"என் அப்பா கருணாநிதி இல்ல.. குப்புசாமி! கனிமொழி பாஜகவில் சேர்ந்தால் நான் போறேன்” அண்ணாமலை பாய்ச்சல்!
சென்னை: கனிமொழி பாஜகவுக்கு வருகிறார் என்றால் நான் மாநில தலைவர் பதவியில் இருந்து விலகுவது குறித்து பரிசீலனை செய்கிறேன் எனத் தெரிவித்துள்ளார் அண்ணாமலை.
நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக தனிப்பெரும்பான்மையை இழந்துள்ளது. பாஜக 240 இடங்களை மட்டுமே பெற்றிருந்தாலும் தேசிய ஜனநாயக கூட்டணியாக 293 இடங்களில் வென்றதன் மூலம், கூட்டணி ஆட்சி அமைக்கவிருக்கிறது. தமிழ்நாட்டைப் பொறுத்தவரை பாஜக ஒரு இடத்தில் கூட வெல்ல முடியவில்லை. கோவை மக்களவைத் தொகுதியில் போட்டியிட்ட பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலை இரண்டாம் இடம் பிடித்தார்.

இந்நிலையில், சென்னையில் உள்ள பாஜக தலைமையகத்தில் செய்தியாளர்களைத் சந்தித்தார் அண்ணாமலை. அப்போது லோக்சபா தேர்தலில் பாஜகவின் நிலை பற்றிப் பேசினார். மேலும், திமுக எம்.பி கனிமொழியின் கருத்துக்கு பதில் அளித்தார்.
பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கனிமொழி பற்றி முன்பு பேசும்போது, "கனிமொழி என்ன உழைத்தார்? அப்பா பெயரை வைத்து வாழ்ந்து வருகிறார். கருணாநிதி என்ற பெயரை தூக்கி விட்டால் கனிமொழி யார்? பிரதமர் பற்றி பேசுவதற்கு அவருக்கு என்ன தகுதி இருக்கிறது? கனிமொழி முதலில் கண்ணாடியை பார்த்து பேசிப் பழக வேண்டும். பிரதமர் பற்றி பேச ஒரு தகுதி வேண்டும். அது அரை சதவீதம் கூட கனிமொழிக்கு இல்லை" எனக் கூறி இருந்தார்.
அதற்கு நேற்று பதிலடி கொடுத்தார் கனிமொழி. தூத்துக்குடி லோக்சபா தொகுதியில் இரண்டாவது முறையாகப் போட்டியிட்ட திமுக வேட்பாளர் கனிமொழி 5 லட்சத்து 40 ஆயிரத்து 729 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார். கனிமொழியை எதிர்த்து போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் சிவசாமி வேலுமணி உட்பட 27 வேட்பாளர்களின் டெபாசிட் காலியானது.
அபார வெற்றிக்குப் பிறகு நேற்று சென்னை வந்த கனிமொழி கருணாநிதி, "கனிமொழிக்கு என்ன தகுதி இருக்கிறது என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அடிக்கடி என்னைப் பார்த்து ஒரு கேள்வி கேட்பார். இரண்டாவது முறையாக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதியாக தற்போது அவருக்கு பதில் சொல்கிறேன். இந்த தகுதி கூட இல்லாத ஒரு நபர் பாஜகவிற்கு தலைவராக இங்கே நீடிப்பது அந்த கட்சிக்கு நல்லதல்ல." எனத் தெரிவித்தார்.
பாஜக மாநில தலைவர் அண்ணாமலை நேற்று செய்தியாளர்களைச் சந்தித்தபோது, கனிமொழி கூறியது பற்றி செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்த அண்ணாமலை, "என்னுடைய அப்பா அரசியல்வாதி அல்ல. அவர் பெயர் குப்புசாமி. விவசாயம் பண்ணுகிறார். எங்க அப்பா ஆடு மாடு மேய்க்கிறார். அதனால் நான் ஜெயிப்பதற்கு நேரமாகும். என் அப்பா கருணாநிதியாக இருந்திருந்தால் நானும் ஜெயித்திருப்பேன்.
நியாயம், நேர்மையுடன் பொறுமையாகச் சென்றால் ஒருநாள் நீ ஜெயிப்பாய் என எங்க அப்பா குப்புசாமி சொல்லி கொடுத்துள்ளார். பாஜக மாநிலத் தலைவர் பொறுப்பிலிருந்து நான் விலக வேண்டும் என்று கனிமொழி கூறியிருக்கிறார். ஒருவேளை அவர் பாஜகவுக்கு வருகிறார் என்றால் நான் பதவியில் இருந்து விலகுவது குறித்து பரிசீலனை செய்கிறேன்" எனத் தெரிவித்துள்ளார்.
மேலும் பேசிய அண்ணாமலை, "தமிழ்நாட்டில் எங்கள் இலக்கை அடைய முடியவில்லை என்பது வருத்தம்தான். ஆனால் வாக்கு சதவிகிதம் அதிகரித்திருக்கிறது. மக்களின் தீர்ப்பைத் தமிழ்நாட்டில் தலைவணங்கி ஏற்றுக்கொள்கிறோம். சில இடங்களில் குறைந்த வாக்கு வித்தியாசத்தில் வெற்றி வாய்ப்பை இழந்திருக்கிறோம்.
கோயம்புத்தூரில் நான் வாங்கியிருக்கும் நான்கரை லட்சம் வாக்குகளும் பணம் கொடுக்காமல் வாங்கியுள்ள வாக்குகள். இங்கு அதிமுக டெபாசிட்டுக்கும் கொஞ்சம் அதிகமான வாக்குகளைத்தான் பெற்றிருக்கிறது. கோவையில் 10ல் 9 எம்.எல்.ஏ-க்கள் அதிமுகவினர். இது அதிமுகவின் கோட்டை என்று உங்களுக்கே தெரியும். இங்கு இவ்வளவு வாக்குகள் பெற்றது வெற்றி.
தமிழ்நாட்டில் 50 ஆண்டுகளாக அரசியலில் இருப்பவர்களே 7 இடங்களில் டெபாசிட் இழந்திருக்கிறார்கள். ஐந்துமுறை ஆட்சியிலிருந்த கட்சியினர் டெபாசிட் இழந்திருக்கின்றனர். அதை நடத்திக்காட்டியது பா.ஜ.க. 2026-ல் தமிழ்நாட்டில் ஆட்சியைப் பிடிக்கப்போகிறோம். அதுதான் எங்களின் இலக்கு." எனத் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications