கியாரே செட்டிங்கா? ஒரே இரவில் விசிகவை பின் தள்ளிய பாமக? வச்ச ‘குறி’ யாருக்கு?
சென்னை: ஒரே ஒரு பொதுக்குழு கூட்டத்தின் மூலம் விசிகவை மீடியா வெளிச்சத்திலிருந்து பாமக வெளியேற்றி இருக்கிறது என்ற ஒரு பார்வை முன்வைக்கப்பட்டுள்ளது.
2024 மக்களவை தேர்தல் தொடங்கி மது ஒழிப்பு மாநாடு வரை அரசியல் களத்தில் அதிகம் ஸ்கோர் செய்த கட்சி விசிகதான். பொதுத் தொகுதி கேட்பதில் தொடங்கி அதிமுக அணி மாறலாம் என்பது வரை விசிக அதிரடியாகக் காய்களை நகர்த்தியது. ஆனால், கடைசிக்கட்டத்தில் முதல்வர் ஸ்டாலினைச் சந்தித்த திருமாவளவன் சைலண்ட் ஆக கொடுத்த 2 எம்பி சீட்டுகளைப் பெற்றுக் கொண்டு அமைதியானார்.

இத்துடன் அனைத்தும் 'சுபம்' எனப் பலரும் நினைத்திருந்த நிலையில்தான், மது ஒழிப்பு மாநாட்டை விசிக துணைப் பொதுச் செயலாளராக இருந்த ஆதவ் அர்ஜுனா கையில் எடுத்தார். அப்படி இரு வியூகத்தைத் தான் தான் வகுத்துக் கொடுத்தேன் என்று அவர் இப்போது வெளிப்படையாகப் பேசத் தொடங்கி இருக்கிறார்.
ஆதவ் அர்ஜுனாவின் பின்புலத்தில் மது ஒழிப்பைக் கையில் எடுத்த விசிகவை மிக எளிமையாக டீல் செய்தது திமுக. மது ஒழிப்பைவிட லாட்டரி ஒழிப்புதான் ஆபத்தானது என திரியை அப்படியே திருப்பிப் போட்டு, விசிகவின் வியூகத்தை தலைகீழாக மாற்றியது. அத்துடன் அலை ஓயவில்லை. அதிகாரத்தில் பங்கு என வெடியைப் போட்டார் ஆதவ். துணை முதல்வர் உதயநிதியை குறித்து விமர்சித்தார். 40 ஆண்டுகளாகப் பொதுவாழ்வில் இருக்கும் திருமாவுக்கு துணை முதல்வர் தரவேண்டும் என்றார்.
அது பரபரப்பானது. அதன் பின் விஜய் மாநாடு ஒட்டி விசிக அதிகாரப்பகிர்வு கொள்கை விவாதமானது. அடுத்து அம்பேத்கர் புத்தக நிகழ்ச்சியை வைத்து சில நாட்கள் விசிகவும் ஆதவ் அர்ஜுனாவும் லைம் லைட்டில் இருந்தனர். திருமாவளவனும் சளைக்காமல் அதிரடி ஆட்டத்தை ஆடினார். இப்படி கடந்த சில மாதங்களாகவே விசிகவின் பெயர் ஊடகங்களில் விவாதிக்கப்பட்டு வந்தன. கூடவே விஜய் திருமாவையும் திமுக கூட்டணியையும் குறிவைத்துப் பேசியதால் வெப்பம் அதிகமானது.
இந்நிலையில்தான் இத்தனை மாதங்களாக விசிக மீது விழுந்த மீடியா வெளிச்சத்தை பாமக புத்தாண்டு பொதுக்குழு மூலம் அன்புமணி தங்கள் பக்கம் இழுத்துள்ளார். கடந்த 2024 மக்களவைத் தேர்தலில் பாமக கூட்டணி எங்கே போகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், 'எங்களைப் பொட்டி வாங்கிவிட்டார்கள் என சொல்லிக் கொச்சைப்படுத்தாதீர்கள்' என்றவர் அதிரடியாக நாங்கள் 2014 முதல் பாஜகவில்தான் தொடர்கிறோம் என மாற்றிப் போட்டார். அது பின்னடைவைக் கட்சிக்கு ஏற்படுத்தியது.
