கண்ணதாசனுக்கு வந்த ஞாபக மறதி! பேரறிஞர் அண்ணா ஏன் சட்டை போடல தெரியுமா? இந்த சுவாரஸ்யம் பாருங்க
சென்னை: கவிஞர் கண்ணதாசனின் ஞாபக மறதியால் முன்னாள் முதல்வர் அண்ணாதுரை சட்டையே அணியாமல் இருந்த சுவாரஸ்ய பின்னணி தெரியுமா?
கண்ணாதாசனும் அண்ணாதுரையும் எத்தனை நட்புடன் இருந்தனர் என்பது பெரும்பாலானோருக்கு தெரியும். கவிஞர் கண்ணதாசன், அண்ணாதுரையின் நினைவாகவே தனது மகனுக்கு அண்ணாதுரை கண்ணதாசன் என பெயர் வைத்துள்ளார்.

அந்த அளவுக்கு இருவருக்கிடையேயும் அன்பு, பாசம் பின்னி பிணைந்திருந்தது. அண்ணாவுக்கும் கண்ணதாசனுக்கும் இடையே நடந்த சுவாரஸ்யமான சம்பவத்தை அவருடைய மகன் அண்ணாதுரை ஒரு பேட்டியில் விவரித்திருந்தார்.
அந்த பேட்டியில் அவர் கூறியதாவது: அப்பா கண்ணதாசனுடன் பிறந்த அண்ணன்கள் நிறைய பேர் இருந்தாலும் அண்ணாவுக்கு அப்பா கடிதம் எழுதினாலே என் உடன்பிறவா அண்ணா என்றுதான் அழைப்பாராம். ஒரு முறை அண்ணாவின் சொந்த ஊரான காஞ்சிபுரத்திற்கு என் அப்பா சென்றிருந்தார்.
அங்கு அண்ணா அவர்கள் அணிந்திருந்த சட்டை கிழிந்து கிடந்தது. இதை பார்த்த எனது அப்பா, "அந்த சட்டையை கழற்றி கொடுங்கள், நான் எனக்கு துணி தைக்கும் டைலரிடம் சொல்லி இதே அளவில் 12 சட்டைகளை தைத்துக் கொண்டு வருகிறேன்" என்றாராம். அண்ணாவும் தனது சட்டையை கழற்றி என் அப்பாவிடம் கொடுத்தார்.
என் அப்பாவுக்கு ஞாபக மறதிக்கு அளவே இல்லை என்பது அனைவருக்கும் தெரிந்த விஷயம்தான். இதனால் அண்ணாவிடம் கிழிந்த சட்டையை அவர் வாங்கிக் கொண்டு சென்றதோடு சரி. பிறகு அந்த சட்டையையே அவர் மறந்துவிட்டார். சில காலம் கழித்து அண்ணாவை சந்திக்க மீண்டும் என் அப்பா, காஞ்சிபுரத்தில் உள்ள அவருடைய வீட்டிற்கு சென்றார்.
அப்போது அண்ணாவோ, சட்டை ஏதும் அணியாமல் எதையோ எழுதி கொண்டிருந்தார். உடனே அப்பா, "என்ன சட்டை அணியாமல் இருக்கிறீர்களே " என கேட்டார். அதற்கு அண்ணாவோ, "ஏம்ப்பா இருந்த ஒரு சட்டையையும் நீ கொண்டு போய்ட்டே, அதனால்தான் இப்படி உட்கார்ந்திருக்கிறேன்" என அண்ணா சொல்ல, அப்போதுதான் அப்பாவுக்கு அண்ணாவிடம் இருந்து வாங்கிக் கொண்டு சென்ற சட்டை குறித்து நினைவுக்கு வந்ததாம்.
இதை நினைத்து இருவரும் சிரித்துக் கொண்டே இருந்தார்களாம். அடுத்த முறை அப்பா, அண்ணாவை பார்க்க போன போது கையில் 12 சட்டைகளுடன் சென்றாராம். இப்படி இருவருக்கும் இடையே ஒரு சுவாரஸ்ய பின்னணி உள்ளது என மகன் அண்ணாதுரை தெரிவித்திருந்தார். கண்ணதாசன் மகன் அண்ணாதுரை, நடிகர் விவேக்கின் காமெடி குழுவில் இருந்தவர். விவேக்குடன் பல படங்களில் நடித்துள்ளார். இவர் தற்போது பாஜகவில் இணைந்துள்ளார்.












Click it and Unblock the Notifications