அதெப்படி எண்ணூர் கோரமண்டல் அம்மோனியா ஆலையை திறக்கலாம்? சிபிஐ விசாரிக்க அன்புமணி கோரிக்கை!

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னை அருகே எண்ணூரில் கோரமண்டல் அம்மோனியா ஆலையை மீண்டும் திறப்பதற்கு பாட்டாளி கட்சியின் தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் எம்பி மற்றும் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர். மேலும் கோரமண்டல் அமோனியா ஆலையை மீண்டும் திறப்பதற்காக நிகழ்த்தப்பட்ட அனைத்து வகையான சித்து விளையாட்டுகள் குறித்த உண்மைகளும், அதன் பின்னணியில் இருந்தவர்கள் குறித்த விவரங்களும் வெளிக் கொண்டு வரப்பட வேண்டும். எனவே, இது குறித்து சி.பி.ஐ. விசாரணைக்கு தமிழக அரசு பரிந்துரைக்க வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் எம்பி வலியுறுத்தி உள்ளார்.

இது தொடர்பாக அன்புமணி ராமதாஸ் வெளியிட்ட அறிக்கை: அமோனியா வாயுக்கசிவு காரணமாக கடந்த 8 மாதங்களாக மூடப்பட்டிருந்த எண்ணூர் கோரமண்டல் அமோனியா ஆலை, தென் மண்டல பசுமைத் தீர்ப்பாயத்தின் நிபந்தனைகளுடன் கூடிய அனுமதியைத் தொடர்ந்து மீண்டும் திறக்கப்பட்டுள்ள நிலையில், மக்கள் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர நடத்தப்பட்ட திரைமறைவு நடவடிக்கைகள் குறித்து 'தி நியூஸ் மினிட்' இணைய இதழ் வெளிக்கொண்டு வந்துள்ள செய்திகள் பெரும் அதிர்ச்சியும், கவலையும் அளிப்பவையாக உள்ளன.

seeman

2023-ஆம் ஆண்டு திசம்பர் மாதத்தில் கோரமண்டல் ஆலையில் ஏற்பட்ட அமோனியா வாயுக்கசிவு காரணமாக ஆலை மூடப்பட்டது. அந்த ஆலையை நிரந்தரமாக மூட வேண்டும் என்று நான் உள்ளிட்ட அரசியல் கட்சித் தலைவர்கள் வலியுறுத்தினோம். இதே கோரிக்கையை வலியுறுத்தி அந்த ஆலையால் பாதிக்கப்பட்ட 33 கிராமங்களைச் சேர்ந்த பல்லாயிரக்கணக்கான மக்களும் தொடர் போராட்டங்களை நடத்தி வந்தனர். அவ்வாறு போராடிய மக்களை விலைக்கு வாங்கும் வகையில் அவர்களுக்கு கையூட்டு வழங்கப்பட்டுள்ளது என்பது தான் 'தி நியூஸ் மினிட்' இணைய இதழின் விசாரணையில் தெரியவந்துள்ள செய்தியாகும்.

'' கோரமண்டல் ஆலைக்கு மிகவும் நெருக்கமாக உள்ள 4 மீன்பிடி கிராமங்களுக்கு பணம் வழங்கப்பட்டுள்ளது. இந்த 4 கிராமங்களில் தாழங்குப்பம், நெட்டுக்குப்பம் ஆகிய இரு கிராமங்களுக்கு தலா ரூ. 1 கோடி வீதமும், பெரியக்குப்பம், சின்னக்குப்பம் ஆகியவற்றுக்கு முறையே ரூ.50 லட்சம், ரூ.35 லட்சமும் வழங்கப்பட்டிருக்கிறது. இந்த கிராமங்களில் அமைக்கப்பட்டுள்ள கிராமக்குழுக்களில் இடம் பெற்றுள்ள ஓவ்வொருவருக்கும் தலா ரூ.10 ஆயிரம் வீதமும், கைம்பெண்களுக்கு தலா ரூ.5,000 வீதமும் வழங்கப்பட்டுள்ளது. கோரமண்டல் ஆலையை தொடர்ந்து இயங்கச்செய்வதற்காக மேற்கொள்ளப்பட்டுள்ள அறத்திற்கு எதிரான இந்த செயல்கள் கண்டிக்கத்தக்கவை. இதை தமிழக அரசு அமைதியாக வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருப்பதும் சரியல்ல. தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை காப்பாற்றுவதற்காக போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் சுட்டுக்கொல்லப்பட்டதற்கும், கோரமண்டல் ஆலையைக் காப்பாற்றுவதற்காக உண்மையும் நீதியும் படுகொலை செய்யப்படுவதற்கும் இடையில் எந்த வேறுபாடும் இல்லை.