இப்படியான சூழலுக்குப் பின்னர் பாமக பற்றிய விவாதமே ஊடகங்கள் மத்தியில் இல்லை. அந்தக் கட்சியின் மீது பார்வையை யாருமே திருப்பாத நிலையில், '4 மாதங்கள் முன்னதாக வந்தவருக்கு ஏன் பதவி தருகிறீர்கள்?' என அன்புமணி மேடையில் 'குறி'வைத்து தாக்கினார். அது உட்கட்சி பூசல் எனப் பலர் சொன்னாலும், கடந்த சில மாதங்களாகவே விசிகவில் கட்சியில் சேர்ந்தவுடனேயே ஆதவ் அர்ஜுனாவுக்கு பதவி கொடுக்கப்பட்டது விவாதமானது. அதை மனதில் கொண்டும், விசிகவை சீண்டும் பாணியிலும்தான் அன்புமணி இப்படியான ஒரு கருத்து மேடையில் ஓபன் செய்தார் என்கிறார்கள் அவரை நன்கு அறிந்தவர்கள்.
மத்திய அமைச்சர் அளவுக்கு அரசியல் களத்திலிருந்தவருக்குப் பொதுக்குழுவில் ராமதாஸை எதிர்த்துப் பேசக் கூடாது என்பது தெரியாதா? பலரும் ராமதாஸ் கையில் கட்சியின் கட்டுப்பாடு இல்ல. கூட்டணி முடிவுகளைக்கூட அன்புமணிதான் தீர்மானிக்கிறார் என்ற பேச்சு 2024 தேர்தலில் முன்வைக்கப்பட்டது. அதற்கு எல்லாம் சேர்த்து கட்சியின் கட்டுப்பாடு தன் கையில்தான் உள்ளது என உணர்த்துவதற்காகவும் அதைத் தொண்டர்கள் இடையே கொண்டு சேர்ப்பதற்காகவும் தான் இந்தப் பதவி சர்ச்சை நடத்தப்பட்டது என்கிறார்கள் முன்பு பாமகவின் உள்வட்டத்தில் நெருக்கமாக இருந்தவர்கள்.
இன்று வாரிசு என அன்புமணி எதிர்க்கிறார். ஆனால், அதேபோல் ஜி.கே.மணியின் மகனுக்குப் பதவி வழங்கப்பட்ட போது அவர் ஏன் மவுனமாக இருந்தார்? அதுவும் குடும்பத்திற்குள் வரும்தானே? என லாஜிக் பேசுகிறார்கள் சிலர். இன்னும் சொல்லப் போனால் அன்புமணியின் குடும்பத்திற்கு நெருக்கமான பலர் கட்சியில் வலுவான இடத்தில் உள்ளனர். அதையும் சேர்த்து அன்புமணி பேசாதது ஏன் என்கிறார்கள்.
இப்போது முகுந்தன் விவகாரம்கூட முன்பே அவரிடம் பேசி வைத்து நடத்தப்பட்டதுதான். இதன் மூலம் விசிகவை ஓவர் நைட்டில் மீடியா வெளிச்சத்திலிருந்து பாமக மறைத்திருக்கிறது. ஆகவே இதனால் கட்சி மீண்டும் அவர்களின் தொண்டர்கள் மத்தியில் சுறுசுறுப்பாகி இருக்கிறது என்கிறார்கள் பாமக நிர்வாகிகள் சிலர்.
அன்புமணியே சொன்னதைப் போல் 5 லட்சம் பேர் கூடிய மாநாட்டிற்குக் கிடைக்காத வெளிச்சம் ஒரு பொதுக்குழுவுக்கு கிடைத்துள்ளது. இதுவும் ஒரு அரசியல் வியூகம்தான் என்கிறார்கள் பலர்.












Click it and Unblock the Notifications