சென்னைக்கு வருது "ANNA" செயலி! பஸ், ரயில், மெட்ரோ.. ஒரே டிக்கெட் போதும்! சிறப்பம்சங்கள் என்ன?
சென்னை: ஒரே ஒரு டிக்கெட்டில் சென்னை மாநகரில் ரயில், பேருந்து, மெட்ரோ ரயில் என அனைத்திலும் பயணம் செய்யும் வகையில் வசதி கொண்டு வரப்படுகிறது. இதற்காக புதிய "அண்ணா" என்ற செயலி விரைவில் அறிமுகம் ஆக உள்ளது. இதற்கான சோதனை முயற்சி தொடங்கப்பட்டுள்ளது. இந்த செயலியில் டிக்கெட் எடுப்பது மட்டும் இன்றி, பஸ் எந்த இடத்தில் வருகிறது? நாம் செல்லும் இடத்திற்கு மெட்ரோ, மின்சார ரயில் கனெக்டிவிட்டி இருக்கிறதா? என்பதையும் அறிந்து கொள்ள முடியும்.
சென்னையில் பொது போக்குவரத்து என்பது இன்றியமையாததாக உள்ளது. புறநகர் மின்சார ரயில், மெட்ரோ ரயில்கள், பேருந்துகள் ஆகிய மூன்றும் சென்னையின் போக்குவரத்துக்கு இதயநாடியாக உள்ளது. பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ, மாணவிகள் முதல் அலுவலகம் செல்வோர், வியாபாரம், வணிகம், மருத்துவம் என பல்வேறு காரணங்களுக்காக செல்லும் பயணிகளும் சென்னையில் பிரதானமாக பொது போக்குவரத்தையே நம்பியிருக்கிறார்கள்.

ஒரே ஒரு டிக்கெட் தான்
தற்போது சிங்கார சென்னை பயண அட்டை மூலம் சென்ன மெட்ரோ மற்றும் பேருந்துகளில் பயணம் செய்யக்கூடிய வசதி உள்ளது. அதே நேரத்தில் இந்த சிங்கார சென்னை அட்டை வைத்து புறநகர் மின்சார ரயில்களில் பயணம் செய்ய முடியாது. இந்த நிலையில்தான் பயணிகள் சிரமத்தை குறைக்கும் விதமாக அதாவது, ரயில், பேருந்து, மெட்ரோ ரயில் என மாறி மாறி செல்லும் போது தனித்தனியாக டிக்கெட் எடுப்பதை தவிர்க்கும் விதமாக ஒரே டிக்கெட் பயன்படுத்தும் கொண்டுவர முடிவு செய்யப்படது.
"அண்ணா" செயலி அறிமுகம்
இதற்கான பணிகள் கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்த நிலையில் தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இதற்காக புதிய "அண்ணா" என்ற செயலி விரைவில் அறிமுகம் ஆக உள்ளது. இந்த செயலி சோதனை முயற்சியாக பயன்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. இந்த செயலியில் செல்ல வேண்டிய இடத்தை பதிவு செய்து ரீஜார்ஜ் செய்தால் ஒரு கியூ ஆர் கோடு வரும்.
இந்த கியூ ஆர் கோடினை பயன்படுத்தி மூன்று வகையிலான போதுப்போக்குவரத்திலும் பயணிகள் பயணிக்க முடியும். சென்னை மாநகர பேருந்துகளில் போதிய சில்லறை இல்லை என டிக்கெட் எடுக்கும் போது தர்மசங்கடத்திற்கும் உள்ளாகும் நிலை இதன்மூலம் இருக்காது. அதேபோல, ரயில் டிக்கெட் எடுப்பதற்காக கவுண்டர்களை நோக்கி படையெடுக்க வேண்டியது இல்லை.
சிறப்பம்சங்கள் என்னென்ன?
இந்த செயலியில் டிக்கெட் எடுப்பது மட்டும் இன்றி பஸ் எந்த இடத்தில் வருகிறது. நாம் செல்லும் இடத்திற்கு மெட்ரோ, மின்சார ரயில் கனெக்டிவிட்டி இருக்கிறதா? என்பதை அறிந்து கொள்ள முடியும். எந்த வகை போக்குவரத்தை பயன்படுத்தினால் விரைவாக செல்ல முடியும் என்பது உள்ளிட்ட அனைத்து தகவல்களையும் பயணிகள் தெரிந்துகொள்ள முடியும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் இந்த மூன்று போக்குவரத்து வசதிகளையும் பயன்படுத்துகிறார்கள். இந்தச் செயலி முதற்கட்டமாக மாநகர பேருந்துகளிலும், மெட்ரோ ரயில்களிலும் பயன்படுத்தப்படும். இரண்டு மாதங்களுக்குப் பிறகு மின்சார ரயில்களும் இந்தச் செயலியில் இணைக்கப்படும் என்று தகவல் வந்துள்ளது. இதனால் பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.












Click it and Unblock the Notifications