பஞ்சாயத்து ஓவர்.. அக்கா வீட்டுக்கு “ஸ்வீட்” உடன் போன அண்ணாமலை! “அன்புத் தம்பி” என உருகிய தமிழிசை!
சென்னை: முன்னாள் ஆளுநரும், நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில் தென்சென்னை தொகுதி பாஜக வேட்பாளராக களமிறங்கியவருமான தமிழிசை சௌந்தரராஜனுடன், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை இன்று திடீர் சந்திப்பு நடத்தியுள்ளார்.
சென்னை சாலிகிராமத்தில் உள்ள தமிழிசை சௌந்தரராஜனின் வீட்டிற்கு நேரில் சென்று அவரைச் சந்தித்துப் பேசியுள்ளார் அண்ணாமலை. கடந்த சில நாட்களாக பாஜகவில் குழப்பம் நிலவி வந்த நிலையில் இந்த திடீர் சந்திப்பு நடைபெற்றுள்ளது.

பாஜகவில் குழப்பம்: நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக தமிழகத்தில் ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறவில்லை. இதையொட்டி கட்சிக்குள் சலசலப்புகள் ஏற்பட்டு வருகின்றன. அதிமுகவுடன் கூட்டணி தொடர்ந்திருந்தால் சில தொகுதிகளை கைப்பற்றியிருக்க முடியும். ஆனால் அண்ணாமலையின் தவறான முடிவால் பல தொகுதிகளில் டெபாசிட் கூட வாங்க முடியாத நிலைக்கு தள்ளப்பட்டதாக பாஜகவில் ஒரு பிரிவினர் கூறி வருகின்றனர்.
இந்தச் சூழலில் பாஜக முன்னாள் தலைவரும், 2 மாநிலங்களில் ஆளுநராக இருந்தவருமான தமிழிசை சௌந்தரராஜன், தென் சென்னை தொகுதியில் போட்டியிட்டு தோல்வி அடைந்த நிலையில் அண்மையில் செய்தியாளர்களைச் சந்தித்தபோது அண்ணாமலை தரப்பை சீண்டுவது போல பேசினார்.
தமிழிசை பேசியது: தேர்தலில் வியூகம் அமைத்தால்தான் வெற்றி பெறலாம். தேர்தல் கூட்டணி என்பது வியூகம். அதிமுக - பாஜக வாக்கை சேர்த்து இருந்தால் வென்று இருப்போம். நாங்கள் வெற்றிபெற கூடிய நபர்கள். ஆனால் இரண்டாம் இடம் வந்துவிட்டோம். சமீபகாலமாக கட்சிக்குள் குற்றப் பின்னணி கொண்டவர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். நான் கட்சி தலைவராக இருக்கும்போது சமூக விரோதிகள் போல் இருந்தால் ஊக்கப்படுத்த மாட்டேன் எனக் கூறினார் தமிழிசை.
மேலும், தலைவர்கள் யாராவது கருத்து சொன்னால் அவர்களை மோசமாக பேச வேண்டாம். கட்சியின் பிற தலைவர்கள் பற்றி பாஜக ஐ.டி விங் மோசமாக எழுதினால் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என முன்னாள் மாநில தலைவராக எச்சரிக்கிறேன் எனக் கூறி இருந்தார்.
அண்ணாமலை - தமிழிசை ஆதரவாளர்கள் மோதல்: இதையடுத்து அண்ணாமலை ஆதரவாளர்கள் தமிழிசை சௌந்தரராஜனை தாக்கி சமூக வலைதளங்களில் பதிவிட்டனர். பதிலுக்கு தமிழிசைக்கு ஆதரவாகவும் சிலர் திரண்டு அண்ணாமலை தரப்பினருக்கு பதிலடி கொடுத்து வருகின்றனர். இதனால் தமிழக பாஜகவில் குழப்பம் ஏற்பட்டுள்ளது. இந்த விவகாரம் டெல்லி தலைமையின் கவனத்துக்கும் சென்றுள்ளதாக கூறப்படுகிறது.
அமித் ஷா கண்டிப்பு?: இந்நிலையில் தான் ஆந்திராவில் நடந்த சந்திரபாபு நாயுடு பதவியேற்பு விழாவின் போது தமிழிசை செளந்தரராஜனை அமித்ஷா கண்டிப்பது போன்ற வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. மேடையில் தமிழிசையை அழைத்து கோபமாக பேசும் அமித் ஷா தமிழிசை ஏதோ கூற வரும்போது அதனை மறுத்து கோபமாகப் பேசும் வீடியோ பரவி சர்ச்சையை ஏற்படுத்தியது.
எனினும், அமித் ஷா தன்னை கண்டிக்கவில்லை என்று தமிழிசை சௌந்தரராஜன் விளக்கம் அளித்தார். சந்திரபாபு நாயுடு பதவி ஏற்பு விழாவில் அமித்ஷா அறிவுரை தான் கூறினார். தொகுதி மற்றும் அரசியல் பணிகளை தீவிரமாக மேற்கொள்ள வேண்டும். தேர்தலுக்கு பிந்தைய பணிகள், தேர்தலில் மேற்கொண்ட சவால்கள் குறித்து கேட்டறிந்தார் என விளக்கம் அளித்து உள்ளார்.
சர்ச்சை: எனினும், தமிழக பாஜகவில் கடந்த சில நாட்களாக இந்த பிரச்சனை தீவிரமாக விவாதிக்கப்பட்டு வருகிறது. உட்கட்சி பிரச்சனையை தமிழிசை பொதுவில் பேசியது தவறு என அண்ணாமலை தரப்பு கூறியது. பொது மேடையில் தமிழிசையை அவமதித்து விட்டார் அமித் ஷா என திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சியினர் கொதித்தனர்.
இந்நிலையில், இந்த பிரச்சனைகளுக்கு எல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் இன்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, சென்னை சாலிகிராமத்தில் அமைந்துள்ள தமிழிசை சௌந்தரராஜனின் வீட்டுக்கே சென்று நேரில் சந்தித்துப் பேசியுள்ளார். இதன் மூலம் பாஜகவில் சமாதானம் திரும்பும் எனத் தெரிகிறது.
தமிழிசை உடன் அண்ணாமலை சந்திப்பு: இந்த சந்திப்பு குறித்து எக்ஸ் தளத்தில் புகைப்படத்துடன் பதிவிட்டுள்ள அண்ணாமலை, "இன்றைய தினம், மூத்த பாஜக தலைவர்களில் ஒருவரும், தமிழக மாநிலத் தலைவராகத் திறம்படச் செயல்பட்டவருமான, அக்கா திருமதி தமிழிசை சௌந்தரராஜன் அவர்கள் இல்லத்திற்குச் சென்று நேரில் சந்தித்ததில் பெருமகிழ்ச்சி.
தமிழகத்தில் தாமரை நிச்சயம் மலரும் என்பதை உறுதியுடன் கூறி, அதற்காகக் கடினமாக உழைத்த அக்கா திருமதி தமிழிசை சௌந்தரராஜன் அவர்கள் அரசியல் அனுபவமும், ஆலோசனைகளும், கட்சியின் வளர்ச்சிக்கான உத்வேகத்தைத் தொடர்ந்து அளித்துக் கொண்டிருக்கிறது." எனத் தெரிவித்துள்ளார்.
அதேபோல, அண்ணாமலையின் பதிவை பகிர்ந்துள்ள தமிழிசை சௌந்தரராஜன், "தமிழக பாஜக மாநிலத் தலைவர் அன்புத் தம்பி அண்ணாமலை அவர்களை சந்தித்ததில் மகிழ்ச்சி" எனத் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications