸ் பொதுக்குழுவைக் கூட்டினார்.

பாமக மோதல்
அதில் 2026 வரை அவைத் தலைவராகத் தொடர்வார் எனவும், அனைத்து அதிகாரங்களும் அவருக்குத்தான் இருக்கிறது எனத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. சில நாட்களில் ராமதாஸ் தரப்பும் பொதுக்குழுவைக் கூட்டியது. இரு தரப்புத் தீர்மானங்களும் தேர்தல் ஆணையத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த நிலையில் அன்புமணிதான் பாமகவின் தலைவர், அவருக்குத்தான் கட்சியின் பெயர், சின்னம், கொடி ஆகியவற்றை பயன்படுத்தும் உரிமை இருப்பதாகத் தேர்தல் ஆணையம் அங்கீகாரம் அளித்துக் கடிதம் அனுப்பி இருக்கிறது. இந்த நிலையில் தவறான தகவல்களைக் கொடுத்து அன்புமணி தேர்தல் ஆணையத்தின் அங்கீகாரக் கடிதத்தைப் பெற்றிருப்பதாக ராமதாஸ் தரப்பு குற்றம் சாட்டி வருகிறது.
அன்புமணி ராமதாஸ்
இதற்கிடையே அன்புமணி இடம் தான் கட்சியின் பெயர், சின்னம் ஆகியவை இருப்பதால் அவருடன் பேச்சுவார்த்தை நடத்திய அதிமுக தரப்பு 35 எம்எல்ஏ சீட் மற்றும் ஒரு ராஜ்யசபா சீட்டை ஒதுக்க முன் வந்துள்ளதாக சொல்லப்படுகிறது. இந்த தகவலால் ராமதாஸ் தரப்பு கடும் அதிர்ச்சி அடைந்துள்ளது. தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரும் அன்புமணி திமுகவை மிகக் கடுமையாக விமர்சித்து வருகிறார். அவரது பேச்சிலேயே அவர் திமுகவுடன் கூட்டணி அமைக்க மாட்டார் என்பது தெளிவானது. அதே நேரத்தில் ராமதாஸோ சில விஷயங்களை திமுக அரசை பாராட்டி வந்தார்.
ராமதாஸ் தரப்பு
இந்நிலையில் அதிமுகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நிறைவடைந்துவிட்ட தகவல் ராமதாஸ் ஆதரவாளர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. வன்னியர் இட ஒதுக்கீடு உள்ளிட்டவற்றை திமுக வழங்காததால் வட மாவட்டங்களில் திமுக எதிர்ப்பு மனநிலை வன்னியர்களிடையே நிலவுகிறது. அதனால் தான் அதிமுகவுடன் அன்புமணி கூட்டணி வைத்து இருக்கிறார். இந்த நிலையில் ராமதாஸ் திமுக ஆதரவு நிலைப்பாட்டை எடுத்திருக்கும் நிலையில் அவர் தரப்பில் இருக்கும் சில முக்கிய தலைவர்கள் முகாம் மாறத் திட்டமிட்டு இருப்பதாக கூறப்படுகிறது.
அன்புமணி தரப்பு
கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும், தற்போது எம்எல்ஏவாக இருக்கும் ஒரு தலைவர் அன்புமணி தரப்பை சந்தித்து பேச நேரம் கேட்டிருக்கிறார். ஆனால் அவரை சந்திக்க அன்புமணி மறுத்து விட்டதாக கூறப்படுகிறது. மேலும் தைலாபுரத்தில் இருக்கும் ஒரு பெண்ணின் பேச்சைக் கேட்டுக்கொண்டு அன்புமணிக்கு எதிராக செயல்பட்டவர்களைப் பட்டியல் தயார் செய்யப்பட்டு இருக்கும் நிலையில் அவர்களை மட்டும் ஓரம்கட்ட அன்புமணி தரப்பு திட்டமிட்டு இருக்கிறது.
கட்சிப் பிளவு
அதே நேரத்தில் தற்போது ராமதாஸால் நியமிக்கப்பட்டிருக்கும் மாவட்ட செயலாளர்கள், மாவட்ட தலைவர்கள் ஆகியோருக்கு அதிகாரம் இல்லை என்றாலும் கட்சியின் தொண்டர்களாக அவர்களைத் தொடர அன்புமணி சம்மதித்திருப்பதாக கூறப்படுகிறது. மேலும், இரண்டு எம்எல்ஏக்களும் விரைவில் அன்புமணி தரப்பில் தஞ்சம் புகுவார்கள் என சொல்லப்படுகிறது. இவ்வளவு நாள் தங்கள் தரப்பில் இருந்துவிட்டு தற்போது அன்புமணி தரப்புக்கு திட்டமிட்டுள்ள நிர்வாகிகளால் ராமதாஸ் அதிர்ச்சியில் இருப்பதாகவும் சொல்லப்படுகிறது.












Click it and Unblock the Notifications