எல்லாம் கூடி வந்த நேரத்தில்.. பானையை உடைத்த ராமதாஸ்! அடுத்த அதிரடியை கையிலெடுத்த அன்புமணி! பரபர பாமக
சென்னை: எல்லாவற்றுக்கும் தீர்வு கிடைக்கும்.. அதுவரை உங்களிடம் இருந்து பிரியாவிடை பெறுகிறேன் என நேற்று முன்தினம் கூறியிருந்தார் பாமக நிறுவனரான ராமதாஸ். இதனால் அவர் அன்புமணியை முன்னிலைப்படுத்திவிட்டு ஒதுங்கிக் கொள்வார் என எதிர்பார்க்கப்பட்டது. இந்த நிலையில் மீண்டும் நிர்வாகிகளை நீக்கி வருகிறார். இந்த நிலையில் மாவட்ட வாரியாக பொதுக்குழுவை கூட்டுகிறார் அன்புமணி ராமதாஸ்.
தமிழக அரசியலில் தற்போதைய ஹாட் டாபிக் என்றால் அது பாமக உட்கட்சி மோதல் தான். இளைஞர் அணி தலைவர் நியமனம் தொடர்பாக, சில ஆண்டுகளுக்கு முன்பு அன்புமணி - ராமதாஸ் இடையே ஏற்பட்ட மோதல் தற்போது வெடித்துக் கிளம்பி இருக்கிறது.
உச்சகட்டமாக 10 லட்சம் பேர் திரண்டு இருந்த வன்னியர் சங்க மாநாட்டில் ராமதாஸ் பேசியது பாமகவினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. கோடி கணக்கில் செலவு செய்து பிரம்மாண்ட மாநாட்டை கூட்டினால் வீட்டுப் பிரச்சனையை கொண்டு வந்து இங்கே பேசுகிறாரே என ஸ்தம்பித்து போயினர் பாமகவினர்.

தொடர்ந்து சமூக வலைதளங்களில் தங்களது கொந்தளிப்பை வெளிப்படுத்தி வருகின்றனர். ஜிகே மணியும், ராமதாஸின் குடும்பத்தில் இருப்பவர்களும் தான் இந்த மோதலுக்கு காரணம் என வெளிப்படையாகவே குற்றம் சாட்டுகின்றனர். மேலும் அன்புமணி ராமதாசை முன்னிறுத்தி விட்டு ராமதாஸ் ஒதுங்கிக் கொள்ள வேண்டும் எனவும் வலியுறுத்தி வருகின்றனர். உச்சகட்ட எதிர்ப்பை காட்டும் விதமாக தைலாபுரத்தில் ராமதாஸ் கூட்டிய கூட்டத்தை கிட்டத்தட்ட 200க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் புறக்கணித்தது ராமதாசை யோசிக்க வைத்திருக்கிறது.
பாமகவினர் மட்டுமல்ல பிற கட்சிகளில் இருக்கும் வன்னியர் சமூகத்தைச் சேர்ந்த நிர்வாகிகளும் இந்த மோதலால் சற்றே அதிருப்தியில் இருக்கின்றனர். இதற்கிடையே நேற்று முன்தினம் செய்தியாளர்களை சந்தித்த ராமதாஸ் எல்லாவற்றிற்கும் தீர்வு கிடைக்கும்.. தீர்வு கட்சிக்கும் நாட்டுக்கும் சரியான தீர்வாக இருக்கும் என கூறினார். மேலும் உங்களிடம் இருந்து பிரியாவிடை பெறுகிறேன் எனவும் ராமதாஸ் அழுத்தி சொன்னார். இதனால் அன்புமணியை முன்னிலைப்படுத்திவிட்டு ராமதாஸ் ஒதுங்கிக் கொள்வார் எனவும் எதிர்பார்க்கப்பட்டது.
அதற்கேற்றார் போல் நிர்வாகிகள் அனைவரும் அன்புமணி பின்னால் தான் இருந்தனர். இந்த நிலையில் அடுத்த அதிரடியாக கட்சியில் இருந்து மேலும் சில நிர்வாகிகளை நீக்கி இருக்கிறார். குறிப்பாக கட்சியின் முக்கிய நிர்வாகிகளில் ஒருவரான வழக்கறிஞர் பாலுவை கட்சியில் இருந்து நீக்கியதோடு சமூக நீதிப் பேரவையின் தலைவர் பதவியில் இருந்தும் நீக்குவதாக கூறியுள்ளார். மேலும் பாலுக்கு பதிலாக விஎஸ் கோபு என்கிற வழக்கறிஞரை சமூக நீதிப் பேரவையின் தலைவராக நியமித்து அதிர்ச்சி கொடுத்திருக்கிறார்.
மாவட்ட ரீதியாக அன்புமணி ராமதாஸ் ஆதரவாளர்களை குறி வைத்து நீக்கிவரும் நிலையில் வாழவும் நீக்கப்பட்ட தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதற்கிடையே அடுத்த அதிரடியை ஆரம்பித்திருக்கிறார் அன்புமணி ராமதாஸ். பாமகவின் ஒருங்கிணைந்த மாவட்ட பொதுக்குழு கூட்டம் அடுத்தடுத்து நடத்தப்படும் என அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறார். முதலில் 10 மாவட்டங்களில் பாமக பொதுக்குழு கூட்டம் நடைபெற உள்ளது. 19ஆம் தேதி வரை திருவள்ளூர், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, சேலம், தர்மபுரி ஆகிய மாவட்டங்களில் அன்புமணி ராமதாஸ் தலைமையில் மாவட்ட பொதுக்குழு கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.
பாமகவில் உட்கட்சி பிரச்சனை முடிவடைந்து விட்டது என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் மீண்டும் மோதல் வலுத்திருப்பது பாமக தொண்டர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அதே நேரத்தில் அதே நேரத்தில் அன்புமணி ராமதாஸ் அடுத்த கட்டமாக என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறார் என்ற கேள்வியும் எழுந்துள்ளது.












Click it and Unblock the Notifications