முடியாதுனு முடியாது.. கட் அண்ட் ரைட்டாக பேசிய அண்ணாமலை! விடிய விடிய பேசிய கோயல்! கடைசி சான்ஸ்?
சென்னை: 2026 தமிழக சட்டப்பேரவை தேர்தல் நெருங்கி வரும் நிலையில், பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை இந்த முறை தேர்தலில் போட்டியிடாமல் இருக்க முடிவு செய்துள்ளதாக வெளியாகும் தகவல்கள் அரசியல் பாஜக வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, அவரை மொடக்குறிச்சி தொகுதியில் போட்டியிட வலியுறுத்தப்பட்ட நிலையில், இந்த முடிவு எடுக்கப்பட்டதாக கூறப்படுவதால் அவரது ஆதரவாளர்கள் மத்தியில் அதிர்ச்சி நிலவி வருகிறது. இந்நிலையில், தேர்தலில் போட்டியிட வேண்டுமென அண்ணாமலையிடம் பாஜக தேர்தல் பொறுப்பாளர் பியூஸ் கோயல் விடிய விடிய பேசியும், தமிழகம் முழுவதும் பிரச்சாரம் மட்டுமே செய்ய முடியும் என அண்ணாமலை உறுதியாக தெரிவித்ததாக அவரது ஆதரவாளர்கள் கூறுகின்றனர்.
தமிழகத்தில் 234 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான தேர்தல் வரும் 23ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்தலை முன்னிட்டு அனைத்து முக்கிய கட்சிகளும் வேட்பாளர் பட்டியலை வெளியிட்டு தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன.

ஆனால் பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சிகள் மட்டும் இதுவரை முழுமையான வேட்பாளர் பட்டியலை வெளியிடாமல் இருப்பது கடைசி நேர பரபரப்பைக் கிளப்பியுள்ளது. அதிமுக தலைமையிலான கூட்டணியில் பாஜகவுக்கு மொத்தம் 27 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.
பாஜக வேட்பாளர் பட்டியல்
இந்த தொகுதிகளில் யார் போட்டியிடப் போகிறார்கள் என்பது குறித்து நீண்ட நாட்களாக ஆலோசனை நடைபெற்று வருகின்றன. மத்திய அமைச்சர் மற்றும் பாஜக தேர்தல் பொறுப்பாளரான பியூஷ் கோயல் தமிழகம் வந்து பல கட்ட ஆலோசனைகளை நடத்திய பின்னரும், வேட்பாளர் பட்டியல் வெளியீடு தொடர்ந்து தாமதமாகி வருகிறது. சமீபத்தில் சென்னை நகரில் உள்ள பாஜக மாநில அலுவலகத்தில் மையக்குழு கூட்டம் நடைபெற்றது. அந்த கூட்டத்தில் ஒவ்வொரு தொகுதிக்கும் மூன்று பேர் வீதம் தேர்வு செய்யப்பட்டு, அந்த பட்டியல் கட்சி மேலிடத்திற்கு அனுப்பப்பட்டதாக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்திருந்தார்.
அண்ணாமலை
இதனால், வேட்பாளர் பட்டியல் எந்த நேரத்திலும் வெளியாகும் என்ற எதிர்பார்ப்பு கட்சி நிர்வாகிகள் மத்தியில் நிலவி வருகிறது. இந்த சூழ்நிலையில், பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை எந்த தொகுதியில் போட்டியிடுவார் என்ற கேள்வி கட்சி தொண்டர்கள் மத்தியில் அதிகமாக எழுந்தது.
கோவை வடக்கு தொகுதி
குறிப்பாக கோவை வடக்கு தொகுதியில் போட்டியிட அவர் விருப்பம் தெரிவித்ததாகவும், அந்த தொகுதிக்காக அவரது ஆதரவாளர்கள் நீண்ட நாட்களாக பணியாற்றி வந்ததாகவும் கூறப்படுகிறது. ஆனால் கட்சி மேலிடம் அவரை மொடக்குறிச்சி தொகுதியில் போட்டியிட வலியுறுத்தியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுதொடர்பாக கட்சி நிர்வாகிகள் மற்றும் தேர்தல் பொறுப்பாளர்கள் இடையே நீண்ட நேர ஆலோசனைகள் நடைபெற்றதாகவும் கூறப்படுகிறது.
2026 தமிழக சட்டசபை தேர்தல்
சில தகவல்களின் படி, இந்த விவகாரம் குறித்து விடிய விடிய ஆலோசனைகள் நடைபெற்றதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில், அண்ணாமலை இந்த முறை சட்டப்பேரவை தேர்தலில் நேரடியாக போட்டியிடாமல் இருக்க முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதற்குப் பதிலாக, பாஜக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவாக மாநிலம் முழுவதும் தீவிர பிரசாரம் மேற்கொள்வேன் என்று அவர் கட்சி மேலிடத்திற்கு தெரிவித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
அண்ணாமலை போட்டியில்லை
அண்ணாமலை போன்ற முக்கிய தலைவரின் இந்த முடிவு கட்சி தொண்டர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக அவர் நேரடியாக தேர்தலில் களம் இறங்குவார் என்று எதிர்பார்த்திருந்த அவரது ஆதரவாளர்கள் இந்த தகவலை ஏற்றுக் கொள்ள முடியாமல் உள்ளதாக கூறப்படுகிறது. வேட்புமனு தாக்கல் செய்யும் கால அவகாசம் குறைந்து வரும் நிலையில், பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடு எப்போது வெளியாகும், அதில் அண்ணாமலையின் பெயர் இடம்பெறுமா? அல்லது அவர் உண்மையிலேயே போட்டியிடாமல் இருக்கிறாரா? என்ற கேள்விகள் தற்போது பாஜக வட்டாரங்களில் பெரும் விவாதமாக மாறியுள்ளது.












Click it and Unblock the Notifications