கிராம மக்களின் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வருவதற்காக பணம் கொடுக்கப்பட்டதாக கூறப்படுவது குறித்து தமிழக அரசின் கையூட்டு தடுப்புப் பிரிவு, வருமான வரித்துறை உள்ளிட்ட மத்திய அமைப்புகளின் விசாரணைக்கு ஆணையிட வேண்டும் என்று உயர்நீதிமன்ற மேனாள் நீதிபதி உள்ளிட்ட சமூக ஆர்வலர்கள் அடங்கிய குழு வலியுறுத்தியுள்ளது.

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்ட அறிக்கை: சென்ற 2023 ஆண்டின் இறுதியில், எண்ணூர் பகுதியில் உள்ள கோரமண்டல் உரத் தொழிற்சாலையிலிருந்து அம்மோனியா வாயு கசிவு ஏற்பட்டதன் காரணமாக, 42க்கும் மேற்பட்டோர் மூச்சுத் திணறலினால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதோடு பலரும் இதனால் பெரிதும் பாதிக்கப்பட்டனர். இதனையடுத்து, தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாடு வாரியம் விதித்தத் தடையின் பெயரில் ஆலை தற்காலிகமாக மூடப்பட்டிருந்தது. இச்சிக்கலைத் தாமாக முன்வந்து வழக்காகப் பதிந்த தேசியப் பசுமைத் தீர்ப்பாயம், தமிழ்நாடு அரசின் தொழிலகப் பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்கம் மற்றும் தமிழ்நாடு கடல்சார் வாரியம் ஆகியத் துறைகளிடம் அனுமதிபெற்ற பின் அம்மோனியா குழாய் இயக்கம் தொடரலாம் என்று தீர்ப்பளித்தது. இந்நிலையில், ஆலை நிரந்தரமாக மூடப்பட வேண்டும் என்று தொடர்ச்சியாகப் பாதிக்கப்பட்ட 33 கிராம மக்கள் தொடர்ந்து போராடி வந்தனர்.

மக்களை நேரில் சந்தித்து அவர்களின் குறைகளைக் கேட்டறிந்து அவர்களின் கோரிக்கைக்கு ஏற்ப நடவடிக்கை எடுப்பதன் வழியே போராட்டத்தினை முடிவுக்கு கொண்டு வர வேண்டிய தமிழ்நாடு அரசு இத்தனை காலம் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் அமைதிகாத்து வருவது ஒருபுறம் என்றால், தேசியப் பசுமைத் தீர்ப்பாயம் உரிய வழிமுறைகளைக் காட்டிய பின்னும் அதில் கவனம் செலுத்தாமல் மக்களுக்கு மறைமுகமாகப் பணம் கொடுத்து அவர்களின் போராட்டங்களை மழுங்கடிக்க செய்து எப்படியாவது இயங்க வேண்டும் என்று துடிக்கும் ஆலை மறுபுறம்.

தொடக்கத்தில் மக்கள் பாதிக்கப்பட்ட வேளையில் அவர்களுக்குத் துணையாக நிற்பது போல் காட்டிக்கொண்ட திருவொற்றியூர் சட்டமன்ற உறுப்பினர் மற்றும் வடசென்னை நாடாளுமன்ற உறுப்பினர் ஆகியோர் அப்போது இந்த ஆலை நிரந்தரமாக மூடப்பட வேண்டும் என்ற கோரிக்கையை வைத்தாலும், தற்பொழுது ஆலை மீண்டும் இயங்குவதற்கான அதிகாரம் தமிழ்நாடு அரசு கையில் இருக்கும் நிலையில் அது குறித்து ஒரு வார்த்தை கூட பேசாமல் அமைதிகாப்பது அவர்கள் ஆலை திறப்பதற்குத் துணைபோவதாக வரக்கூடிய செய்தியை உறுதிப்படுத்தும் விதமாகவே உள்ளது.

'Polluter Pays' என்ற பன்னாட்டு சூழலியல் கோட்பாட்டிற்கு மாறாக தமிழ்நாட்டில் 'Polluter Bribes or Buys' என்ற தரமற்ற எடுத்துக்காட்டு உருவாகியுள்ள சூழ்நிலையில், இதற்குத் துணைபோகக் கூடிய திமுக அரசு மக்களாட்சி மாண்பையும் காலில் போட்டு மிதிக்கின்றது. இனியும் இந்நிலை தொடராமல் தொழிற்சாலை நலனைப் பின்னுக்குத் தள்ளி பொதுமக்கள் மற்றும் சூழலியல் நலனை முன்னிலைப்படுத்தி மேலெழும்பியுள்ள புகார் குறித்து உரிய நடவடிக்கையும், உண்மை உறுதிப்படுத்தப்படும் நிலையில் தவறிழைத்தவர்களுக்கும் அதற்குத் துணை போனவர்களுக்கும் உரிய தண்டனையும் பெற்றுத்தர வேண்டுமென்றும், கோரமண்டல் தொழிற்சாலை மீண்டும் இயங்குவதற்கான அனுமதியை வழங்கக் கூடாது என்றும் நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துகிறேன்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+